வெள்ளி, 21 அக்டோபர், 2011

தயாநிதிக்கு ஆதரவாக ஆவணங்கள் அழிப்பு : அதிர்ச்சி தகவல்

சென்னை: தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்ற குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் தயாநிதிக்கு ஆதரவாக, ஆவணங்களை அழிக்கும் முயற்சி நடந்துவரும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் சுப்ரமணியன் அறையை நேற்று முற்றுகையிட்டனர். முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது, சென்னை தொலைபேசியின், 323 இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. தயாநிதி வீட்டில் இருந்து, சன், "டிவி' அலுவலகத்திற்கு, "ஆப்டிகல் பைபர் கேபிள்' இணைப்பு மூலம், அதிநவீன தொடர்பு, முறைகேடாக வழங்கப்பட்டிருந்தது. கடந்த 10ம் தேதி, தயாநிதி வீட்டில் ரெய்டும் நடந்தது. இந்த இணைப்புகளை வழங்கியபோது, வேலுச்சாமி என்பவர், சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளராக இருந்தார். இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். இவரிடம், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம், இணைப்பு குறித்து விசாரணை நடத்தியது. விசாரணையில் அவர் தெரிவித்த தகவல்களை, சி.பி.ஐ., ரெய்டு நடத்தியபோது, சென்னை தொலைபேசி அதிகாரிகள், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதுதொடர்பான ஆவணங்களையும் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், ரெய்டு நடந்த பின், தயாநிதிக்கு ஆதரவாக, வேலுச்சாமி இந்த இணைப்பு குறித்த தகவல்களை சென்னை தொலைபேசி அலுவலகத்திற்கே சென்று, அழிக்கவும், திருத்தவும் முயற்சி எடுத்ததாக தெரிகிறது. இதற்கு, சென்னை தொலைபேசி அலுவலகத்தில் சில முக்கிய அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆவணங்களை அழிக்கும் முயற்சிக்கு, தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. "ஆவணங்களை திருத்தும் முயற்சிக்கு, சென்னை தொலைபேசி அதிகாரிகள் துணை போகக் கூடாது' என்பதை வலியுறுத்தி, அச்சம்மேளனத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், தலைமை பொதுமேலாளர் அறையை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று காலை முதல் நடந்த, இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் தலைமை பொதுமேலாளர் வேலுச்சாமி மற்றும் தயாநிதியின் நடவடிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து, தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் இணை பொதுச் செயலர் மதிவாணன் கூறும்போது, "முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது, சென்னை தொலைபேசியின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் தலைமை பொது மேலாளர் வேலுச்சாமி, ஆவணங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. ஓய்வு பெற்ற பின், அலுவலகத்திற்குள் முறைகேடாக நுழைவது மற்றும் ஆவணங்களை அழிப்பதை, சென்னை தொலைபேசி அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது' என்றார்.

கருத்துகள் இல்லை: