வியாழன், 20 அக்டோபர், 2011

அஞ்சாநெஞ்சரை மதுரையில் ‘அஞ்ச வைக்கும்’ சில ஏற்பாடுகள்!


 லோக்கல் தி.மு.க. பிரமுகர்கள், “அண்ணனை வேறு எந்தக் கேஸில் சிக்க வைத்தாலும், நில அபகரிப்பு கோஸில் மாத்திரம் சிக்க வைக்க முடியாது” என்று மதுரையில் மார்தட்டிக் கொண்டு இருந்தாலும், அண்ணன் நில அபகரிப்பு விவகாரங்களில் லேசாக மாட்டிக்கொண்டுதான் உள்ளார். இங்கு குறிப்பிடப்படும் அண்ணன் யார் என்று சொல்ல தேவையில்லாதபடி, தி.மு.க.வினருக்கு மதுரையில் ஒரு அண்ணன், அழகிரிதான்.
கோவில் நிலம் ஒன்று இதோ.. அதோ.. என்று மாயமான்போல அண்ணிக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தாலும், இன்னமும் அது ஃபுல் ஃபோர்ஸில் கோர்ட்டுக்கு வரவில்லை. காந்தி அழகிரியை அதில் சிக்க வைக்க தேவையான வாக்குமூலம் பெறுவதில் ‘ஏதோ’ சிக்கல் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

சிக்கலை நிவர்த்தி செய்வதில் மதுரை போலீஸ் முழுமூச்சாக முயற்சி செய்வதாகவும் ஒரு பேச்சு உண்டு.
அது கோர்ட் விவகாரம். அண்ணன் லேசாக மாட்டிக்கொண்டு இருப்பது வேறு இரு விவகாரங்களில். முதலாவது, தயா இன்ஜினீயரிங் கல்லூரிக்காகக் கண்மாய் மடையை ஆக்கிரமித்த விவகாரம். (அண்ணன் 5 வருடங்களாக மதுரையையே ஆக்கிரமித்து வைத்திருந்தார். வெறும் கண்மாய் மடையை ஆக்கிரமிப்பது பெரிய விஷயமாக போச்சா? என்று எகிறாதீர்கள்)
இந்த விவகாரம் அழகிரிக்கு போலீஸ், நீதிமன்றம் என்ற ரூட்டில் வராமல், சுற்றுப் பாதையால் வந்து சேர்ந்தது. மதுரை கலெக்டர் சகாயம், “நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கவும்” என்று மு.க.அழகிரிக்கு வரவேற்பு மடல் அனுப்பி இருந்தார். அண்ணன் பிசியாக உள்ளதால், நேரில் ஆஜராக இன்னமும் வேளை வரவில்லை.
இந்த விவகாரம் ஸ்லோ பாய்ஸன் போல என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். தற்போது கலெக்டர் மூலமாக ஹான்டில் பண்ணப்படும் இந்த கண்மாய் கேஸ், அழகிரி விளக்கம் கொடுக்காவிட்டால், அல்லது, அழகிரியின் விளக்கம் திருப்தி ஏற்படும் வகையில் இல்லாவிட்டால், போலீஸ் கேஸாக மாறும் என்கிறார்கள் அவர்கள்.
இரண்டாவது விவகாரம்தான் தற்போது டாக் ஆஃப் தி டவுன்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகேயுள்ள நிலத்தில், ஐ.டி. கட்டிடம் ஒன்றை கட்டத் தொடங்கினார் அழகிரி. ‘தயா சைபர் பார்க்’ என்பதுதான் அதன் பெயர். மதுரை ஸ்டான்டர்டுக்கு கொஞ்சம் பெரிய பில்டிங் அது. ஆனால், கட்டி முடிந்து முழுமையாகச் செயற்பட முன்னர், ஆட்சி மாறிவிட்டது. அத்துடன் எல்லாமே தலைகீழாகி விட்டன.
அண்ணன் ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுகிறார் என்றால், அதைச் சுற்றியுள்ள நிலங்களிலும் கை வைப்பார் என்பது மதுரையில் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.  இந்த தயா சைபர் பார்க்கிலும் அதற்கு அருகே உள்ள தனியார் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களைச் சேர்த்துதான் காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு உள்ளதாக இப்போது புகார்!
இந்த விவகாரமும் போலீஸ்வரை இன்னமும் போகவில்லை. கலெக்டர் மட்டத்திலேயே ஹான்டில் பண்ணப் படுகின்றது.
சமீபத்தில் மதுரை கலெக்டர் சகாயம், மாநகராட்சி ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘தயா சைபர் பார்க் கட்டடம் கட்டப்பட்டுள்ள 1.20 ஏக்கர் நன்செய் நிலம் அழகிரி பெயரில் இருக்கிறது. இது தவிர, மேலும் 14 சென்ட் தனியார் நன்செய் நிலமும், 8 சென்ட் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான வண்டிப் பாதைப் புறம்போக்கு நிலமும் வளைக்கப்பட்டு கம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு உள்ளது.
சம்மந்தப்பட்ட வண்டிப் பாதைப் புறம்போக்கு நிலத்தை மாநகராட்சி, தனியார் யாருக்காவது குத்தகைக்கு விட்டுள்ளதா என்பதைத் தெரிவிக்கவும். அப்படி இல்லாவிட்டால், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவும்’ என்று கிளீன் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து இருக்கிறார்.
இவர்கள் இங்கு குறிப்பிடும் வண்டிப் பாதைப் புறம்போக்கு நிலத்தில்தான், தயா சைபர் பார்க்கின் டிரான்ஸ்ஃபார்மரை அழகிரி தரப்பு அமைத்துள்ளதாகத் தெரிகின்றது.
இது வெளிப்படையாகத் தெரியும் விவகாரம். ஆனால், உள்ளே வேறு சில ஏற்பாடுகளும் நடப்பதாகச் சொல்கிறார்கள்.
அழகிரி தரப்பு, கடந்த தி.மு.க. ஆட்சி நடக்கும்போது கட்டிய கட்டிடம் இது என்பதால், கட்டுமான வேலைகள் நடக்கும்போதே கண்களை மூடிக்கொண்டு பல விஷயங்களைச் செய்திருப்பார்கள் என்பதை யாரும் ஊகித்து விடுவார்கள். இதற்கு எடுக்கப்பட்ட பல்வேறு லைசென்ஸ்களில் இருந்து, கட்டுமானப் பணிகளின்போது பயன்படுத்தப்பட்ட மின்சாரம், மாநகராட்சிக்கு சொந்தமான கன்ஸ்ட்ரக்ஷன் வாகனங்கள் என்று பல விஷயங்கள் தாராளமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.
அவற்றையெல்லாம் பட்டியல் போட்டு துருவத் தொடங்கியுள்ளார்கள் அதிகாரிகள் என்று தெரியவருகின்றது.
காரணம் என்னவென்றால், இந்த விவகாரம் கோர்ட்டுக்கு போகும்போது, வெறும் நில ஆக்கிரமிப்பு என்ற ஒரே குற்றச்சாட்டு என்று இருந்தால், கம்பவுண்டு சுவர் மற்றும் தயா சைபர் பார்க்கின் டிரான்ஸ்ஃபார்மரை இடிப்பதுடன் கதை முடிந்துவிடும். தற்போது அதிகாரிகள் துருவத் தொடங்கியுள்ள விஷயங்கள் கிடைத்தால், அதிகார துஷ்பிரயோகம் என்ற திசையில் கேஸ் மாற்றமடையும்!
இப்போதெல்லாம் அரசியல் விஷயங்களில் அஞ்சாநெஞ்சர் அநியாயத்துக்கு அமைதி காப்பதற்கும், இப்படியான விவகாரங்களுக்கும் கனெக்ஷன் இருக்கலாம்!
-மதுரையிலிருந்து அதிபன் தங்கராசுவின் குறிப்புகளுடன், ரிஷி.

கருத்துகள் இல்லை: