வெள்ளி, 20 டிசம்பர், 2019

குடியுரிமை திருத்தச் சட்டம்: போராட்டக்களமான மாநிலங்கள்!..Voice of America

;
மின்னம்பலம் : குடியுரிமை திருத்தச் சட்டம்: போராட்டக்களமான மாநிலங்கள்! குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. நேற்று நடைபெற்ற போராட்டங்களில் பெங்களூரு, குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தன. மங்களூருவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
மங்களூருவில் துப்பாக்கிச் சூடு
கர்நாடகாவில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஏற்கனவே 144 தடை விதிக்கப்பட்ட போதிலும், தடையையும் மீறி மங்களூரு, பெங்களூரு, டவுன் ஹால் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இதில் வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டார். மங்களூருவில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டபோது போலீசார் தடியடி நடத்தியது மட்டுமின்றி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் இருவர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அரசியல் கட்சிகளும், பொது மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.

காங்கிரஸ் தூண்டுதலின் பேரில்தான் போராட்டம் நடைபெறுவதாக அம்மாநில பாஜக குற்றம்சாட்டுகிறது. இருவர் உயிரிழப்பு குறித்துப் பேசிய மங்களூரு ஆணையர் ஹர்ஷா, “பந்தர் காவல் நிலையத்துக்குத் தீ வைக்க முயன்றபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இறந்தவர்கள் பெயர் ஜலீல் குட்ரொலி (43), நௌஷீன் பெங்கரீ (49) என்பது தெரியவந்துள்ளது. இங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார். இந்த நிலையில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
உத்தரப் பிரதேசம்
கர்நாடகாவைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் லக்னோவில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது, கண்ணீர்ப்புகை குண்டு வீசி போலீசார் போராட்டத்தைக் கலைக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட வன்முறையின்போது ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அம்மாநிலம் டிஜிபி ஓ.பி.சிங் கூறுகையில், “இந்த மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது தெரியவில்லை. போலீசார் துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை. போலீசார் நடவடிக்கையால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
அகமதாபாத்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போராட்டக்காரர்கள், போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 15க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக 32 பேரை கைது செய்துள்ளதாக அகமதாபாத் ஆணையர் அகமது பட்டியா தெரிவித்துள்ளார்.
போராட்டத்தை நிறுத்த வேண்டாம்
மற்ற மாநிலங்களைப் போல மேங்கு வங்கத்திலும் பல பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, இந்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டத்தை நிறுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார். “இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இந்தியர் என்று நிரூபிக்கச் சொல்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய மம்தா, பாஜக நாட்டை பிளவுபடுத்துகிறது. துணிச்சல் இருந்தால் மத்திய அரசு ஐ.நா கண்காணிப்பில் இந்தச் சட்டம் குறித்து வாக்கெடுப்பு நடத்தட்டும்” என்றார்.
டெல்லி
144 தடை, செல்போன் சேவை நிறுத்தம் என இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக இடதுசாரி முக்கியத் தலைவர்களான டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பிருந்தா காரத், நிலோத்பல் பாசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஜாமியா மாணவர்களுக்கு இடைக்கால நிவாரணம் கிடையாது
ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரிஸ்வான் மனுத் தாக்கல் செய்திருந்தார். நிவாரணம் கேட்டுப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி ஜாமியா வன்முறை தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி டி.என்.படேல், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எந்த ஓர் இடைக்கால நிவாரணமும் கிடையாது என்று உத்தரவிட்டு, இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கு பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
போராட்டத்துக்கு திமுக அழைப்பு
வரும் 23ஆம் தேதி திமுக சார்பில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாபெரும் பேரணி நடைபெறுகிறது. ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக நேரில் அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது பேரணியில் பங்கேற்குமாறு பல்வேறு கட்சிகள், விவசாய - வணிகர் - திரைத்துறை - ஆசிரியர் - தொழிற்சங்கங்களுக்கு அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார் அவர் எழுதிய கடிதத்தில், “எதிர்ப்பு பேரணியில் கட்சி, மதம், சாதி, மாநில எல்லைகளைக் கடந்து அனைவரும் பங்கெடுத்து ஜனநாயகக் குரல் எழுப்ப வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: