வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

திமுகவை வீழ்த்த ரூ.5,000 கோடி பாஜக பட்ஜெட்: விழுமா விக்கெட்?

திமுகவை வீழ்த்த ரூ.5,000 கோடி பாஜக பட்ஜெட்: விழுமா விக்கெட்?
மின்னம்பலம் : தமிழகத்தில் அதிமுகவுடன்தான் பாஜக கூட்டணி என்பதை உறுதிப்படுத்திவிட்டுப் போய் விட்டார் பிரதமர் மோடி. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளும்கூட தொடங்கிவிட்டன. ஆனால், தமிழகத்திலிருந்து டெல்லிக்குப் போய்ச் சேரும் உளவுத்துறை தகவல்கள், பாஜக தலைமைக்கு உவப்பானதாக இல்லை. திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்பதே எல்லா சர்வேக்களும் சொல்கின்ற சேதியாக இருக்கின்றன.கடந்த ஓராண்டுக்கு முன்பிருந்தே இத்தகைய தகவல்கள் வந்து கொண்டிருந்ததால்தான், ரஜினியை கட்சி தொடங்க வைத்து அதனுடன் கூட்டணி வைக்கலாமென்று பாஜக சார்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. மூன்றாவது அணி முயற்சியும் கைகூடவில்லை. முதல் அணியை பலப்படுத்த, அதிமுகவை மேலும் வலுவாக்க வேண்டுமென்று சசிகலாவை மீண்டும் இணைக்கலாம் என்று கணக்குப் போட்டது டெல்லி.

ஆனால், இந்த விவகாரத்தில் மட்டும் டெல்லியின் கட்டளையை ஏற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவருடைய சகாக்களும் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். தேர்தலுக்கு மிகவும் குறுகிய காலமே இருக்கும் நிலையில், திமுக கூட்டணியும் அப்படியே இருப்பது, பாஜக தலைமையைப் பதற வைத்திருக்கிறது. திமுகவை அல்லது திமுக கூட்டணியை உடைக்காமல் அதன் வெற்றியைத் தடுக்கவே முடியாது என்ற பதற்றத்தில் பாஜக அடுத்தடுத்த பல அஸ்திரங்களையும் தயார்படுத்திக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் பரவுகின்றன. இதற்காக பெரிய அளவில் பட்ஜெட் போட்டு வேலைகள் தொடங்கிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வந்ததால் அதுபற்றி பாஜக தலைமையிடத்தில் நம் விசாரணையைத் துவக்கினோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக கொசுறுத் தகவல்களை பலரும் பகிர்ந்துகொண்ட நிலையில், பாஜகவின் ‘ஆபரேஷன் டிஎம்கே’ பட்ஜெட் பற்றி விரிவாக விளக்கினார் டெல்லி பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் தமிழகத் தலைவர் ஒருவர்...

‘‘திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்பதில் எங்களுடைய கட்சித்தலைமை மிகவும் தீவிரமாக இன்னும் தெளிவாகச் சொல்வதானால் வெறியோடு இருப்பது உண்மைதான். அமித் ஷா பார்க்காத மாநிலமில்லை; தேர்தலுமில்லை. ஆனால், தமிழகம் அவருக்கு ஒரு சவாலாக இருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்தான். அதற்காக அவர் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. எந்த வகையிலாவது திமுகவை வீழ்த்த வேண்டுமென்று பல அதிரடித் திட்டங்களை அவர் வகுத்திருக்கிறார்.

ஏற்கெனவே சித்தாந்தரீதியாக இந்து வாக்கு வங்கியை உருவாக்கி, அதை திமுகவுக்கு எதிராகத் திருப்பி விடுவதற்காகப் பரிவார அமைப்புகள் மற்றும் தமிழக இந்து அமைப்புகளின் உதவியுடன் சமூக ஊடகங்களிலும், முக்கியமான தமிழ் ஊடகங்களிலும் தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். அதற்கு உடனடியாக பலன் கிடைக்குமென்று தெரியவில்லை. எடப்பாடி தலைமையிலான தமிழக அரசும், அதிமுக தலைமையும் எடுக்கும் விளம்பர முயற்சிகள், மக்களிடம் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர முடிகிறது. அது அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர உதவுமே தவிர, மீண்டும் ஆளும்கட்சியாக உதவாது என்பதே எங்களுடைய கட்சித் தலைமைக்குக் கிடைத்த உளவுத்துறை தகவலாக இருக்கிறது. அதனால் சில தொடர் தாக்குதல்களை கட்சி மேலிடம் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக 5,000 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போட்டு சில வேலைகளைத் தொடங்கியிருக்கிறது.

கடந்த வாரத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மதுரைக்கு வந்து போனதற்கு முக்கிய காரணம், மு.க.அழகிரியைச் சந்திப்பதற்குத்தான். அவரை ஸ்டாலினுக்கு எதிராகக் களமிறக்கி, ‘கலைஞர் திமுக’ என்றொரு கட்சியை உடனடியாகத் தொடங்க வேண்டுமென்று அழகிரி தரப்பிடம் பேசப்பட்டிருக்கிறது. ‘புதிய கட்சியைத் தொடங்குவதற்குத் தேவையான பண உதவி, மற்ற உதவிகள் அனைத்தையும் நாங்கள் செய்து தருகிறோம்’ என்கிற ரீதியில் பேசப்பட்டிருக்கிறது. அழகிரி எழுப்பக் கூடிய கேள்விகளுக்கு ஸ்டாலினால் பதில் சொல்ல முடியாது என்பதால்தான் அவரை தேர்தல் களத்தில் முக்கியமான ஆயுதமாக வைத்திருக்கிறோம்.

இது ஒருபுறம் நடக்க, கடந்த தேர்தலில் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, மக்கள் நலக்கூட்டணி அமைத்ததைப் போல இந்த முறை கமலை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, மூன்றாவது அணியை தமிழகத்தில் உருவாக்குவதற்கான முயற்சியும் தீவிரமாக நடக்கிறது. கமலும் கடும் பொருளாதார நெருக்கடியில்தான் கட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். அதனால் அவருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வதற்கு நாங்கள் தயாராகயிருக்கிறோம். அநேகமாக இது ஒர்க் அவுட் ஆகுமென்றே எதிர்பார்க்கிறோம். திமுக கூட்டணிக்குப் போக வேண்டிய வாக்குகளில் தொகுதிக்கு 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரையிலான வாக்குகளை இந்தக் கூட்டணி பிரித்தாலே எங்கள் கூட்டணி நிச்சயம் ஜெயித்துவிடும்.

இதையெல்லாம் தவிர்த்து, திமுகவிலும், திமுக கூட்டணியிலும் இருக்கும் சில தொழிலதிபர்களிடம் ‘வேறு விதமான’ பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் நடத்தும் கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவரை டெல்லிக்கு அழைத்து திமுகவுக்கு எவ்வித பொருளாதார உதவியும் செய்யக் கூடாது. தேவையெனில் நாங்கள் அழைக்கும்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி எங்கள் கூட்டணிக்கு வந்துவிட வேண்டும் என்று உரிமையோடு பேசியிருக்கிறோம். நாங்கள் பேசிய தொனியில் அவர் பயந்துபோயிருக்கிறார்.

அதேபோல் திமுகவில் முக்கியமானவர்களாக இருக்கும் பெரும் பணபலம் உள்ளவர்களிடம் பேசவேண்டிய முறையில் நாங்கள் பேசிக் கொண்டிருப்பதற்கு கொஞ்சம் கொஞ்சமாக பலன்கள் கிடைத்து வருகிறது. அவர்கள் ஸ்டாலினையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து தமிழக அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்துவார்கள். எல்லாம் சேர்ந்து திமுகவைக் கண்டிப்பாக வீழ்த்தும். அமித் ஷாவின் அதிரடி அரசியல் ஆட்டம் தமிழகத்தில் இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறது. இன்னும் ஒரு மாதத்துக்குள் என்னென்ன பட்டாசுகள் வெடிக்கப் போகின்றன என்று பொறுத்திருந்து பாருங்கள்!’’ என்றார்.

திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் வட்டாரத்தில், இந்தத் தாக்குதல்கள் குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்கிறார்களா என்று விசாரித்தபோது, ஏறத்தாழ எல்லாத் தகவல்களும் திமுக தலைமைக்கும் போய்க் கொண்டிருப்பது தெரியவந்தது. ஆனால் திமுக தலைமை தரப்பில் இதை எதிர்கொள்வதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரியவில்லை. எத்தனை தடைகள் வந்தாலும் ஜெயித்துவிடுவோம் என்ற அதீத நம்பிக்கையில்தான் திமுக தலைமை இருக்கிறது என்பதே நமக்குக் கிடைத்த தகவல்.

பாஜகவின் 5,000 வாலா பட்ஜெட் பட்டாசு வெடித்துச் சிதற வைக்கப் போகிறதா... புஸ்வாணமாகப் போகிறதா?

-பாலசிங்கம்

கருத்துகள் இல்லை: