Neander Selvan : உங்கள் அமெரிக்க விசா யாரால் வழங்கப்படுகிறது என கேட்டால் "அமெரிக்க தூதரகம்" (American Embassy) என சொன்னால் தவறு. உலகம் முழுக்க அமெரிக்க விசாக்களை வழங்குபவர் ஒரு இந்தியர், அதிலும் பார்ஸி, அவரது பெயர் ஜுபின் கார்காரியா (Zubin Karkaria).
2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஜுபின் கார்காரியா என்பவர் 'கூனி டிராவல்' (Kuoni Travel) என்ற சுற்றுலா நிறுவனத்தில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். தனது தொழிலின் காரணமாக தூதரகங்கள் விசா வழங்கும் முறையை அவர் உன்னிப்பாகக் கவனித்தார். அப்போது விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க பொதுமக்கள் தூதரகங்களின் வெளியே நீண்ட வரிசையில் மணி கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. தூதரக அதிகாரிகளுக்கும் ஆவணங்களைச் சரிபார்ப்பது, வரிசையை நிர்வாகிப்பது போன்ற நிர்வாகப் பணிகள் பெரும் சுமையாக இருந்தன.
இதைக் கவனித்த ஜுபின் கார்காரியாவுக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது. "விசா வழங்குவதா இல்லையா என்ற இறுதி முடிவை மட்டுமே தூதரகம் எடுக்க வேண்டும்; விண்ணப்பங்களைப் பெறுவது, கட்டணம் வசூலிப்பது, ஆவணங்களைச் சரிபார்ப்பது போன்ற நிர்வாகப் பணிகளை ஒரு தனியார் நிறுவனம் செய்யலாமே!" என்று அவர் சிந்தித்தார்.
ஜுபின் கார்காரியா ஏற்கனவே 'கூனி டிராவல்' நிறுவனத்தின் மூத்த அதிகாரியாக இருந்ததால், சுற்றுலாத்துறை மூலம் மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகளுடன் அவருக்கு முன்பே தொழில்முறை அறிமுகமும் தொடர்பும் இருந்தது. எனவே, நேரடியாக மும்பைஅமெரிக்கத் தூதரகத்தின் விசா பிரிவுத் தலைவரை (Head of the Visa Section) சந்தித்துத் தனது திட்டத்தை விளக்கினார்.
"விசா வழங்கும் அதிகாரம் மற்றும் முடிவெடுக்கும் உரிமை 100% உங்களிடமே இருக்கும்; ஆனால், அதற்கான ஆவணங்களை வாங்கிச் சரிபார்ப்பது, நேர ஒதுக்கீடு (Appointment Scheduling) செய்வது போன்ற அத்தனை நிர்வாகப் பணிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். இதன் மூலம் விசா அதிகாரிகள் தங்கள் நேரத்தின் 90% பகுதியைச் சரியான முடிவெடுப்பதில் மட்டுமே செலவிட முடியும்" என்றார்.
இதுநாள் வரை அப்படி ஒரு திட்டத்தையே கேள்விபட்டிராத தூதரக அதிகாரி அதை நிராகரித்துவிட்டார். லட்சக்கணக்கான பாஸ்போர்ட்டுகளை கையாள வேண்டும், சென்சிடிவ் ஆன நிதி சார்ந்த ஆவணங்களைக் கையாள வேண்டும். ஒரு அரசு செய்யும் வேலையை தனிநபரை நம்பி எப்படி ஒப்படைக்க முடியும்?
ஆனால் நாளாக நாளாக அமெரிக்க தூதரகங்களில் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற நிலையில் ஜுபின் கார்காரியாவும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால் சோதனை அடிப்படையில் மும்பையில் மட்டும் அதை செய்ய அனுமதி கொடுத்தது.
2001-ஆம் ஆண்டில் இந்த செயல்முறை அமுலுக்கு வந்த நாளே மாயாஜாலம் நிகழ்ந்தது.
மும்பை வீதிகளில் அமெரிக்கத் தூதரகத்தின் வாயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நிற்பது வழக்கம். இதில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இருந்தன.
ஜுபின் கார்காரியா விசா விண்ணப்பங்களைச் சேகரிக்கும் மையத்தைத் தூதரக வளாகத்திலிருந்து முற்றிலும் தனியாகப் பிரித்து, மும்பையின் மற்றொரு பகுதியில் பிரத்யேகமான VFS விசா மையத்தைத் திறந்தார். இதனால் தூதரகக் கதவுகளின் முன் நின்ற கூட்டம் ஒரே நாளில் மாயமாய் மறைந்தது.
எந்த முயற்சியும் விஷுவலாக ரிசல்டை கொடுத்தால் டக் என அதன் பலன் தெரியும். தூதரக அதிகாரிகளுக்கு வியப்பு தங்கவில்லை. முதல் நாளிலேயே மேஜிக்கை நிகழ்த்திவிட்டாரே என்றார்கள்.
அக்காலத்தில் அனைவரும் விடியற்காலையிலேயே வந்து தூதரக வாசலில் வரிசையில் நிற்பது வழக்கம். VFS மையம் விண்ணப்பதாரர்களுக்குக் குறிப்பிட்ட நேரம் மற்றும் நாளுக்கான 'அப்பாயிண்ட்மென்ட்' (Appointment Ticketing System) முறையைக் கொண்டு வந்தது. இதனால் மக்கள் நாள் முழுவதும் வரிசையில் நிற்கத் தேவையில்லாமல், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் வந்தால் போதும் என்ற நிலை உருவானது. இது தெருக்களில் நின்ற மக்கள் கூட்டத்தை உடனடியாகக் கட்டுப்படுத்தியது. பல்லாயிரம் பேருக்கு ஏகப்பட்ட நேரம் மிச்சமானது.
அமெரிக்க விசா அதிகாரிகளுக்கு அதிக நேரம் எடுப்பதற்குக் காரணமே, விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யாத படிவங்கள் மற்றும் அரைகுறையான ஆவணங்களைக் கொண்டு வருவதுதான். VFS ஊழியர்கள் விண்ணப்பதாரர்களின் படிவங்கள் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்றும், தேவையான அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளனவா என்றும் முன்கூட்டியே சரிபார்த்தனர். இதனால் சரியான முறையில் தயாரிக்கப்பட்ட "தயாரான கோப்புகள்" (Ready Files) மட்டுமே தூதரக அதிகாரிகளிடம் அனுப்பப்பட்டன. இதனால் அதிகாரிகள் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் ஆய்வு செய்யும் நேரம் பாதியாகக் குறைந்தது.
விசா கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீது வழங்குவது, மற்றும் விசா அச்சிடப்பட்ட கடவுச்சீட்டை (Passport) விண்ணப்பதாரரின் வீட்டிற்கே கூரியர் மூலம் பாதுகாப்பாக அனுப்பும் முறையை அறிமுகப்படுத்தினார். விசா வாங்கிய பிறகு மீண்டும் பாஸ்போர்ட்டைப் பெற மக்கள் தூதரகத்திற்கு வர வேண்டிய அவசியமே இல்லாமல் போனது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாடு முழுக்க அமெரிக்க தூதரகங்களுக்கு தன் சேவையை விரிவுபடுத்தியது VFS Global. 2003-ஆம் ஆண்டு இங்கிலாந்து (UK) தூதரகமும், தொடர்ந்து கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் இந்தியாவிலும் பின்னர் உலக அளவிலும் VFS நிறுவனத்திற்குத் தங்கள் விசா நிர்வாகப் பணிகளை ஒப்படைக்கத் தொடங்கின.
VFS Global இன்று உலகின் மிகப்பெரிய விசா மற்றும் தூதரக சேவை அமைப்பாக இயங்கி வருகிறது. உலகளவில் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நிறுவனம் நேரடிச் சேவை மையங்களைக் கொண்டுள்ளது.
வருங்காலத்தில் ஆப் மூலம் விசாவுக்கு விண்ணப்பிப்பது, விண்ணப்பதாரர்கள் விசா மையத்திற்கு வருவதற்குப் பதிலாக, VFS ஊழியர்களே விண்ணப்பதாரரின் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ நேரில் சென்று கைரேகை மற்றும் ஆவணங்களைச் சேகரிக்கும் பிரீமியம் சேவையை உலகளவில் அதிகரிப்பது, விசா மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளின் பாஸ்போர்ட் புதுப்பித்தல், சான்றிதழ் சரிபார்ப்பு (Attestation) போன்ற தூதரகப் பணிகளையும் தங்களது மையங்கள் மூலம் விரிவாக்கம் செய்வது என பல திட்டங்கள் அதன்வசம் உள்ளன.
எல்லாரும் தான் தினமும் நம் அன்றாட வாழ்வில் பிரச்சனைகள் இருப்பதைப் பார்க்கிறோம். சலித்துக்கொண்டே அதை நாமும் செய்கிறோம். இதைத் தீர்க்க என்ன செய்யலாம், அதில் எப்படி சம்பாதிக்கலாம் என யாருக்காவது தோன்றுகிறதா?
மக்களுக்கு தூதரக வாசலில் பழியாகக் கிடப்பது பழகிவிட்டது. தூதரக அதிகாரிகளுக்கும் சிந்தனை "மேலும் பெரிய கட்டிடத்தை வாங்கி புதிய அலுவலகம் திறக்கலாம், புதிதாக ஆட்களை பணிக்கு எடுக்கலாம்" எனத் தான் போகுமே ஒழிய இப்படி வேலையை அவுட்சோர்ஸ் செய்யத் தோன்றாது.
அப்படி தோன்றி, அதைச் செயல்படுத்தியதால் தான் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் நிர்வாகியாக இருந்தவர் இன்று பில்லியன் டாலர் நிறுவனம் ஒன்றின் சி.ஈ.ஓ ஆக இருக்கிறார். உலகில் பலரின் சிக்கல்களையும் தீர்த்து வைத்தார்.
"பில்லியன் பேரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பவரால் தான் பில்லியனர் ஆகமுடியும்" - எலான் மஸ்க்
பிசினஸ் பிஸ்தாக்கள்
~ நியண்டர் செல்வன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக