வியாழன், 20 அக்டோபர், 2011

வெடி இல்லாமல் கொண்டாடுங்கள் : மாணவர்களுக்கு வேண்டுகோள்


தீபாவளி பண்டிகை 26-ந் தேதி வருகிறது. தீபாவளியின்போது சிறுவர்களும் பெரியவர்களும் வெடி வெடிப்பார்கள். இதனால் புகை அதிகமாகி காற்று மாசுபடுகிறது. ஏற்கனவே இப்படிப்பட்ட மாசு காரணமாக ஓசோன் அடுக்கில் ஓட்டை விழுந்துள்ளது.
மேலும் இப்படிச்சுற்றுச்சூழலை கெடுக்கவேண்டாம் என்பதை வலியுறுத்தி சிப்லா என்ற நிறுவனம் சார்பில் சென்னை மைலாப்பூரில் உள்ள பி.எஸ்.மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வாமை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன் பேசுகையில் `மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஒவ்வாமை நோய்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று புகை ஆகும். அதுவும் வெடி வெடித்ததனால் ஏற்படும் புகை மிகவும் மோசமானது.

உடனே அது நுரையீரலை பாதிக்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வெடி வெடிக்காமல் தீபம் ஏற்றி தீபாவளியை மாணவர்கள் புகையில்லா தீபாவளியாக கொண்டாடுங்கள்' என்றார்.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றி, `தீபாவளிக்கு வெடி வெடிக்க மாட்டோம். பட்டாசு கொளுத்தமாட்டோம்' என்று கூறி உறுதி மொழி எடுத்தனர்.

கருத்துகள் இல்லை: