(கனடாவுக்கான ஸ்ரீலங்கா உயர் ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வரா வெளிவிவகார அமைச்சர் ஜோண் பாட் அவர்களை வெளிவிவகார அமைச்சில் செப்ரம்பர் 2011ல் ஒட்டவாவில் சந்தித்தபோது)
கனடா புதிதாகக் கண்டுபிடித்துள்ள ஆசிய நாடுகளிலுள்ள மனித உரிமைகள் சம்பந்தமான பதிவுகள் மற்றும் அதற்கான சர்வதேச விசாரணையை கோருதல் போன்ற விமர்சனங்கள் அது பயங்கரவாதிகளின் பிரச்சார உத்திகளுக்குள் அகப்பட்டு விட்டது எனத் தெரிகிறது என்று ஸ்ரீலங்கா தெரிவிக்கிறது.
“கனடா வெளியிட்டுள்ள அறிக்கைகளையிட்டு நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை.... கனடா சரியான நிலையைப் புரிந்து கொள்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் கனடாவுக்கான ஸ்ரீலங்கா உயர் ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வரா கனடியன் செய்திக்கு தெரிவித்துள்ளார்.
வாகீஸ்வரா வெளியிட்டுள்ள குறிப்புகள், சமீபத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கனடாவின் கன்ஸவேர்டிவ்கள் பின்பற்றியுள்ள கடுமையான நிலைப்பாட்டுக்கு எதிரான முதல் பகிரங்க மறுப்புரையாகும்.
வெளிவிவகார அமைச்சர் ஜோன் பாட், தமிழ் புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசாங்கப் படைகள் மேற்கொண்ட நீண்ட உள்நாட்டு யுத்தத்தின் கடைசி நாட்களின்போது அரசாங்கப் படைகளின் நடத்தையை விசாரணை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் சர்வதேச முயற்சிகளை ஸ்ரீலங்கா தடைசெய்வதை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மே 2009 ல் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தமிழ் புலிகளை நசுக்கித் தோற்கடிக்கும் முயற்சியின்போது பல ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என மனித உரிமை அமைப்புகள் கணக்கிட்டுள்ளன.
,ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக நம்பத் தகுந்த தீவிரமான யுத்தக் குற்றச்சாட்டுகள் உள்ளன என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மற்றும் பாராளுமன்றத்தில் கடந்த மாதம் பாட் ஆற்றிய உரைகளில் குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம் ஒட்டவாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது பாட் இதுபற்றி வாகீஸ்வராவிடம் நேரடியாகவே வலியுறுத்தியிருந்தார்.
பாட்டின் இந்த சொல்வீச்சு கடந்த மாதம் வரை 26 வருட உள்நாட்டுப் போரில் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் ஒரு உறுதியான கூட்டை வைத்திருப்பதைப்போல் தோன்றிய கன்சர்வேட்டிவ் அரசாங்கத்திடம் ஒரு மாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தது. கன்சர்வேட்டிவ் கட்சியினர் தமிழ் புலிகளை 2006ல் ஒரு பயங்கரவாத அமைப்பாக அதிகாரபூர்வமாக பட்டியலிட்டிருந்ததுடன், தமிழ் குடியேற்றவாசிகள் படகுகள் மூலமாக கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதிக்கு குடியேற்றத்துக்காக வருவதை ஓரளவிற்கு வரவிடாமல் தடுப்பதற்காக குடியேற்றச் சட்டங்களையும் கடுமையாக்கியிருந்தனர்.
ஸ்ரீலங்காவில் புலிகள் இராணுவத்தினரால் பேரழிவுக்கு உள்ளாக்கப் பட்டிருந்தாலும், ஐரோப்பாவில் அவர்களுடைய உறுதியான அரசியற் கிளை இன்னமும் உயிரோடு நல்லபடியாகவே உள்ளது மற்றும் “அவர்களுடைய பிரச்சார இயந்திரம் மிகவும் கட்டுக்கோப்புடன் உறுதியாக உள்ளது” என்று வாகீஸ்வரா கூறியுள்ளார்.
புலிகள் அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேசத்தின் கருத்துக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன் ஒரு பிரச்சார யுத்தத்தை ஆரம்பித்துள்ளார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“இது புலிகள் இன்னமும் ஒரு வித்தியாமான நிலையிலேயே உள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது. கனடா இன்னமும் புலிகளைப்பற்றி புரிந்து கொள்ளவில்லை” என ஸ்ரீலங்காத் தூதுவர் கூறினார். மேலும் கனடா “ இந்தக் கருத்துக்களை கவனிக்க வேண்டுமே தவிர நடைபெற்று வரும் இந்தப் பிரச்சாரத்தை உள்வாங்கிக் கொள்ளக்கூடாது” என்று அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் அதன் இராணுவத்தின் செயற்பாடுகள் குறித்து ஒரு முழு சர்வதேச மதிப்பீட்டை வழங்குவதிலிருந்து தப்புவதற்கு பயங்கரவாதத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்தி வருகிறது என்று ஒரு முன்னணி மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
“ மிகவும் சுதந்திரமான அமைப்புகளிலிருந்து அதிகளவான விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளன. ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடி குழு, சர்வதேச மன்னிப்புச் சபை போன்றவைகளிடமிருந்து குறிப்பிடத் தக்க எண்ணிக்கையிலான விசேட அறிக்கைகள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்தார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பகுதிக்கான உதவிப் பணிப்பாளர் எலைன் பியர்சன்.
“இதை மறுப்பதற்காக, இந்த அமைப்புகள் எல்லாம் எப்படியோ எல்.ரீ.ரீ.ஈ யினரது சம்பளப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று குற்றம் சாட்டுவதுதான் மிகவும் வேடிக்கையாக உள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கனடாவுக்கு எதிராக கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் ஒரு இராஜதந்திர வெற்றியை பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா கோரியுள்ளது.உள்நாட்டுப் போரின்போது இடம் பெற்ற ஸ்ரீலங்காவின் நடத்தைகள் நெருக்கமான கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டுமென்று ஒரு பிரேரணையை கொணடுவர கனடா பட்டியல் இட்டிருந்தது ஆனால் திடீரென அந்தப் பிரேரணையை அது பின்வாங்கிக் கொண்டது.
செப்டம்பர் மாத நடுப்பகுதியில் ஸ்ரீலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையைப்பற்றி ஒரு”எதிர்ச் செயலாற்றக் கூடிய உரையாடலை” ஜெனிவாவை அடிப்படையாகக் கொண்ட சபையின் அடுத்த மார்ச் மாதம் இடம்பெறவிருக்கும் அமர்வில் நடத்துவதற்கான ஒரு பிரேரணைக்கு கனடா அனுசரணை வழங்கியிருந்தது.ஆனால் கனடா அதனை விரைவாக பின் வாங்கிக் கொண்டது. ஒரு வாரத்துக்கு முன்பு அந்த விடயம் பற்றி வினாவியபோது வெளிவிவகாரத் திணைக்களத்தினால் அதனை விளக்கிக் கூற இயலாமலிருந்தது.
இலங்கை அரசாங்கம் கனடாவின் முயற்சிகளை முடக்குவதற்காக தீவிரமாக பரப்புரைகளை மேற்கொண்டதாக வாகீஸ்வரா கூறினார். “ எங்களுக்கு ஏராளமான ஆதரவு கிடைத்தது ஏனெனில் அந்த நாடுகள் விடயத்தைப் புரிந்து கொண்டிருந்தன” என்று மேலும் தெரிவித்தார்.
மனித உரிமைகள் பற்றிய நல்லெண்ணத்தில் சந்தேகத்துக்குரிய நாடுகளான கியுபா, சீனா, அங்கோலா, மற்றும் கொங்கோ போன்றவை உட்பட சபையில் உள்ள 47 நாடுகள் ஸ்ரீலங்காவை ஆதரித்தன. ஸ்ரீலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை அரசாங்கத்தை குற்றச்சாட்டில் இருந்து விடுவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வெள்ளையடிக்கும் முயற்சி என்று மனித உரிமைக் குழுக்கள் அதனை நிராகரித்தன.
“ஜெனிவாவிலும் மற்றும் நியுயார்க்கிலும் தங்கள் இராஜதந்திரக் கவர்ச்சியைக் காட்டி தாக்குதல்களை தடுப்பதைக்காட்டிலும் ஸ்ரீலங்கா அரசாங்கம் நீதியான விசாரணைகளை நடத்துவதிலும்; வழக்குத் தொடுப்பதிலும் தங்களால் இயன்றளவு சக்தியை செலவிடுமாயின் நாங்கள் உண்மையில் சில நீதியான பொறுப்புக்கூறல்களை கண்டிருக்க முடியும்” என்று பியர்சன் தெரிவித்தார்.
“அப்படியிருந்திருக்குமாயின் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு சர்வதேச விசாரணையின் அவசியத்தை நாங்கள் வலியுறுத்தியிருக்க மாட்டோம்” உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டததைப் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு ஸ்ரீலங்கா காட்டிவரும் விருப்பமின்மை கனடா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினரின் சோர்வை அதிகரித்து வருகிறது என்று பியர்சன் கூறினார்
ஐநாவின் மனித உரிமைக் குழுவில் கனடாவின் ஆரம்ப முயற்சிகள் ஒரு சாதகமான முயற்சி என்று குறிப்பிட்ட திருவாட்டி பியர்சன், மற்றும் வரும் மார்ச்சில் குழு திரும்பவும் கூடும்போது அது மேலும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதேவேளை ஸ்ரீலங்காவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு அவுஸ்திரேலியாவில் அடுத்து நடைபெற இருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை பயன்படுத்த கனடா தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளில் நியாயமான ஆர்வம் இருப்பதாக வெளிக்காட்டா விட்டால் மற்றும் தமிழர் சமூகத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கருத்துள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், 2013ம் ஆண்டு ஸ்ரீலங்கா நடத்துவதாகவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக பிரதம மந்திரி ஸ்ரீவன் ஹாப்பர் அச்சுறுத்தியிருந்தார்.
இதன் ஒரு பகுதியாக, ஹாப்பர் மற்றும் பாட் ஆகியோர் உண்மையில் இயக்கப்படுவது, கனடா உலகின் மிகப்பெரிய தமிழ் புலம்பெயர் சமூகத்தின் வீடாக பரவலாக கருதப்படுவதால்தான். ஒரு மதிப்பீட்டின்படி 300,000 தமிழர்கள் இப்போது கனடாவில் வாழ்கிறார்கள்,அவர்களில் பலர் ரொரான்ரோ பகுதியிலேயே உள்ளனர்.
கன்சர்வேட்டிவ் கட்சியினர் கடந்த தேர்தலில் தங்களின் பெரும்பான்மையைப் பெற்றது, கனடாவின் முக்கிய நகரங்களில் இனச் சமூகங்களிடையே பாரிய முன்னேற்றகளைச் செய்ததால்தான் மற்றும் தமிழரிடையே ஏதாவது நல்லெண்ணங்களை வளர்த்ததால் மட்டுமே அவர்களால் அந்த வெற்றியை திடப்படுத்திக் கொள்ள முடியும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கைகளை கண்டிக்காது அரசாங்கம் மௌனம் காத்ததின் பலனாக வெகுண்டெழுந்த ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களால் முக்கிய கனடிய நகரங்களின் வீதிகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் வெடித்தன.
இப்போது ஹாப்பரின் அரசாங்கம் பேசத் தொடங்கியதும், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டுக் கலவரத்தால் ஏற்பட்ட அழிவுகளை மீளக் கட்டுவதைக் காரணம்காட்டி மௌனம் பாலிக்கும்படி ஸ்ரீலங்கா அரசாங்கம் மன்றாடுகிறது.
“இந்த நேரத்தில் இப்படியான கட்டத்தில் நாங்கள் கனடாவிடமிருந்து எதிர்பார்ப்பதெல்லாம் கடந்த பல வருடகாலமாக பின்பற்றப்பட்டுவந்த அதே நட்புறவையும் மற்றும் புரிந்துணர்வையும்தான். ஏனெனில் ஸ்ரீலங்கா இப்போதுதான் கொடூரமான அதிர்ச்சிகரமான விளைவுகளை ஏற்படுத்திய தாங்கொணா யுத்தத்திலிருந்து வெளிவந்திருக்கிறது” என்றாh வாகீஸ்வரா.
பியர்சன் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வாதத்தை கபடநாடகமெனக் காரணங்காட்டி நிராகரித்தார்.“அவர்கள் நியாயமாகவே முன்னேறிச் செல்வதில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால் அப்போது அவர்களுக்கு ஒரு மேலான நடவடிக்கை – ஒரு நீதியான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் நடைமுறை – தேவைப்பட்டிருக்கும், ஏனெனில் அவை இல்லையென்றால் இந்தக் குறைபாடுகள் தெளிவாகக் கையாளப்படப் போவதில்லை”.
“அது தமிழ் மக்களிடையே அதிக சீற்றத்தை வளர்த்து வருகிறது” என்றார் பியர்சன்.
(நன்றி: த கனடியன் பிறஸ்)
தமிழில்: எஸ்.குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக