வியாழன், 19 டிசம்பர், 2019

பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட மகளை சுமந்து சென்ற தந்தை.. உத்தர பிரதேசம் .. வீடியோ



 தினமலர் : லக்னோ: உ.பி.,யில் பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமியை சிகிச்சைக்கு அழைத்து வந்த தந்தை, மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் முதுகில் சுமந்து சென்ற பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே 15 வயது சிறுமி ஒருவரை, வீட்டின் அருகே வசிக்கும் 19 வயது இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். அவரிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது, சிறுமியின் கால் முறிந்தது. இதனையறிந்த சிறுமியின் தந்தை, போலீசில் புகார் அளித்தார். இளைஞரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
கால் முறிந்த சிறுமியை பெண் போலீஸ் உதவியுடன் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, ஸ்ட்ரெச்சர், வீல் சேர் எதுவும் இல்லாததால் தந்தையே தன் மகளை முதுகில் சுமந்து சென்றார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அம்மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி அஜய் அகர்வால் கூறுகையில், மாவட்ட அதிகாரிகளிடம் இந்த வசதிகளை ஏற்படுத்த கடிதம் அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, என்றார்.
மாவட்ட அதிகாரிகள் தரப்பில், அந்த மருத்துவமனை மாவட்ட சமூக நலன் அதிகாரி ரஷ்மி யாதவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களைக் கேளுங்கள், என அலட்சியமாக கூறினர்.
ரஷ்மி யாதவை கேட்டபோது, நான் இன்னும் என் பணியை தொடங்கவில்லை, என அலட்சியமாக பதிலளித்தார். அதிகாரிகள் ஒவ்வொருவரும் இவ்வாறு அலட்சியமாக பதிலளித்துள்ள நிலையில், அந்த மருத்துவமனையில் ஸ்கேன் கருவிகள் பழுதடைந்ததால், சிறுமியை வேறு மருத்துவமனைக்கு தந்தை அழைத்து சென்றார்.

கருத்துகள் இல்லை: