விக்கிரமபாகு கருணாரட்ன, ஏனைய தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் கொழும்பு, தெகிவளை-கல்கிசை, கொலொன்னாவை உள்ளூராட்சி மன்றங்களுக்காக போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோருக்கு பிரபல மனித உரிமை சட்டத்தரணியும், உறுதியுரை ஆணையாளருமான ஏ.சி.வெலியமுனவினால், சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்பட்ட நிகழ்வு இன்று (21-10-2011) சீ-நோர் விருந்தகத்தில் நடைபெற்றது.
இங்கு மேலும் உரையாற்றிய மனோ கணேசன்,
முக்கியமாக ஆளுகின்ற அரசாங்கத்தையும், பிரதான எதிர்கட்சியையும் எம்மை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றோம். இது தனிப்பட்ட மனோ கணேசனின் வெற்றியல்ல, தலைநகர தமிழர்களின் ஜனநாயக வெற்றி.
கொழும்பு மாவட்டத்தில் இன்றைய எமது 30,000 ஆயிரம் வாக்குகளை விரைவில் ஒரு இலட்சம் வாக்குகளாக மாற்றுவோம். அந்த இலக்கை நோக்கிய எமது வெற்றிப்பயணம் தொடர்கின்றது. எம்முடன் கரங்கோர்த்து பயணம் செய்ய விரும்புகின்றவர்கள் கட்சித் தலைமைக்கும், கொள்கைகளுக்கும் விசுவாசம்காட்டி எம்முடன் வரலாம்.
ஏதேனும் தடுமாற்றம் கொண்டவர்கள் இடைநடுவில் நின்றுவிடலாம். எம்முடன் பயணிக்கின்றவர்கள் மக்கள் மத்தியிலேயே அங்கீகாரம் பெறுகின்றார்கள். எம்மிடமிருந்து விலகியவர்கள் மக்களாலும் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் நேற்றைய, இன்றைய வரலாறு. நாளைய வரலாற்றிலே இடம்பெற்ற விரும்புபவர்கள் இன்று என்னுடன் கரங்கோர்த்துக்கொண்டுள்ளார்கள்.
கடந்த தேர்தல் பிரசாரங்களின் போது நடந்தது என்ன? பலருக்கு என்மீது சேற்றை வாரி வீசுவதுதான் முழுநேர தேர்தல் பிரசாரமாக இருந்தது. அரசாங்கம் எனக்கு கோடிக்கணக்காக கொட்டிக்கொடுத்துள்ளது என்று சொன்னார்கள். அரசாங்கத்துடன் எனக்கு இரகசிய ஒப்பந்தம் இருக்கின்றது என்று சொன்னார்கள். தேர்தல் முடிந்தவுடன் மனோ கணேசன் ஓடோடிச்சென்று அலரிமாளிகையிலே பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்துகொள்வார் என்றும் சொன்னார்கள்.
தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் எனக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை அச்சடித்து கொட்டாஞ்சேனை, பொரளை ஆகிய பகுதிகளிலே இரகசியமாக விநியோகித்தார்கள். பல்லாண்டுகளுக்கு முன்னர் அக்காலக்கட்டத்தின் அரசியல் நகர்வுகள் தொடர்பில் நான் ஒரு தனியார் தொலைக்காட்சியில் உரையாற்றியிருந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியை இறுவட்டில் பதிவு செய்து வெள்ளவத்தையிலும், பம்பலப்பிட்டியிலும் இரகசியமாக விநியோகம் செய்தார்கள்.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மனோ கணேசனை ஆதரிக்கமாட்டார் என்றுகூறி அதையும் எனக்கு எதிரான ஒரு பிரச்சனையாக மாற்ற முயற்சி செய்தார்கள். இவற்றை ஆளுங்கட்சியிலும், எதிர்கட்சியிலும் உள்ள பெரியவர்கள் முதற்கொண்டு சி;ல்லறைகள் வரை செய்தார்கள்.
இவர்கள் மத்தியில் எங்கள் கட்சியிலிருந்து அரசாங்கத்திற்கு தாவிய ஒரு நபரும், இதொகாவில் இருந்து ஐதேகவுக்கு தாவிய இன்னொரு நபரும் இதில் முன்னணி வகித்தார்கள். இவர்களது ஒரே நோக்கம் மனோ கணேசனையும், ஜனநாயக மக்கள் முன்னணியையும் அரசியலில் இருந்து அகற்றிவிடவேண்டும் என்பதாக மாத்திரமே இருந்தது.
இன்று என்ன நடந்துள்ளது? தலைநகர தமிழர்களின் மனங்களை புரிந்துகொள்ள முடியாத தவளை அரசியல் செய்கின்ற இந்நபர்கள் போட்டியிட வைத்த வேட்பாளர்கள் அனைவரும் ஆளுங்கட்சியிலும், எதிர்கட்சியிலும் படுதோல்வி அடைந்துள்ளார்கள். எம்மை தமிழர்கள் மகத்தான வெற்றியடைய செய்துள்ளார்கள்.
நான் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டதாக குற்றம்சாட்டியவர்களை கடவுளும் மன்னிக்கமாட்டார். தேர்தலை நடத்துவதற்கு கட்சி தலைவர் என்ற முறையில் பெரும் நிதி தேவை என்பது எனக்கு தெரியும். தேர்தலுக்கு ஒருவாரத்திற்கு முன் நான் நீண்டகாலமாக பாவித்து வந்த எனது தனிப்பட்ட வாகனத்தை விற்றுத்தான் தேர்தலை சந்தித்தேன். கொழும்பிலே எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் இருக்கின்றார்கள். இந்நண்பர்கள் என்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள்.
மனோ கணேசன் கழுதை சின்னத்தில் போட்டியிட்டாலும் எனக்கு ஆதரவளிப்பார்கள். தங்களை பகிரங்கமாக அடையாளங்காட்டிக்கொள்ளாத எனது இந்த தனிப்பட்ட நண்பர்கள்தான் எனக்கு மேலதிக நிதியை தேர்தலுக்காக சேர்த்துக்கொடுத்தார்கள். நல்லவனுக்கும், நல்ல நோக்கத்திற்கும் உதவி செய்தோம் என்ற மகிழ்ச்சி அவர்களுக்கும், நம்பிக்கையுள்ள நல்ல நண்பர்களை பெற்றுள்ளேன் என்ற மகிழ்ச்சி எனக்கும் இருக்கின்றது.
இந்த உரையை கேட்கின்றவர்களும், ஊடகங்களில் வாசிக்கின்றவர்களும் இதை புரிந்துகொள்ள வேண்டும். என்னையும் என் கொள்கையையும் விலைபேசி விற்று அரசியல் நடத்தவேண்டும் என்றால் மனோ கணேசன் ஐந்து வருடங்களுக்கு முன்னாலேயே கபினட் அமைச்சராகி, கோலோச்சியிருக்க முடியும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தொலைபேசியில் என்னை அழைத்து எமது வெற்றிகளுக்காக எனக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். கட்சி போதங்களுக்கு அப்பாற்பட்ட நாகரீக அடிப்படையில் அவருக்கு நான் எனது நன்றிகளை தெரிவித்தேன். தொலைபேசியில் பேசியதற்காக ஓடோடிவந்து அரசாங்கத்தில் நான் இணைந்துகொள்ளமாட்டேன் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.
எனவே அதை எதிர்பார்த்து அவரும் எனக்கு அழைப்பை விடுக்கவில்லை என்று எனக்கும் நன்றாக தெரியும். இதை இங்கே சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. நாம் தனித்துவமாக எங்களது சொந்த காலில் நிற்கவேண்டும். அப்போதுதான் மாற்றார்களும் எங்களை மதிப்பார்கள். இதுதான் எங்களது சுயமரியாதையும், தன்மானமுமாகும். இப்பெருமை அனைத்தும் என்னை நம்பி வாக்களித்த தமிழ் மக்களையே சேரவேண்டும் எனக் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக