வியாழன், 25 பிப்ரவரி, 2021

டிரம்ப்பை விட மோசமான விதி.. பிரதமர் மோடிக்கு காத்திருக்கு - ஆக்ரோஷ மோடில் மம்தா பானர்ஜி

Anbarasan Gnanamani - /tamil.oneindia.com மேற்குவங்கம்: எங்களை வெல்வது அவ்வளவு எளிதானது அல்ல.
இந்த மண்ணில் பாஜகவுக்கு ஒரு கல்லறையை உறுதி செய்வேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸை எப்படியாவது இந்த தேர்தலில் காலி செய்துவிட வேண்டும் என்று இறங்கி வேலை செய்து வருகிறது பாஜக.
மம்தாவும், பதிலுக்கு மல்லுக்கு நிற்க, மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது
இந்நிலையில், ஹூக்ளியில் நடந்த ஒரு பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மம்தா, "பிரதமர் மோடி மிகப்பெரிய கலகக்காரர். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட மோசமான விதி பிரதமர் மோடிக்கு காத்திருக்கிறது.
வன்முறையிலிருந்து எதையும் பெற முடியாது. மோடியும் அவரது நண்பரும், இந்த இரண்டு மாதங்களில் எவ்வளவு பேச முடியுமோ பேசிக் கொள்ளுங்கள்.
ஏனெனில், அதற்கு பிறகு நாங்கள் தான் பேசுவோம். 

மேற்கு வங்கத்தை வெல்வது அவ்வளவு எளிதானது அல்ல. இந்த மண்ணில் பாஜகவுக்கு ஒரு கல்லறையை உறுதி செய்வேன்.

பிரதமர் பதவியை நான் மதிக்கிறேன். இன்று அவர் (பிரதமர் மோடி) அப்பதவியில் இருக்கிறார். நாளை இருக்கமாட்டார். அவர் பொய் சொல்கிறார். வங்காள சட்டசபை தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜக ஒரு கோல் கூட அடிக்க முடியாது. எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள். நான் உட்பட 20 லட்சம் தொண்டர்கள் உள்ளனர். நீங்கள் என்னை இங்கே அடக்கம் செய்தீர்கள் என்றால், நான் டெல்லியில் ஒரு மரம் போல் வளர்வேன். காயப்பட்ட புலி ஆபத்தானது. விளையாட்டு தொடங்கிவிட்டது. மேற்கு வங்கத்தில் நீங்கள் (வாக்காளர்கள்) அவர்களை(பிஜேபி) தோற்கடிக்க முடிந்தால், அவர்கள் இந்தியாவில் இருந்தே காணாமல் போய் விடுவார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: