வியாழன், 20 அக்டோபர், 2011

கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!பிஸினஸ் கிளாஸுக்கு வசூல் சலுகைக் கட்டணத்தில் பயணம்


Kiran Bedi
டெல்லி: அரசு தரும் சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம் செய்யும் கிரண்பேடி, தன்னை அழைப்பவர்களிடம் முழுக் கட்டணத்தையும் வசூலித்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
ஹஸாரே குழுவில் முக்கிய அங்கம் வகிப்பவர் கிரண் பேடி. ரமோன் மக்சாசே விருதுபெற்றவர். இந்திய அரசின் உயர்ந்த கேலன்டரி விருதை குடியரசுத் தலைவரிடம் பெற்றவர். இதனால் அவர் வாழ்நாள் முழுவதும் சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்ள அரசு வகை செய்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி விருப்ப ஓய்வு பெற்று, டீம் அன்னா பெயரில் டிவிக்களில் குழாயடிச் சண்டை நடத்தி வருகிறார். ஹஸாரேவின் கூட்டங்களில் இவர்தான் பிரதான பேச்சாளர். ஊழலை எதிர்ப்பு என்ற பெயரில், இவரது பேச்சில் தெறிக்கும் அராஜகமும் சர்வாதிகார மனோபாவமும் பலரையும் முகம் சுழிக்க செய்து வரும் நிலையில், கிரண் பேடியின் அல்பத்தனத்தை தோலுரித்துக் காட்டியுள்ளன ஆங்கில நாளிதழ்கள்.

ஓய்வில் உள்ள கிரண் பேடியை, பல்வேறு என்ஜிஓக்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பொரேட் நிறுவனங்கள் சொற்பொழிவாற்ற அழைக்கின்றன.

இந்த சொற்பொழிவுக்காக அவருக்கு பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட், ஐந்து நட்சத்திர தங்குமிடம் என சகல வசதிகளும் செய்து தருகிறார்கள். தனி அன்பளிப்புகளும் உண்டு.

ஆனால் கிரண்பேடியோ, இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தனக்கு அரசு வழங்கும் சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம் செய்துள்ளார். ஆனால், தனியார் அமைப்புகளிடமிருந்து முழுக் கட்டணத்தையும் வசூலித்துள்ளார். அதுமட்டுமல்ல, பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு, எகானமி வகுப்பில் பயணம் செய்துள்ளார்.

கிரண்பேடி கேலன்டரி விருது பெற்றவர். இவருக்கு அனைத்து ஏர் இந்தியா விமானங்களிலும் 75 சதவீத சலுகை வழங்கப்படும். இவரது கேலன்டரி விருது எண் 433. இந்த சலுகையை முழுதாக அனுபவிக்கும் கிரண்பேடி, பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்டுக்கான பணத்தை முழுவதுமாகப் பெற்று வந்துள்ளார் பல ஆண்டுகளாக.

அவர் பயணம் செய்த எகானமி விமான டிக்கெட்டுகள், என்ஜிஓக்களிடம் பிஸினஸ் கிளாஸுக்காக பணம் வசூலித்ததற்கான ரசீதுகள் என 12-க்கும் மேற்பட்ட ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. கடைசியாக கடந்த செப்டம்பர் 29-ம் தேதி, இதுபோல பயணம் செய்து அதிகப்படியாக கட்டணத்தை வசூலித்துள்ளார் கிரண் பேடி.

2006-ம் ஆண்டு இவர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் இருந்தபோதே இதுபோன்ற ஏமாற்று வேலையைச் செய்துள்ளார். அரசு அதிகாரியான இவர், இதுபோல செய்திருப்பது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். நேரடியாக லஞ்சம் பெற்றதற்கு சமமான இந்தக் குற்றச்சாட்டுக்கு பிசிஏ எனப்படும் அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு சட்டப்படி தண்டனை உண்டு!

இந்த டிக்கெட்டுகள் மற்றும் பில்களுக்கான தொகையை கிரண் பேடி, தான் தலைவராக உள்ள இந்தியா விஷன் பவுண்டேஷன் பெயரில் காசோலைகளாகப் பெற்றுள்ளார். இவரது கணக்காயர் வியாஸ் இதுகுறித்துக் கூறுகையில், கிரண்பேடி தனது சொற்பொழிவுகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு வசூலித்த தொகையை விட மிகக் குறைவாகத்தான் செலவிட்டுள்ளார். இதனால் அவரது கணக்கு பொருந்தி வரவில்லை. ஆனால் இது ஒரு சேமிப்பாக காட்டப்பட்டுள்ளது, என்றார்.

கிரண்பேடியின் தில்லு முல்லு - சில ஆதாரங்கள்:

செப்டம்பர் 29, 2011: டெல்லி - ஹைதராபாத் பயணம் - ஏர் இந்தியா ஃப்ளைட் எண் ஏஐ 560- எகானமி க்ளாஸ். அடுத்த நாள் ஏஐ 539 விமானத்தில் டெல்லி திரும்பியுள்ளார். இதற்கு அவர் செலவிட்ட தொகை ரூ 17134 மட்டுமே.

ஆனால் கிரண்பேடி கணக்கு காட்டியுள்ள தொகை ரூ 73,117!

டெல்லி - ஹைதராபாத் - சென்னை விமானத்தில் வந்த கிரண் பேடி, மீண்டும் டெல்லி - சென்னை - டெல்லி விமானத்தில் திரும்பியுள்ளார். சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்த அவர், பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்டுக்கான முழுத் தொகையை வசூலித்துள்ளார்.

மே 30, 2011: டெல்லி - புனே கிங்பிஷர் விமானத்தில் பயணம் செய்த அவர், ஜெட் ஏர்வேஸில் திரும்பியுள்ளார். இதற்கு மொத்த பயணக் கட்டணம் ரூ 12458. ஆனால் கிரண்பேடி வசூலித்துள்ளது ரூ 26386.

நவம்பர் 25, 2010: டெல்லி - மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்ற அவர் அடுத்த நாள் ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார். இதற்கான பயணக் கட்டணம் ரூ 14097. கிரண்பேடி வசூலித்த தொகை ரூ 42109.

2009, 2008, 2007 மற்றும் 2006-ம் ஆண்டுகளிலும் இதுபோல பல முறை சிக்கன வகுப்பில் பயணித்த கிரண்பேடி, தான் செலவழித்ததை விட 5 மடங்கு அதிக தொகையை வசூலித்துள்ளார்.

ஊழல் ஒழிப்பு பற்றி வாய்கிழிய பேசும் கிரண் பேடி, தனக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்த அளவு முறைகேடு செய்துள்ளது எந்த வகையில் சேரும் என கேள்வி எழுப்பியுள்ளனர் ஹஸாரே எதிர்ப்பாளர்கள்.

கருத்துகள் இல்லை: