இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன் குற்றவாளிகளாக பட்டியலில் உள்ளவர்கள், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர். நேற்று கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜராகியபோது சசிகலாவும், இளவரசியும் அவருடன் வந்திருந்தனர். இன்று சுதாகரனும் அவர்களுடன் சேர்ந்து வந்திருந்தார்.
முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுடன் போயஸ் கார்டன் தற்போது சுமுகமான உறவில் இல்லை. இதனால், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரும் ஒரே காரில் வந்து இறங்க, சுதாகரன் மற்றொரு காரில் வந்து இறங்கி உள்ளே சென்றார்.
மற்றைய மூவரும் சுதாகரனுடன் கோர்ட்டுக்கு வெளியே வைத்து எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் நேற்று கோர்ட்டுக்கு வந்திருந்த போதிலும், அவர்களிடம் எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை. கோர்ட் ஹாலுக்குள் ஒரு ஓரமாக சும்மா அமர்ந்திருந்தார்கள்.
வழக்கின் பிரதான குற்றம் சாட்டப்பட்ட நபரான ஜெயலலிதாவிடம் கேள்விகள் கேட்டு முடிந்த பின்னரே, இவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிகின்றது. ஜெயலலிதாவின் வக்கீல், புராசிகியூஷன் தரப்பிடம் “இவர்களிடம் இன்று விசாரணை உள்ளதா?” என்று நேற்று கேட்டபோது, அது பற்றிய சரியான பதில் கூறப்படவில்லை என்றே தெரிகின்றது.
புராசிகியூஷன் தரப்பிலிருந்து, “வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் வரவேண்டியது அவசியம். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படுவது, கோர்ட்டைப் பொறுத்தது. அவசியம் ஏற்பட்டால் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்” என்று கூறியதில், இவர்கள் வெறுத்துப் போனார்கள் என்றார், நமக்கு தகவல் கொடுக்கும் ஒருவர்.
ஆனால், ஒருவேளை கோர்ட்டுக்கு குற்றம் சாட்டப்பட்ட மற்றையவர்கள் வராவிட்டால், ஜெயலலிதாவிடம் கேட்கப்படும் கேள்விகளில் துணைக் கேள்விகள் ஏதாவது அவர்களைப் பற்றி இருந்தால், அவர்கள் கோர்ட்டுக்கு வரும்வரை விசாரணையை நிறுத்தி வைக்க கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது என்ற விபரம் ஜெயலலிதாவின் வக்கீலுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
இதனால்தான், நேற்று வந்திராத சுதாகரனும் இன்று அழைத்து வரப்பட்டுள்ளார் என்று ஊகிக்கலாம்.
தற்போதைய நிலையில் (1400 IST) ஜெயலலிதாவிடம் விசாரணை இன்றுடன் முடிவடையுமா என்பதுகூட தெரியாத நிலை உள்ளது. இன்று மாலை 4.30க்குமுன் கேள்விகள் கேட்கப்பட்டு முடியாவிட்டால், ஜெயலலிதா மறுபடியும் கோர்ட்டுக்கு வரவேண்டியிருக்கும்.
-பெங்களூருவிலிருந்து ஷீமா தத்தின் குறிப்புகளுடன், ரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக