புதன், 19 அக்டோபர், 2011

திருக்கேதீஸ்வர ஆலய புனரமைப்பு இந்தியா நிதி உதவி


இந்தியா வழங்கும் 326 மில்லியன் ரூபா நிதி உதவியின் கீழ் வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயம் புனரமைக்கப்பட உள்ளதுடன் இதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ  வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி உட்பட பல பிரமுகர்கள் முன்னிலையில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும்  திருக்கேதீஸ்வர ஆலயத்தின் திருப்பணி சபையினரும்  புரிந்துணர்வு  உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்துக்கமைய திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் மஹா மண்டபம் அமைப்பதற்கான சகல உதவிகளும் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும்.
இம்மண்டபத்துக்கான கற்கள் மூலப்பொருள்கள் மற்றும் அவற்றை அமைப்பதற்கான கலைஞர்கள் மற்றும் சிற்பிகள் அனைவரும் இந் தியாவிலிருந்தே அழைத்துவரப்படுவார்கள் என திருக்கேதீஸ்வரம் திருப்பணிச்சபையின் இணைச்செயலாளர் புலவர் அம்பலவாணர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

அத்துடன் வரலாற்றுடன் தொடர்புடைய 10 ஒட்டணித் தூண்கள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படவுள்ளன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருக்கேதீஸ்வரம் ஆலயம் சார்பில் திருப் பணிச்சபையின் பணிப்பாளர் சபைத் தலைவர் வி. கைலாசபிள்ளை இந்திய அரசின் சார்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது எட்டப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு அமையவே இந்தியா மேற்படி உதவிகளை வழங்குவதாக இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா இதன் போது  குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: