புதன், 19 அக்டோபர், 2011

முன்னாள் கூட்டணி கட்சிகளின் பார்வை திருச்சியின் பக்கம்!

திருச்சி, இந்தியா: உள்ளாட்சித் தேர்தல்கள் ஒருபுறமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், திருச்சி மேற்குத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவு என்னாகுமோ என்ற எதிர்பார்ப்பு திருச்சியில் உள்ளது. கடந்த 13-ம் தேதி நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் நாளை (வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றன.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும், திருச்சி மேற்கு சட்டமன்றத் தேர்தல் முடிவு, ஆளும் கட்சிக்கு பாதகமாக அமைந்து விட்டால், தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்படும் என்பது நிஜம். ஒருவேளை தி.மு.க. ஜெயித்து விட்டால், அ.தி.மு.க.வின் 5 மாத கால ஆட்சிக்கு பெரிய அடியாக இருக்கும் என்பது ஒரு விஷயம்.

அதைவிட பெரிய விஷயமாக என்ன பார்க்கப்படும் தெரியுமா? அ.தி.மு.க.வால், கூட்டணிக் கட்சிகளில் தயவு இல்லாமல் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்ற இமேஜ் ஏற்படும். அ.தி.மு.க.வின் முன்னாள் கூட்டணிக் கட்சிகள் அ.தி.மு.க.வின் தோல்வியை கொண்டாடும் நிலை ஏற்படும்.
திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மு. பரஞ்சோதி, தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு ஆகியோரே பிரதான வேட்பாளர்கள். இவர்களைத் தவிர்த்து வேறு 14 வேட்பாளர்கள்ஈ வெவ்வேறு கட்சிகளின் சார்பிலும், சுயேட்சையாகவும் போட்டியிட்டனர்.
இந்த 14 பேரையும் விட்டுவிடலாம். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. தோற்க வேண்டுமென்றால், கே.என். நேரு ஜெயிக்க வேண்டும்.
13ம் தேதி நடைபெற்ற தேர்தலில், தொகுதி முழுவதும் 240 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட 240 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மேற்பார்வையாளர், ஒரு வாக்கு எண்ணும் உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் ஆகிய 3 பேர் கொண்ட குழு இருப்பார்கள். ஒவ்வொரு மேஜையிலும் நடைபெறும் வாக்குப்பதிவு, கேமரா மூலம் பதிவு செய்யப்படும். மொத்தம் 18 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
சாரநாதன் பொறியியல் கல்லூரி நாளை நிச்சயம் பதட்டமான இடமாகத்தான் இருக்கப்போகின்றது. காரணம், வாக்குப் பதிவின்போது தென்பட்ட நிலைமையின்படி, அ.தி.மு.க.வும் சரி, தி.மு.க.வும் சரி, சுலபமான வெற்றியை அடையப் போவதில்லை. மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் முடிவு இருந்தாலும், ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

• படித்தது, பிடித்திருக்கிறதா? நண்பர்களிடம் “விறுவிறுப்பு.காம்” பற்றி கூறுங்களேன்!

கருத்துகள் இல்லை: