திங்கள், 16 டிசம்பர், 2019

தீ வைத்தார்கள், நாங்கள் அணைத்தோம்... வதந்தியை நம்பாதீர்கள்’- டெல்லி காவல்துறையின் பச்சை பொய்


டெல்லி காவல்துறை செய்தி தொடர்பாளர்.vikatan.com - ராம் பிரசாத் : போராட்டக்காரர்கள் ஆத்திரமூட்டும் வகையில் நடந்துகொண்டபோது நாங்கள் கட்டுப்பாடோடுதான் இருந்தோம் என டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நேற்று மாலை போலீஸார் நடத்திய தாக்குதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிய தாக்குதல் நடத்திய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓய்வறையில் மாணவர்கள் ரத்தக் காயங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாயின. காவல்துறையினரின் தாக்குதலால் பல்கலைக்கழக வளாகமே போர்க்களமானது.
நேற்று இரவு மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். போர்க் கைதிகளைப்போல் மாணவர்கள் கைகள் இரண்டையும் உயர்த்தியபடி பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறினர். நள்ளிரவில் வெளியேற்றுகின்றனர் எங்கே செல்வது என மாணவிகள் குரல் எழுப்பினர்.
நூலகம், விடுதி அறை என எல்லா இடங்களில் காவல்துறையினர் நுழைந்து தாக்கியுள்ளனர். மாணவர்கள் மட்டுமல்லாமல் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களையும் தாக்கியுள்ளனர். அவர்கள் கொண்டுவந்த சாதனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். போலீஸ் வாகனங்கள், பேருந்துகள் மீது தீவைத்ததால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பல்கலைக்கழகத்துக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என காவல்துறை தரப்பிலிருந்து விளக்கம் கூறப்படுகிறது. ஆனால், இணையத்தில் வெளியாகியுள்ள சில வீடியோக்கள் காவல்துறையினரின் முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துக்கு காவலர்களே தீவைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டெல்லி கலவரத்துக்கு காரணமே காவல்துறையினர்தான் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் டெல்லி காவல்துறை செய்தி தொடர்பாளர் பேசுகையில், ``ஜாமியா பல்கலைக்கழகம் சம்பவம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை அதிகாரிகள் யாரும் பேருந்தைக் கொளுத்தவில்லை. போராட்டத்தின்போது பேருந்துகள் கொளுத்தப்பட்டன. காவலர்கள் தீயை அணைக்கும் பணியைத்தான் செய்தனர். ஜாமீயா கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு விசாரிக்கும். பொதுமக்கள் யாரும் வதந்திகளுக்குச் செவி சாய்க்க வேண்டாம். வதந்திகளைப் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் கண்காணித்து வருகிறோம். நேற்று மதியம் 2 மணியளவில் போராட்டம் நடைபெற்றது. உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டக்காரர்கள் ஆத்திரமூட்டும் வகையில் நடந்துகொண்டபோது நாங்கள் கட்டுப்பாட்டோடுதான் இருந்தோம். 4.30 மணிக்கு சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துக்கு தீ வைத்தனர். இதைத் தடுக்கும் பணியை காவல்துறை மேற்கொண்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கல்லூரிக்குள் சென்றனர். அவர்களை விரட்டியே காவல்துறையினர் உள்ளே சென்றனர். போலீஸார் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். நேற்று நடந்த கலவரத்தில் 30 போலீஸார் காயமடைந்துள்ளனர். 2 பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது. காவலர் ஒருவர் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கலவரம் மற்றும் தீவைப்புச் சம்பவம் தொடர்பாக 2 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் இருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளானார்கள். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்

கருத்துகள் இல்லை: