சனி, 22 அக்டோபர், 2011

சிவாஜி கணேசனை தோற்கடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் மக்களை ஏமாற்றும் பேச்சுவார்த்தை நாடகத்தின் நடிகர்கள் editor@valampurii.com

அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்துவது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கெனப் பலரும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அது நிஜமன்று. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை சர்வதேச அழுத்தத்திற்கு உடனடியாக ஒத்தணம் கொடுக்கவேண்டும். இல்லையேல் நிலைமை மோசமாகி விடும். இதன் காரணமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது போல நடிக்க வேண்டும்.
அந்த நடிப்பிற்கு அரங்கும் நடிபங்காளர்களும் தேவை. அதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே ஒரு இயங்கு தளம் பேச்சுவார்த்தை நடத்துவதாகும்.
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் விட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு அடியோடு உடைப்பட்டு போகும். எனவே பேச்சுவார்த்தை மூலம் எந்த நன்மையும் இடம் பெறப் போவதில்லையென்ற உண்மை தெரிந்திருந்தும், பேச்சுவார்த்தை என்ற நாடகத்தில் அரசுடன் சேர்ந்து நடிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடன்பட்டுள்ளது. ஆக, அரசு-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இருதரப்பும் உலகையும் தமிழ் மக்களையும் ஏமாற்றுகின்றன.
எனினும் இதை நாம் சொன்னால் அது தமிழ்த் தேசியக் கூட்டமை ப்புக்கு எதிர் என்று பிரசாரம் செய்யப்படும். என்ன செய்வது! தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக விழிப்படையாத வரை ஏமாற்று நாடகங்கள் அரங்கேறவே செய்யும். நல்லூர்ப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணிகளை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது - காணிப்பதிவுக்கு எதிராக விநாயகமூர்த்தி எம்.பி. பாராளு மன்றத்தில் பிரேரணை கொண்டு வந்த போது அதனை வழி மொழிவதற்கு ஆளில்லாமல் அந்தப் பிரேரணை செத்துப் போன பின், உண்ணாவிரத நடிப்பு இருக்கிறதே அது தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஒரு மூலைக்குள் தள்ளிவிட்ட நடிப்பு எனலாம். உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணிப்பதிவுக்கு எதிராக செயற்படுவதாக இருந்தால், நல்லூரில் காணிப்பதிவு இடம் பெறுவதற்கு முன்னதாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டிரு ப்பதுடன் அன்புக்கினிய தமிழ் மக்களே! காணிப்பதிவை ஒட்டு மொத்தமாக எதிர்ப்போம். நீங்கள் எவரும் காணிப் பதிவை மேற்கொள்ளாதீர்கள் என்று குரல் கொடுத்திருந்தால் பதிவு நடந்திருக்காதல்லவா?
என்ன செய்வது! பங்குனி மாதத்தில் நெல்லு விதைத்து கடுமையாக பாடு பட்டேன் என்று கூறுவது எவ்வளவு அறியாமையோ அது போலத் தான் காலம் கடந்த முயற்சிகளும் - உண்ணாவிரதப் போராட்டங்களும்.

கருத்துகள் இல்லை: