வியாழன், 20 அக்டோபர், 2011

சூடுபிடிக்குது "பெட்டிங்' : காங்.,க்கு 5வது இடம் கிடைக்க ஆர்வம்

உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு முடிவடைந்து, நாளை ஓட்டுக்கள் எண்ணப்படும் நிலையில், யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற சூதாட்டம் (பெட்டிங்) களைகட்ட துவங்கிவிட்டது. சாதாரணமாக கிரிக்கெட் மற்றும் பொதுத்தேர்தலின் போதுதான் இது போன்ற பெட்டிங் நடக்கும். தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கும் வந்துவிட்ட இந்த சூதாட்டத்தில், 100 ரூபாய் முதல் லட்சக்கணக்கிலும், வெள்ளி, ஜவுளியும் கட்டப்படுகிறது.

இந்த தேர்தல், கட்சிகளின் சுயபரிசோதனைக் கூடமாக சித்தரிக்கப்படுகிறது. இதில் வெற்றி, தோல்வி என்பதை விட, கட்சிகள் பெரும் ஓட்டு சதவீதமே எதிர்காலத்தில் அக்கட்சிகளின் கூட்டணியை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.இதனால், அனைத்துக் கட்சிகளும் ஓட்டுக்களை பெறுவதில், சில மாதங்களாகவே பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி பிரசாரம் மேற்கொண்டன. ஆனால், இதற்காக வாக்காளர்களுக்கு பணம், பொருள், பிரியாணி பொட்டலத்துடன் மதுபானம் என, பல்வேறு வகையில் கவனிப்புகளும் மேற்கொள்ளப்பட்டது.தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மேயர் பதவிகளில் எந்தக் கட்சிக்கு அதிக இடம் கிடைக்கும். யார் இரண்டாம் இடம் பெறுவர் என்பதில் துவங்கி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி வரைக்கும், பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.
தமிழகத்தின், 10 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் அனைத்தையும் அ.தி.மு.க.,வே கைப்பற்றும் என, அதிகமானோர் பந்தயம் கட்டியுள்ளனர். மேயர் பதவிகளில் தி.மு.க., இரண்டு இடங்களை கைப்பற்றும் எனவும் பந்தயம் கட்டப்பட்டு வருகிறது. அது தவிர, இரண்டு கட்சிகளையும் அல்லாத கட்சியால் மேயர் பதவியை பெற முடியாது எனவும் பணம் கட்டப்படுகிறது.அது மட்டுமின்றி, ஒட்டு மொத்த ஓட்டு சதவீதத்தில், மூன்றாம் இடத்துக்கு அதிக அளவில் பந்தயம் கட்டப்படுகிறது. இந்த இடத்தை, தே.மு.தி.க., பெறும் என பலர் பந்தயம் கட்டுகின்றனர். இதிலும், வடமாவட்டங்களில் மூன்றாம் இடத்தை, பா.ம.க., பெறும் எனவும் பந்தயம் கட்டப்படுகிறது.

அது மட்டுமின்றி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஐந்தாம் இடத்தையே பெறும் என அதிக அளவில் பணம் கட்டப்படுகிறது. இது மட்டுமின்றி வார்டு வாரியாகவும் வெற்றி பெறுபவர்கள், இரண்டாம் இடம் பெறுபவர்கள், டெபாசிட் இழப்பவர்கள் என, பல்வேறு பிரிவுகளிலும் பந்தயங்கள் கட்டப்பட்டு வருகிறது.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அகில இந்திய கட்சியான பாரதிய ஜனதா கட்சி, நடப்பு தேர்தலில் வெற்றி பெறும் எனவும், வெற்றி பெறாது எனவும் பணம் கட்டப்பட்டு வருகிறது.இந்த பணம் கட்டும் சூதாட்டம், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் கன ஜோராக நடந்து வருகிறது. இந்த சூதாட்டத்தில் பணம் மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் பிளாட்டுகள், வீடுகளை கூட சூதாட்டத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.

இதில் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் அவர்கள் விதித்துள்ளனர். அதாவது, வெற்றி பெறுபவர்க்கு தோல்வி அடைபவர் வீடோ, இடமோ கொடுக்க வேண்டும். அதற்கான ரிஜிஸ்டர் (பத்திர பதிவு ) செலவை தோல்வி அடைந்தவர் ஏற்க வேண்டும் என, நிர்ணயித்துள்ளனர்.இத்தகைய சூதாட்டத்தில் பணமாக லட்சக்கணக்கிலும், ஏரியாவுக்கு தக்கபடி தொழில் ரீதியாகவும் பணம் கட்டப்படுகிறது. உதாரணமாக, வெள்ளி தொழிலுக்கு பெயர் பெற்ற சேலத்தில், வெள்ளியை வைத்தும், ஈரோட்டில் ஜவுளிகளை கொண்டும் சூதாட்டம் நடக்கிறது.தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு, இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இந்த சூதாட்டம் இன்று மேலும் சூடுபிடிக்கும் என்கின்றனர் அரசியல் கட்சியினர்.


-நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை: