புதன், 24 பிப்ரவரி, 2021

பாலியல் புகார் - ராஜேஷ் தாஸ் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

nakkeeran : தமிழகத்தில் தேர்தல்கால பணிகளுக்காக, சிறப்பு டிஜிபியாக ஏற்கனவே இருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபியின் அதிகாரங்களைக் குறைத்து நியமிக்கப்பட்டவர் ராஜேஷ்தாஸ். இவர், சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ்தாஸின் கணவர். இவர்மீது விவகாரமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழும். சமீபத்தில் பெரம்பலூருக்கும் திருச்சிக்கும் முதல்வர் சென்றபோது அவரது பாதுகாப்புக்காக கூடுதல் டிஜிபியான ராஜேஷ்தாஸ் சென்றார். அப்போது பணியில் இருந்த பெண் எஸ்.பி. ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அவரிடம் பாலியல் அத்துமீறல்களைச் செய்திருக்கிறார் ராஜேஷ்தாஸ். ''எனக்கு ஆளும் கட்சி சப்போர்ட் இருக்கு. உன்னால ஒன்னும் பண்ண முடியாது'' என ராஜேஷ்தாஸ் மிரட்டியுள்ளார். 

அவரது இந்த அடாத செயலை எதிர்த்து அந்தப் பெண் எஸ்.பி. காரை நிறுத்தச்சொல்லி இறங்கியிருக்கிறார். மறுபடியும் முதல்வர் திரும்பி வரும்பொழுது தனது சில்மிஷங்களை ராஜேஷ்தாஸ் அரங்கேற்ற, டென்சன் ஆன அந்தப் பெண் எஸ்.பி., நேராகச் சென்னைக்கு வந்து டிஜிபி, உள்துறைச் செயலாளர், முதல்வர் என ராஜேஷ்தாஸ் மீது புகார் அளித்துள்ளார். தற்போது இவர் மீதான குற்றச்சாட்டுகளை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: