வெள்ளி, 20 டிசம்பர், 2019

சோனியா காந்தி : மக்களின் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் ...வீடியோ


nakkheeran.in - பா. சந்தோஷ் : நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.;
குறிப்பாக மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வட மாநிலங்களில் கலவரம் உச்சத்தில் உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று (20.12.2019) ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் கர்நாடகா மாநிலம் மங்களூரு மாநகரில் 2 பேர் உயிரிழந்தனர் என்று அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.  இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில் "குடியுரிமை சட்டம் குறித்து போராடும் மக்களின் குரல்களுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும். போராடும் மக்கள் மீதான அடக்கு முறைகளை அரசு கைவிட வேண்டும். ஜனநாயக நாட்டில் அரசின் தவறான திட்டங்களை எதிர்த்து போராட மக்களுக்கு உண்டு. குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டு மக்களிடையே பிரிவினையை உருவாக்குகிறது. நான் அரசியலுக்காக பேசவில்லை; அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காகவே பேசுகிறேன். மத்திய அரசின் செயல்கள் மக்களின் குரலை உதாசீனப்படுத்துவதாக உள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகளை காத்திட காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும்". இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

கருத்துகள் இல்லை: