சனி, 22 அக்டோபர், 2011

ராசா, கனிமொழி மீது நம்பிக்கை துரோக குற்றச்சாட்டு: நீதிமன்றம் பதிவு செய்தது


Raja and Kanimozhi
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்பி கனிமொழி ஆகியோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 409ன் கீழ் நம்பிக்கை துரோக வழக்கை நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் கடந்த மாதம் 26ம் தேதி இந்திய தண்டனைச் சட்டம் 409-ம் பிரிவின் கீழ் நம்பிக்கை துரோக மோசடி என்ற புதிய குற்றச்சாட்டை இந்த 17 பேர் மீதும் சிபிஐ பதிவு செய்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். இதனால் சிபிஐயின் இந்த புதிய குற்றச்சாட்டுக்கு 17 பேரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந் நிலையில் இன்று இது தொடர்பாக நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவு பிறப்பித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும், ரிலையன்ஸ்
டெலிகாம், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120ன் கீழ் கிரிமினல் சதி (criminal conspiracy) குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் ராசா, கனிமொழி ஆகியோர் மீது நம்பிக்கை துரோக மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்யவும் உத்தரவிட்டார்முன்னதாக இன்றைய விசாரணையையொட்டி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். நீதிபதி உத்தரவு பிறப்பித்த பின், சிபிஐ பதிவு செய்துள்ள குற்றச்சாட்டை படித்துப் பார்த்த பின்னரே இந்த உத்தரவு நகலில் கையெழுத்திட முடியும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறினர். இதையடுத்து மாலை வரை நீதிமன்றத்திலேயே இருந்து படித்துப் பார்த்துவிட்டு, மாலையில் சிறைக்குச் செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ராசா, கனிமொழி தவிர கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார், ராசாவின் உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா உள்பட 17 பேர் மீதும் கிரிமினல் சதி குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீது ஊழல், ஏமாற்றல், உயர் பதவியை தவறாக பயன்படுத்தியது, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றப் பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் கனிமொழி, ராசா உள்ளிட்டவர்களுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டதால் 2ஜி வழக்கில் அடுத்தகட்ட விசாரணை (trial) ஆரம்பமாகவுள்ளது.

இந் நிலையில், தனது மகள் கனிமொழி, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி இன்று டெல்லி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: