சனி, 27 பிப்ரவரி, 2021

அனிதாவின் பெயரை பயன்படுத்த வேண்டாம் .. அனிதாவின் தந்தை த. பகுஜன் கட்சியிடம் வேண்டுகோள்

May be an image of 2 people and outdoors
Anitha Manirathinam S A : · அப்பாவின் பதிவு..... நான் ஏற்கனவே என் மகளை இழந்துவிட்டேன்... எங்களை விட்டு விடுங்கள்... தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் அன்பு அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வணக்கம்.  என் மகள் அனிதா இறந்தபோது தமிழ்நாடே எங்களுக்கு ஆறுதல் தந்தது நீங்களும் நேரில் வந்து ஆறுதல் கூறினீர்கள்.. அது மட்டுமில்லாமல் அனிதாவிற்கு பல்வேறு நினைவேந்தல் கூட்டமும் நடத்தினீர்கள், தங்கை அனிதா பெயரில் பெரம்பூரில் "அனிதா அறிவு மையம் " தொடங்கியுள்ளீர்கள் அதற்கு நானும் எங்கள் குடும்பமும் என்றும் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
ஆனால், எனது மூன்றாவது மகன் பாண்டியன் அவர்களை உங்கள் கட்சியின் குன்னம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது எனக்கோ, அனிதாவின் குடும்பத்தினருக்கோ துளியும் உடன்பாடில்லை.
மகளை இழந்தது மட்டுமில்லாமல் தினம் தினம் பல்வேறு மன உளைச்சல்களுக்கும் ஆளாகி வருகிறோம். எதன் அடிப்படையில் பாண்டியனுக்கு நீங்கள் சீட் கொடுத்தீர்கள்? கட்சிக்கு அவரின் செயல்பாடுகள் என்ன? அனிதா உயிருடன் இருக்கும் போது அவரின் சமூக செயல்பாடுகள் என்ன? உங்கள் கட்சிக்காக காலங்காலமாக உழைத்த பலர் இருக்கும் போது,என் மகள் அனிதாவின் பெயரை மட்டுமே பயன்படுத்தி சீட் வழங்கியிருப்பது உங்கள் கட்சியினருக்கே நீங்கள் செய்யும் அநீதி.
உள்ளூரில் இருக்கும் BSP கட்சியினர் எங்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக பாண்டியன் அவர்களை எங்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறார்கள். அவன் சின்ன பையன்,அனிதாவின் தந்தை எனும் பட்சத்தில் என்னிடமாவது கேட்டிருக்க வேண்டும். இதனால் எங்கள் குடும்பத்திற்குள்ளும் பிரச்சினை எழுகிறது. ஆகவே அண்ணன் அவர்கள் தயவுசெய்து மாற்று வேட்பாளரை அறிவித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பாண்டியன் அவர்களை சுயநலத்திற்காக பயன்படுத்தும் ஊரில் உள்ள BSP கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்தையும் தாண்டி அரசியலில் நிற்பது அவரின் தனிப்பட்ட விருப்பம் எனும் பட்சத்தில், அவர் எக்காரணம் கொண்டும் என் மகள் அனிதாவின் பெயரையோ, படத்தையோ பயன்படுத்தக்கூடாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் நீட் தேர்வை எதிர்க்காத உங்கள் கட்சித்தலைமையின் நிலைப்பாடு, EWS 10% ஆதரவு, CAA ஆதரவு இத்தகைய சூழலில் நீங்கள் என்னையும், என் குடும்பத்தையும் யாருக்கு எதிராக நிறுத்த முயலுகிறீர்கள் என்ற அச்சம் ஏற்படுகிறது.
என் மகள் அனிதா மீது அன்பு கொண்ட, நீட் தேர்வை எதிர்க்கும் தமிழர்களுக்குத்தெரியும் நீட் தேர்வை யார் தொடர்ச்சியாக நீட் தேர்வை எதிர்க்கிறார்கள் என்று.. நீட் தேர்வை யாரால் தடுக்க முடியுமோ நிச்சயமாக அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்வார்கள்.
அனிதாவின் அண்ணன் என்ற அடையாளத்தோடு வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக என் மகளின் படத்தையோ, பெயரையோ பயன்படுத்தும் பட்சத்தில்... மன்னித்து விடுங்கள் நானும் என் குடும்பத்தாரும் நிச்சயம் எங்கள் தொகுதியில் ஒட்டப்படும் சுவரொட்டிகளைக் கிழிப்போம்🙏
அனிதாவின் அப்பா
த.சண்முகம்
மற்றும் அண்ணன்கள்
Anitha Manirathinam S A
Sathishkumar Shanmugam
Shan Arun Kumar

கருத்துகள் இல்லை: