சனி, 21 டிசம்பர், 2019

புதுவையில் இலவச அரிசிக்கு பதிலாக வங்கியில் பணம்-மத்திய உள்துறை உத்தரவு

 மாலைமலர் : புதுவையில் இலவச அரிசிக்கு பதிலாக இனி வங்கி கணக்கில்தான் பணம் செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி: புதுவையில் ரே‌ஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இலவச அரிசி கொள்முதலில் முறைகேடு நடப்பதாகவும், தரமான அரிசி வழங்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. விஜிலென்ஸ் விசாரணையும் நடந்து வருகிறது.
இதனையடுத்து கவர்னர் கிரண்பேடி இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இலவச அரிசியாக வழங்குவது எனவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் மாற்று கருத்து நிலவியதால் இலவச அரிசி விவகாரத்தை மத்திய அரசின் முடிவுக்கு கவர்னர் கிரண்பேடி அனுப்பி வைத்தார்.



இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், புதுவையில் இனி இலவச அரிசிக்கு பதிலாக பணமாக வழங்குவது தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறைஅமைச்சக கடிதத்தை மேற்கொள்காட்டி கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள தகவலில் மத்திய அரசின் முடிவு வரவேற்க்கதக்கது. இதன்மூலம், அரிசி விநியோகத்தில் ஊழல்முறைகள் தடுக்கப்படும்.
புதுவை அரசு கடந்த 43 மாதங்களில் 17 மாதங்கள் அரிசியாகவும், 10 மாதங்கள் பணமாகவும் வழங்கியுள்ளது. மீதமுள்ள 16 மாதங்கள் மட்டுமே வழங்கவில்லை. மத்திய அரசின் தற்போதைய அரிசிக்கு பதில் பணமாக கொடுக்க வேண்டும் என உத்தரவின் மூலம் இதுபோன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புதுவையில் 20 கிலோ அரிசி வாங்கும் சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.3.000 அரசு சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் நேற்று 10 கிலோ அரிசி வாங்கும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.1.500-ம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: