புது தில்லி, அக். 20: 2ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்பட 17 பேர் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கிறது. இந்த உத்தரவின் அடிப்படையிலேயே கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவரும். புதிய குற்றச்சாட்டு: 2ஜி அலைக்கற்றை வழக்கில் கடந்த மாதம் 26-ம் தேதி இந்திய தண்டனைச் சட்டம் 409-ம் பிரிவின் கீழ் நம்பிக்கை மோசடி எனும் புதிய குற்றச்சாட்டை சி.பி.ஐ. பதிவு செய்தது. இதில் ராசா மட்டும் இன்றி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் சேர்க்கப்பட்டனர். இந்தக் குற்றச்சாட்டு தாக்கலாகும் முன்னர் கனிமொழிக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது, புதிய குற்றச்சாட்டால் கனிமொழி உள்பட அனைவருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் நாளை உத்தரவு: இந்த வழக்கில் ராசா, கனிமொழி உள்பட 17 பேர் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகளை இறுதி செய்து நீதிபதி ஓ.பி.சைனி சனிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கிறார். சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என்று நீதிபதி கருதினால் அந்தக் குற்றச்சாட்டை பதிவு செய்யலாம். குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை என்றால் குறிப்பிட்ட குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிடலாம். புதிய குற்றச்சாட்டுக்கான 409 பிரிவு (நம்பிக்கை மோசடி) உத்தரவையும் அன்றைய தினம் நீதிபதி பிறப்பிக்கிறார். புதிய குற்றச்சாட்டை உறுதி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தால், சாட்சி விசாரணை தொடங்கும். வழக்குரைஞர் விளக்கம் ""கனிமொழி மீது 409- வது பிரிவின் கீழ் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை அவர் மீது பதிவு செய்ய எவ்வித முகாந்திரமும் கிடையாது. இதற்கு ஏதுவாக பல முன் உதாரணங்களை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் எடுத்து வைத்துள்ளோம். கனிமொழி மீது நீதிபதி சனிக்கிழமை பிறப்பிக்கும் உத்தரவு இறுதியானது அல்ல. அதை எதிர்த்து சாட்சி விசாரணையின்போது எங்கள் வாதங்களை எடுத்து வைப்போம்'' என்று கனிமொழி சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக