வியாழன், 20 அக்டோபர், 2011

ஜெயலலிதா விசாரணை: கோர்ட்டில் நிஜமாக என்னதான் நடந்தது?


Viruvirupu

பெங்களூரு, இந்தியா: ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தபடி கிரிமினல் கேஸ் ஒன்றில் குற்றவாளியாக ஒன்றுக்காக கோர்ட் படி ஏறுவது, எந்தவொரு அரசியல்வாதிக்கும் அவமானகரமான அனுபவம்தான். அந்த வகையில், இறுக்கமான முகத்துடனேயே கோர்ட்டுக்குள் இன்று பிரவேசித்தார் ஜெயலலிதா.
இன்று ஜெயலலிதா ஆஜராகும்போது, கோர்ட் நடவடிக்கைகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதை பல மீடியாக்கள் இஷ்டத்துக்கு ஊகித்து வெளியிட்டிருந்தன. ஆனால், கோர்ட் இன்று எப்படி இயங்கப் போகின்றது என்பதில் எந்த ரகசியமும் இருக்கவில்லை. ஜெயலலிதா கோர்ட்டுக்கு வருவதற்கு முன்னரே, இன்று நடக்கப்போவது என்ன என்பதை தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
புரொசிகியூட்டிங் லாயர் சந்தேஷ் சௌத்தா, தன்னிடம் கேள்வி கேட்டவர்களுக்கு நிதானமாகவே கோர்ட் நடைமுறைகளை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார்.“இன்று கோர்ட்டில் நடைபெறவுள்ளது வழக்கின் இறுதிக் கட்ட நடைமுறை. குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா இல்லையா என்பது பற்றிய விசாரணை அல்ல. கோர்ட்டைப் பொறுத்தவரை குற்றவாளியின் குற்றம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவை தொடர்பான முடிவுகளுக்கு குற்றம் சாட்டும் தரப்பு எப்படி வந்தது என்பதை குற்றவாளிக்கு அறிவிக்க வேண்டிய நடைமுறைதான் இன்று நடைபெறவுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் (ஜெயலலிதா) குற்றவாளிதான் என்று கோர்ட் ஏற்றுக் கொள்ளும் ஆதாரங்கள் தொடர்பாக குற்றவாளி என்ன சொல்கிறார் என்பதை ஜெயலலிதா பதிவு செய்ய இன்று வாய்ப்பு கொடுக்கப்படவுள்ளது. கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதன்மூலம் தனது நிலைப்பாட்டை அவர் பதிவு செய்து கொள்ளலாம்.
நாளைக்கே தீர்ப்பு வழங்கப்படும்போது, இந்தக் குற்றங்கள் பற்றியோ, ஆதாரங்கள் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது என்று குற்றவாளி (ஜெயலலிதா) சொல்ல முடியாதபடி, புரொசிகியூஷன் தரப்பு கேள்விகள் அமைந்திருக்கும்” என்று முன்கூட்டியே விளக்கம் கொடுத்திருந்தார் அவர்.
கோர்ட்டுக்குள் ஜெயலலிதா பிரவேசித்தபோது, அவர் அமர்ந்து பதில் சொல்லும் விதத்தில் சேர் போடப்பட்டுள்ளது என்ற விபரத்தை, அவரது வக்கீல் அவரிடம் தெரிவித்தார். ஜெயலலிதா அதற்கு பதில் ஏதும் கூறாமல் தலையை மாத்திரம் அசைத்து ஏற்றுக் கொண்டார்.
நீதிபதி மல்லிகார்ஜூனய் அமரவுள்ள ஆசனத்துக்கு முன்னால் சிறிது இடைவெளிவிட்டு, இடப்புறமாக ஜெயலலிதாவுக்கான ஆசனம் போடப்பட்டிருந்தது. “இந்த ஆசனத்தில் அமர்ந்து பதில் கூறுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?” என்ற கேள்வி சம்பிரதாயமாக ஜெயலலிதாவிடம் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டது.
அதற்கு “ஆம்” என்று பதில் கொடுத்தார் அவர்.
இந்த வழக்கின் மற்றைய குற்றவாளிகளான சசிகலா, இளவரசி ஆகியோருக்கு கோர்ட் அறையில் ஒரு ஓரமாக ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. அவர்களாகச் சென்று அவற்றில் அமர்ந்து கொண்டனர்.
பரீட்சை வினாத்தாள் போல மொத்தம் எத்தனை கேள்விகளை அரசு வக்கீல் ஆச்சார்யா தயாரித்து வைத்திருந்தார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகியிருந்தன. நிஜத்தில் அப்படியல்ல.. புரொசிகியூஷன் தரப்பின் கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளிக்க முட்பட்டால், அது தொடர்பாக வேறு கேள்விகளும் அந்த இடத்திலேயே கேட்கப்பட்டன.
ஜெயலலிதாவிடமிருந்து “தெரியாது” என்ற பதில் வந்தால் மாத்திரம், அடுத்த கேள்விக்கு சென்றார்கள். சில கேள்விகளுக்கு ஜெயலலிதாவின் வக்கீல் கொடுக்கும் பதிலும் பதிவு செய்யப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது. மதிய உணவுக்காக கோர்ட் கலைந்தபோது வெளியே வந்த ஜெயலலிதா, அவருக்காக சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட வேனுக்குள் அமர்ந்து தனது மதிய உணவை முடித்துக் கொண்டார்.
மீண்டும் கோர்ட் தொடங்கியபோது, “கேள்விகள் இன்று மாலையுடன் முடிவடைந்துவிடுமா?” என்று ஜெயலலிதாவின் வக்கீல் கேட்டார்.
“அது நீங்கள் கூறும் பதில்களைப் பொறுத்தது” என்ற பதிலே அவருக்கு கிடைத்தது.
மாலை 4 மணி வரை விசாரணை தொடர்ந்தது. மீதிக் கேள்விகளுக்கு பதில்கூற ஜெயலலிதா நாளையும் (வெள்ளிக்கிழமை) கோர்ட்டுக்கு வரவேண்டியிருக்கும் என்று அப்போது அவருக்கு கூறப்பட்டது. அதற்கு ஜெயலலிதா பதில் ஏதும் கூறவில்லை. அவரது வக்கீல் மாத்திரம் “யெஸ்” என்று ஒரு சொல்லில் பதில் அளித்தார்.
கோர்ட் வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, “கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் ‘எனக்கு தெரியாது’ என்று ஜெயலலிதா பதில் அளித்திருந்தால், நாளை வரவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆனால், வழக்கின் தீர்ப்பு வெளியாகும்போது ஜெயிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
இது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடிய கேள்விகளுக்கு, பதில்களைக் கூறி, கோர்ட் பதிவுகளில் இடம்பெறச் செய்துள்ளார்கள். சாதகமற்ற கேள்விகளுக்கு ‘தெரியாது’ என்ற பதிலைக் கொடுத்தனர். ‘தெரியாது’ என்ற பதில்கள் கேஸில் இருந்து தப்ப வைக்காது, அப்பீலுக்கு மாத்திரமே உபயோகமாகும்” என்றார்.
ஜெயலலிதாவின் தனி விமானம் நாளையும் பெங்களூரூவுக்கு ட்ரிப் அடிக்க வேண்டியுள்ளது என்பதுதான் தற்போதைய நிலவரம்.
-பெங்களூருவிலிருந்து ஷீமா தத்தின் குறிப்புகளுடன், ரிஷி.

கருத்துகள் இல்லை: