வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

5 மாநில தேர்தல் தேதிகள் : தமிழக வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ! புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அசாம்....

மின்னம்பலம் ;தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையையும் தேர்தல் அறிவிக்கையையும் தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று வெளியிட்டார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தமிழகம்

234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

மார்ச் 12-  வேட்பு மனு தாக்கல்

மார்ச் 19  -வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாள்

மார்ச்- 20 வேட்பு மனு பரிசீலனை

மார்ச் 22 - வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் ,

ஏப்ரல் 6 - வாக்குப்பதிவு .

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு இதே அட்டவணையில் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக  வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும். வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிப்பது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவெடுத்து கொள்ளலாம். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அரசியல் கட்சியினர் 5 பேருக்கு மட்டுமே அனுமதி. வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ளலாம்.  வேட்புமனு தாக்கலின் போது 2 பேருக்கு மட்டுமே அனுமதி.  தமிழகத்தில் தேர்தல் மேற்பார்வையாளராக தேவந்திர குமார், அலோக் வர்தன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்துக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அசாம்

126 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்துக்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதல் கட்டமாக 47 தொகுதிகளுக்கு மார்ச் 27ஆம் தேதியும்,  2ஆம் கட்டமாக 39 தொகுதிகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதியும்,  3ஆம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும்.

கேரளா

140 தொகுதிகளை கொண்ட கேரளாவுக்கு, ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.

மேற்கு வங்கம்

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல் கட்டத் தேர்தல்,  மார்ச் 27ஆம் தேதியும், 2ஆவது கட்டம் ஏப்ரல் 1ஆம் தேதியும், 3ஆவது கட்டம் ஏப்ரல் 6ஆம் தேதியும், 4ஆவது கட்டம் ஏப்ரல் 10ஆம் தேதியும், 5ஆவது கட்டம் ஏப்ரல் 17ஆம் தேதியும் நடைபெறும். 6ஆவது கட்டம் ஏப்ரல் 22ஆம் தேதியும், 7ஆவது  கட்டம் ஏப்ரல் 26ஆம் தேதியும், 8ஆவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் ஏப்ரல் 29ஆம் தேதியும்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும். 5 மாநிலங்களுக்கும் சேர்த்து, 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள 18.68 கோடி வாக்காளர்கள் 2.7 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பார்கள் என்று சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: