வியாழன், 25 பிப்ரவரி, 2021

ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது: மத்திய அரசு!

மின்னம்பலம் :இந்திய திருமண சட்டத்தின் கீழ் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒன்று, எல்ஜிபிடி(LGBT ) சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இந்து திருமண சட்டத்தின் கீழ் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தனர். மற்றொன்று, கடந்த எட்டு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் கவிதா அரோரா, அங்கிதா கன்னா தம்பதிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய முயன்றபோது, சம்பந்தப்பட்ட நீதிமன்ற அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால், ஒரே பாலின திருமணத்தை சிறப்பு திருமண சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.... 

இந்த மனு மீதான விசாரணையில் மத்திய அரசு, ”ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் தம்பதிகளாக ஒன்றாக வாழ்வதையும், குடும்ப வாழ்க்கையை மேற்கொள்வதையும், இந்திய குடும்ப அலகு கருத்தாக்கத்துடன் ஒப்பிட முடியாது. திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது என்பது சட்டமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டியதே அல்லாமல், ஒருபோதும் அது நீதித்துறையின் பொருளாக இருக்க முடியாது.

ரத்து 21வது பிரிவின் கீழ் அடிப்படை உரிமை என்பது சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைக்கு உட்பட்டது. அதன் கீழ் ஓரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பது அடிப்படை உரிமையாக சேர்க்க முடியாது.

இந்தியாவில் திருமணம் என்பது ஒரு சடங்காக கருதப்படுகிறது. மேலும், பழைய பழக்க வழக்கங்கள், கலாச்சார நெறிமுறைகள், சடங்குகள் மற்றும் சமூக விழுமியங்களை பொறுத்தது. ஒரே பாலின சேர்க்கையை சட்டவிரோதம் என அறிவித்த பிரிவு 377 நீக்கப்பட்டாலும், அதன் அடிப்படையில் ஒரே பாலின திருமணத்தை அடிப்படை உரிமையாக கோர முடியாது. ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பது, தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தை மீறும் செயலாக இருக்கும்” என தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பான பிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய அவகாசம் கொடுத்து ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-வினிதா

கருத்துகள் இல்லை: