வியாழன், 25 பிப்ரவரி, 2021

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை வருகை ..வர்த்தகம், சுற்றுலாவை பெருக்குவது பற்றி ஆலோசனை

dailythanthi :கொழும்பு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இலங்கைக்கு சென்றார். அவர் பிரதமரான பிறகு இலங்கைக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும். நேற்று முன்தினம், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை இம்ரான்கான் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவை வலுப்படுத்துவதும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் மூலம் வர்த்தகத்தை பெருக்குவதும்தான் தனது பயணத்தின் நோக்கம் என்று அவர் கூறினார். அதிபருடன் சந்திப்பு

இந்தநிலையில், நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இம்ரான்கான் சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு நடந்தது.  இருவர் மட்டுமே இடம்பெற்ற அந்த சந்திப்பில், இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

பொதுநலன் சார்ந்த வர்த்தகம், சுற்றுலா, விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துதல் ஆகியவை குறித்தும் பேசினர். இவை இருதரப்புக்கும் பலன் அளிக்கும் விஷயங்கள் ஆகும்.

பாகிஸ்தான் மக்களுக்கு அழைப்பு

விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதுடன், மக்களுக்கு குறைவான விலையில் விளைபொருட்களை அளிக்க அவர்கள் உறுதி பூண்டனர். இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், பாகிஸ்தான் மக்களை இலங்கைக்கு வருமாறு கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தார். இருதரப்பு வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விவாதித்தனர்.

இந்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்ததாக கோத்தபய ராஜபக்சேவும், இம்ரான்கானும் தனித்தனியாக டுவிட்டரில் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: