சென்னை: திஹார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியைப் கலைஞர் பார்ப்பதற்காக திமுக தலைவர் கலைஞர், தனது மனைவி ராஜாத்தி அம்மாள் மற்றும் பேரன் ஆதித்யாவுடன் டெல்லி செல்கிறார். அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
2ஜி ஊழல் வழக்கில் திமுக எம்பி கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டதையடுத்து சுமார் 6 மாதங்களாக திஹாரில் உள்ளார். ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரை ஜாமீனில் வெளியேவிட சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி லஞ்சப் பணம் கைமாறியதாக சிபிஐ கூறியுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் கலைஞர் டிவியின் ஒரு பங்குதாரர் என்ற அடிப்படையில் கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சமீபத்தில் சிபிஐ புதிய குற்றச்சாட்டை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் நம்பிக்கை துரோகம் செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரைசிறைத் தண்டனை கிடைக்கும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த குற்றச்சாட்டை கனிமொழி உள்ளிட்டோர் மறுத்துள்ளனர்.
இந்நிலையில் திமுக தலைவர் கலைஞர் தனது மகள் கனிமொழியைப் பார்க்க இன்று மாலை விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அவருடன் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளும், அவரது மகன் ஆதித்யாவும் செல்கின்றனர்.
அவர்கள் இன்று மாலை திஹார் சென்று கனிமொழியை சந்திக்கவிருக்கின்றனர்.
வரும் 24ம் தேதி முதல் 2ஜி வழக்கில் கைதாகியுள்ள கனிமொழி உள்ளிட்ட சிலரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தொடரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க கலைஞர் திட்டமிட்டுள்ளார். இதற்காக சோனியாவிடம் அபாய்ண்ட்மென்ட் கேட்டுள்ளார், கிடைத்தால் அவரை சந்திப்பார் என்று தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக