புதன், 19 அக்டோபர், 2011

தீபாவளி- விலை ஓவராக இருந்தாலும் நிரம்பி வழியும் கடைகள்


தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆடைகளும் நகைகளும், வெள்ளிப்பாத்திரங்களும் வாங்குவதற்கு சென்னை நகரின் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இதனால் தியாகராயநகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புத்தாடைகள், இனிப்பு பலகாரம்

புத்தடைகள் உடுத்தி பட்டாசு வெடித்து, இனிப்பும் பலகாரமும் உண்டு உற்சாகமாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை அக்டோபர் 26-தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி புதிய துணிகள் வாங்க மக்கள் ஆர்வத்துடன் கடைவீதிகளுக்கு படை எடுத்து வருகின்றனர். சென்னையின் பிரதான கடை வீதிகளில் ஒன்றான தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்டம் அலைமோதுகிறது. பனகல் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் வாகனப்போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

300 கோடி ரூபாய் விற்பனை

கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக காலை 7 மணியில் இருந்தே மக்கள் கடை வீதிகளில் குவியத் தொடங்கிவிடுகின்றனர். இந்த ஆண்டு ஜவுளிக்கான மூலப்பொருட்கள், கூலி போன்றவற்றின் உயர்வினால் துணிகளின் விலை கடந்த ஆண்டை விட 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஜவுளிக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு 300 கோடி ரூபாய்க்கு தீபாவளி விற்பனை வருமானம் இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளின் கடை வீதிகளும் மக்கள் கூட்டம் நிரம்பிவழிவதால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. என்னதான் இனிப்பு, பட்டாசு, ஆடைகளின் விலை அதிகமாக இருந்தாலும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தீபாவளியை கொண்டாட அனைத்தையும் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர் பொதுமக்கள்.

கருத்துகள் இல்லை: