வெள்ளி, 21 அக்டோபர், 2011

ஏராளமான கேள்விகள் பாக்கி...ஜெவிடம் இன்றாவது விசாரணை முடியுமா..?

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்றும் இன்றும் விசாரணை நடத்தப்பட்டு வந்தாலும் கேள்விகள் ஏராளமாக இருப்பதால் இன்றே விசாரணை முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. நாளையும் இந்த விசாரணை தொடரலாம் என்று தெரிகிறது.
முன்னதாக ஜெயலலிதாவிடம் 500 கேள்விகள் கேட்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டன. நேற்று சுமார் 380 கேள்விகள் கேட்கப்பட அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்குத் தெரியாது, எனக்கு நினைவில்லை, அந்த முதலீட்டில் நான் சைலண்ட் பார்ட்னர் தான் என்று ஒற்றை வரிகளிலேயே முதல்வர் பதிலளித்தார்.
இந் நிலையில் இன்னும் சுமார் 100 கேள்விகள் மிச்சமிருப்பதாகக் கூறப்பட்டு இன்று விசாரணை நடந்து வருகிறது. ஆனால், ஜெயலலிதா மேலும் 1005 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தனை கேள்விகள் மிச்சமிருந்தால் இந்த விசாரணை இன்றுடன் முடிய வாய்ப்பில்லை. மேலும் ஒரு நாளோ அல்லது சில நாட்களோ தொடரலாம் என்று தெரிகிறது.
1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை நகலில் மொழி பெயர்ப்பு வேண்டும், உடல் நிலை சரியில்லை என்ற பல்வேறு காரணங்களை கூறி கடந்த 14 ஆண்டுகளாக 109 முறை இந்த வழக்கில் ஜெயலலிதா வாய்தா வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவரிடம் நீதிபதியால் இத்தனை ஆண்டுகளாக விசாரணை நடத்தவே முடியவில்லை.

நேற்றைய விசாரணையின்போது அரசு வழக்கறிஞர்கள் ஆச்சார்யா, சந்தேஷ் செளதா ஆகியோரும் ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார், கந்தசாமி ஆகியோரும் சசிகலா, இளவரசி சார்பில் வழக்கறிஞர்கள் ராஜன், வெங்கடேஷ்வரலு, மூர்த்தி ராவ் ஆகியோரும் சுதாகரன் சார்பில் வழக்கறிஞர் சரவணக்குமார் மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் பால்கனகராஜ், அன்பு, ரமேஷ், விவேகவாணன், சுந்தர் ஆகியோரும் ஆஜராகினர்.

விசாரணை இன்று முடியாத பட்சத்தில் நாளைக்கும் விசாரணை நடக்குமா அல்லது அல்லது வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுமா என்பது சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் முடிவுக்கு உட்பட்டதாகும்.

கருத்துகள் இல்லை: