‘ஒவ்வொரு இந்தியருக்குள்ளும் ஒரு காந்தியும் அம்பேத்கரும் மேலாதிக்கத்துக்காகப் போட்டியிடுகிறார்கள்.’ ராமச்சந்திர குஹாவின் இந்த வாக்கியம் உண்மையானது. ஆனால், தன் கட்டுரையை நிறைவு செய்யும்போது அவர் முற்றிலும் எதிரான திசையில் நகர்ந்து செல்கிறார். அம்பேத்கரும் காந்தியும் ‘அவர்கள் வாழ்ந்த காலத்தில், அரசியல் ரீதியில் ஒருவருக்கொருவர் எதிரானவராக இருந்தனர். பல பத்தாண்டுகள் கழிந்த நிலையில், இன்று நாம் அவர்கள் பங்களிப்பை ஒன்றை நிறைவு செய்ய இன்னொன்று என்ற வகையில் அணுகமுடியும்.’ ராமாயணத்துக்கு ஒரு கதாநாயகன் இருந்தால் போதும். ‘வரலாற்றுக்கு அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இல்லை. தலித் விடுதலையின் வரலாறு இன்னும் நிறைவடையவில்லை. அதில் எழுதப்படாத பாகங்கள் பல உள்ளன. பல கதாநாயகர்களுக்கு அங்கே இடம் இருக்கிறது.’
அதாவது, தலித் விடுதலை வரலாற்றில் அம்பேத்கருக்கு உரிய இடம் இருப்பது போல், காந்திக்கும் ஓரிடம் உண்டு என்கிறார் ராமச்சந்திர குஹா. அல்லது கொடுக்கப்படவேண்டும் என்கிறார். இடம் கொடுப்பதைப் பற்றிப் பின்னர் யோசிப்போம்.
அதற்கு முன்னால், காந்தியையும் அம்பேத்கரையும் ஒரு புள்ளியில் குவிப்பது சாத்தியமா என்பதைப் பார்க்கலாம். ராமச்சந்திர குஹா மட்டுமல்ல, பல காந்தியவாதிகள் இந்த இணைப்பைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். எதிரெதிரான கருத்துகளும் கொள்கைகளும் கொண்டிருந்தாலும் அடிப்படையில் இருவரும் ‘தேச நலனுக்காக’ உழைத்தவர்களே என்றும் ‘தீண்டாமைக்கு’ எதிராகப் போராடியவர்களே என்றும் ‘தலித் விடுதலைக்காகக்’ கனவு கண்டவர்களே என்றும் நிரூபிக்க இவர்கள் முயன்று வருகிறார்கள்.
காந்திக்கு நிகரானவராக அம்பேத்கரை நிறுத்துவதில் இவர்களுக்குச் சிக்கல்கள் எதுவுமில்லை. ஆனால், அம்பேத்கருக்கு நிகராக காந்தியைக் கட்டி எழுப்புவதில் பல சங்கடங்கள் உள்ளன. உதாரணத்துக்கு ‘தலித் விடுதலை வரலாற்றில் இடம் கொடுப்பது’ சம்பந்தமான விஷயம். தீண்டப்படாதவர்களின் விடுதலைக்கான அம்பேத்கரின் முனைப்பும் காந்தியின் முனைப்பும் ஒன்றா? தீண்டப்படாதவர்கள் குறித்த அம்பேத்கரின் பார்வையும் காந்தியின் பார்வையும் ஒன்றா? அவர்கள் இந்நிலைக்கு ஆளானதற்கான காரணங்களை அம்பேத்கரும் காந்தியும் ஒன்றுபோல் புரிந்துகொண்டார்களா? இந்த நிலை மாறவேண்டும் என்று இருவரும் ஒன்றுபோல் சிந்தித்தார்களா? என்ன மாற்று என்பது குறித்து இருவரிடையே கருத்து ஒற்றுமை நிலவியதா?
ஆம் என்று திட்டவட்டமாக காந்தியவாதிகளால் சொல்லமுடியாது என்பதால் அவர்கள் ஒரு மாற்று உபாயத்தைக் கையாள்கின்றனர். காந்தியை அம்பேத்கர் அளவுக்கு உயர்த்தமுடியாது என்பதால் அம்பேத்கரை காந்தி உயரத்துக்குக் குறுக்கிவிடுகிறார்கள். அம்பேத்கரின் உயரம் இதுதான் என்று நிர்ணயிப்பது. பிறகு காந்தியை அருகில் நிற்க வைத்து, பாருங்கள் இருவரும் ஒன்றுதான் என்று முழங்குவது. முடிந்தால் இன்னும் சில படிகள் முன்னேறி, அம்பேத்கர் தலித்துகளுக்காக மட்டுமே பாடுபட்டார், ஆனால் காந்தி ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் உழைத்தார் என்று அறைகூவல் விடுப்பது. அம்பேத்கரை தலித் குழுவின் தலைவராக மட்டும் குறுக்கிக் காட்டுவது. அதன்மூலம், தலித் வரலாற்றின் எழுதப்படாத பக்கங்களில் காந்தியைப் போட்டு நிரப்புவது.அம்பேத்கர் ஓரிடத்தில் (The Annihilation of Caste) தனக்கும் காந்திக்கும் இடையில் உள்ள ஓர் அடிப்படை வேறுபாட்டைக் குறிப்பிடுகிறார். ‘நான் சாதி அமைப்பைத் தகர்த்தெறிய விரும்பினேன். காந்தி அந்த அமைப்பைச் சீர்திருத்த விரும்பினார்.’ கடவுளின் குழந்தைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள், அவர்களை ஒதுக்கிவைக்காதீர்கள் என்று சாதி இந்துக்களிடம் இறைஞ்சுவதைத் தாண்டி வேறு எதுவும் செய்யமுடியவில்லை காந்தியால். அம்பேத்கர் அவர்களை இந்துக்களின் பிடியில் இருந்தும் சாதியின் பிடியில் இருந்தும் விடுவிக்கத் துடித்தார். காந்தி தனது குழந்தைகளைக் கடைசிவரை குழந்தைகளாகவே வைத்துக்கொள்ள விரும்பினார். அம்பேத்கர் அவர்களுடைய அறியாமையையும் பிற்போக்குத்தனத்தையும் களைய விரும்பினார். இறந்த விலங்குககளை உண்ணாதீர்கள், இந்துக்களின் கடவுள்களை வணங்காதீர்கள், இந்துக்களின் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள் என்று எச்சரித்தார்.
இந்தியர்களை மீட்டெடுக்க ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதியாக காந்தி பிரிட்டிஷிடம் போராடிக்கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியான அம்பேத்கர், சாதி இந்துக்களிடம் இருந்து தலித் மக்களை மீட்டெடுக்கப் போராடிக்கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசியல் உரிமை வழங்காமல், அவர்களுக்கு அதிகாரத்தை வழங்காமல், சுயமரியாதை உணர்வைத் தட்டியெழுப்பாமல் அவர்களை இழிநிலையில் இருந்து மீட்கமுடியாது என்று அம்பேத்கர் உணர்ந்திருந்தார். தனி வாக்குரிமையும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் வேண்டும் என்னும் முடிவுக்கு அவர் வந்து சேர்ந்தார். அதெல்லாம் தேவையில்லை, கடவுளின் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் இணைந்திருக்கட்டும் என்றார் காந்தி. அவர்களைத் தனியே பிரிக்கவேண்டாம் என்றார். தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லர் என்று சொல்வது தன்னைக் காயப்படுத்துகிறது என்றார். தன் உயிரைக் கொடுத்தேனும் அவர்கள் வெளியேற்றத்தைத் தடுப்பேன் என்றார்.
நான் ஒட்டுமொத்த இந்தியர்களின் விடுதலையை லட்சியமாகக் கொண்டிருக்கிறேன் என்றார் காந்தி. ஒட்டுமொத்த இந்தியர்களின் பிடியில் இருந்து தாழ்த்தப்பட்டவர்களை மீட்பதே என் லட்சியம் என்றார் அம்பேத்கர். தீண்டாமை ஒரு நோய், எப்பாடுபட்டாவது அதை அகற்றவேண்டும் என்றார் காந்தி. இந்த எளிய ஒப்புதலுக்கே அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள். அதெப்படி சாதி இந்துக்களை நீங்கள் குற்றவாளியாக்கலாம் என்று எதிர் கேள்விகள். இந்து மதத்தை அழிக்காமல் சாதியை ஒழிக்கமுடியாது. சாதி ஒழியாதவரை தீண்டாமை ஒழியாது என்றார் அம்பேத்கர். நீங்கள் நோயைக் குணப்படுத்த விரும்பவில்லை, அதன் அறிகுறிகளுக்கு மட்டுமே வைத்தியம் செய்கிறீர்கள் என்று பதிலளித்தார் அம்பேத்கர்.
தாழ்த்தப்பட்டவர்கள் என்றென்றைக்கும் சாதி இந்துக்களின் கருணையை எதிர்நோக்கியே வாழவேண்டும் என்பது காந்தியின் கோட்பாடு. இந்து மதத்தை நீங்கள் துறக்கக்கூடாது என்று நெகிழ்ச்சியுடன் காந்தி வேண்டிக்கொண்டபோது அவருடைய பக்கச் சார்பு பளிச்சிட்டது. அம்பேத்கர் காந்திக்குப் பொருத்தமாகவே விடையளித்தார். ‘இரண்டாயிரம் ஆண்டுகளாக நாங்கள் துன்புற்றுகிடக்கிறோம். எத்தனையோ மகான்கள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால், இந்து மதத்தின் அடிப்படைகள் மாறவில்லை.’ இந்நிலையில் எந்த நம்பிக்கையில், யாருக்காக நாங்கள் காத்திருப்பது?
நான்கு வர்ண சாதி அமைப்பை இறுதிவரை காந்தி விட்டுக்கொடுக்கவில்லை. தீண்டாமை என்பது இந்து மதக் கட்டமைப்போடு இணைந்திருக்கும் சமாசாரமல்ல, தனியாகத் துருத்திக்கொண்டு நிற்கும் ஓர் அருவருப்பான பாகம் என்று காந்தி கருதினார். இந்து மதத்தின் ஓரங்கமாக இருந்துகொண்டு, இந்து மதக் கடவுள்களைத் தொழுதுகொண்டு, இந்து மதக் கோட்பாடுகளைப் புகழ்ந்துகொண்டு அப்படியே தீண்டாமையையும் அகற்றிவிடலாம் என்று காந்தி நம்பினார். தீண்டாமை இந்து மதத்தின் பிரிக்கமுடியாத ஓரங்கம் என்பது அம்பேத்கரின் பார்வை.
இந்து மதத்தின் கேடுகளை அம்பேத்கர் தெளிவாகப் பட்டியலிட்டுள்ளார். 1) அறம் சார்ந்த சுதந்தரத்தை அது (இந்து மதம்) மறுதலிக்கிறது. 2) கீழ்படிதலை மட்டுமே முன்மொழிகிறது. 3) அதன் சட்டங்கள் அனைவருக்கும் ஒன்றுபோல் இல்லை. 4) அதன் கோட்பாடுகள் இறுதியானவை, கேள்விக்கு அப்பாற்பட்டவை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் ‘இந்துக்கள் மதம் என்று சொல்லிக்கொள்வது எண்ணற்ற கட்டளைகளையும் தடையுத்தரவுகளையும்கொண்ட ஓர் அமைப்பேயாகும்.’ (புத்தரும் அவர் தம்மமும்.)
காந்திய வழியில் தீண்டாமையை அகற்றமுடியாது என்று தெளிவாகவே குறிப்பிட்டார் அம்பேத்கர். ‘இந்தியாவில் பல மகாத்மாக்கள் இருக்கிறார்கள். தீண்டாமையை ஒழிப்பதையும் ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்தி அவர்களை உள்இழுத்துக்கொள்வதையும் தங்கள் நோக்கமாக அவர்கள் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். மகாத்மாக்கள் வந்தார்கள், சென்றார்கள் ஆனால் தீண்டத்தகாதவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே நீடிக்கிறார்கள்.’
இந்து மதத்தை ஒரு மதமாக மட்டும் கருதாமல், அதை அனைவருக்கும் பொதுவான ஓர் அரசியல் கருத்தாக்கமாகவும் உருமாற்ற காந்தி முயன்றார். காந்தியின் ‘ஹிந்து சுவராஜ்’ ராமர் ஆட்சியை மீண்டும் அமைக்க விரும்பியது. நேர் எதிராக, அம்பேத்கர், ‘சமூக வாழ்வில் புரட்சிகர மாற்றங்களை’ ஏற்படுத்தும் ஜனநாயகத்தைக் கொண்டுவர விரும்பினார்.
அரசியலில் மதத்தையும் மதத்தில் அரசியலையும் இணைத்ததில் காந்திக்கு நிச்சயம் ஓர் இடம் உண்டு. மதத்தின் அரசியலையும் அரசியலில் உள்ள மதவாதத்தையும் வெளிப்படுத்தியதில் அம்பேத்கர் முதன்மையானவராகத் திகழ்கிறார்.
எப்படிப் பார்த்தாலும், எந்த அம்சத்தை எடுத்துக்கொண்டாலும் அம்பேத்கரும் காந்தியும் எதிரெதிரான திசையில்தான் பயணம் செய்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது. இந்நிலையில், எந்த அடிப்படையில் இருவரையும் ஒன்றிணைப்பது? ஏன் ஒன்றிணைக்கவேண்டும்? அவ்வாறு செய்வதை இந்த இருவரும் ஏற்பார்களா?
காந்தியும் அம்பேத்கரும் அல்ல. காந்தியா அம்பேத்கரா என்பதுதான் கேள்வி. நீங்கள்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.
-நந்தன் www.tamilpaper.net
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக