கலந்துரையாடல் ஆரம்பிச்ச அடுத்த பத்தாவது நிமிசம் தான் யாரென்பதை தெளிவா நமக்கு புரிய வெச்சிடுறாருல்ல அந்த நேர்மை மிகவும் பாராட்டிற்குரியது!
ரத்னகுமார் இளையராஜாவ எதுவும் அவதூறா பேசிட்டாரா ? இல்ல, நடக்காத விசயங்கள இட்டுக் கட்டி சொல்றாரானு கேட்டா ? அப்படியெல்லாம் இல்ல, ரத்ன குமார் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை. இங்கிட்டு ரத்ன குமார் தேவருக்கு ஒரு ஆதங்கம் இருக்குது. அதாவது, இளையராஜாவின் அண்ணனாகிய பறையன் ஒருவன், ஒக்காலிக கவுண்டர்கள் வாழும் தெருவுல செருப்பு போட்டு நடந்ததுக்காக கெட்டி வெச்சி அடிச்சப்ப எங்கப்பாதானே காப்பாத்துனாரு ?
அன்னைக்கு இளையராஜா குடும்பம் சோத்துக்கு வழியில்லாம கஷ்டப்பட்டப்ப நாங்கதானே மூட நெறைய சோளம் குடுத்தோம் ?
பறையர்களோட சமூக விடுதலைக்குதானே எங்கப்பா காந்திய இயக்கம் கட்டி போராட தயாரானாரு ?
அவங்க அம்மாவெல்லாம் எங்கப்பாவ பாத்தா சாமி மாதிரி கையெடுத்துக் கும்புட்டாங்க தெரியுமா ?
இவ்வளவு செய்தும் நன்றியே இல்லாத இளையராஜா, எனக்கு ஒரு சிபாரிசு கடிதம் கூட குடுக்கலயே ?
அன்னைக்கு அவுரு அதப் பண்ணியிருந்தா இன்னைக்கு நான் ஐ.ஜி ஆயிருப்பேன். பண்ணாததால பாருங்க புடிக்காத சினிமாத்துறையில கெடந்து கஷ்டப்படுறேன். அன்னைக்கு சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டப்ப இளையராஜா நல்லவருதான். ஆனா, இன்னைக்கு சினிமாவுல பெரிய ஆளா ஆனதும் எல்லாத்தையும் மறந்துட்டாரு. அவரக் கெடுத்ததே இந்த சினிமாக்காரனுவதான். அவுரு குறுக்கப் போயி நின்னா தள்ளி விடுறானுங்க, எதோ பெரிய கடவுள் மாதிரி பம்முறானுங்க. ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன் 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்பதே அது!
ரத்ன குமார் தேவரோட வாய்ல இருந்து வர்ற இந்த வார்த்தைகள் இருக்குல்ல இத எப்படி புரிஞ்சிக்கிறது ?
இது வெறும் அவரோட வார்த்தைகள் இல்ல, தன்ன ஆதிக்க சாதியா நெனச்சிக்கிற தேவர் சமூகத்தின் ஒட்டு மொத்த பிரதிபலிப்பே ரத்னகுமாரின் வார்த்தைகள். ரத்ன குமாரயும், இளைய ராஜாவையும் விடுங்க.
ஆடு மேய்க்கும் தேவர் சாதியைச் சார்ந்த ஒருவர்; அதே கிராமத்தில் தாசில்தாராகவோ, வி.ஏ.ஓவாகவோ பணியில் இருக்கும் பறையர் சாதியை சார்ந்த ஒருவரை எப்படி பாப்பாரு ?
தாசில்தார் இல்ல டிஸ்ட்டிரிக் கலெக்டராவே இருந்தாலும் கூட ஆடு மேய்க்கும் அண்ணாமலைத் தேவருக்கு அவரெல்லாம் "ஆளு மயிறே இல்ல" என்பதுதான் சமூக யதார்த்தம்.
ஆனானப்பட்ட அம்பேத்கரே இன்னும் சேரியத் தாண்டி ஊர் தெருவுக்குள்ள கால் வைக்க முடியாதப்ப நேத்து வந்த கலெக்டர் பறப் பய யாரு ?
ஒரு முதலாளி, தனக்கு கீழ வேல பாக்குற தொழிலாளிக் கிட்ட "மாசம் பொறந்தா நான் குடுக்குற சம்பளத்துல தானே நீ ஒம் புள்ளைங்கள படிக்க வைக்கிற ?
மூணுவேள சாப்பாடு திங்குற ?
கரண்டு பில்லு கட்டுற ?
துணிமணி வாங்குற ?”ன்னு நீட்டிகிட்டே போனான்னு வைங்க, அந்தத் தொழிலாளி அடுத்த வார்த்த என்ன கேப்பான் ?
"ங்கோத்தா காலையிலருந்து சாயங்காலம் வரைக்கும் ஒங் கம்பெனியில மாட ஒழச்சதுக்கு நீ குடுத்த கூலி அது. எதோ நான் வீட்ல சும்மா இருந்த மாதிரியும், நீ மாசம் ஒன்னாந்தேதி பொறந்தா அக்கவுண்ட்ல பணம் போட்ட மாதிரியும் இஷ்டத்துக்கு அளக்குற ?”னு கேப்பான்.
ஆனா, சாதியக் கட்டமைப்பு இறுகிப்போன பண்ணையடிமை சமூகத்துல ஒங்களுக்கு 'கூலி'ங்குற பேச்சுக்கே இடம் கிடையாது. நீங்க உயிர் வாழ்றதுக்காக பண்ணையார் குடுத்த ஒரு மூட்ட சோளம் கூட "தானம்" என்கிற பெயரில் வரவு வவைக்கப்பட்டு 50 வருடங்களுக்கு பிறகு யூ-டியூப் சேனல் ஒன்றில் சொல்லிக் காட்டப்படும். அதற்கு ரத்ன குமாரே சாட்சி!.
புதிய ஜனநாயகம் இதழ்ல தோழர்.சரசம்மா, பண்ணைப்புர தலித்துகளோட வாழ்வியலையும்,
ஆதிக்சாதி வெறியர்களால் அம்மக்கள் சுரண்டப்படுவதையும் பத்தி புள்ளி விவரத்தோட ஒரு கட்டுரை எழுதியிருந்தாங்க. ஒரு மூட்ட சோளத்திற்கு கணக்கு பார்க்கும் ரத்னகுமார் வகையறாக்கள் தொடந்து படித்து விட்டு அவர்களுக்கான நியாயமான கூலியை உடனே வழங்கவும். மேலும், எங்களுக்கு உங்களின் தானமோ, தருமமோ தேவையே இல்லை என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
பண்ணைப்புரம்-இளைய ராஜவைத் தெரிந்தவர்களுக்கு அவர் பொறந்து வளர்ந்த ஊரான பண்ணைப்புரத்தையும் தெரிந்திருக்கும். மதுரை மாவட்டத்தோட மேற்கு பக்கம் இருக்குற பண்ணைபுரத்த பொறுத்த வரைக்கும் ஊர் பேர்லயே இருக்குற மாதிரி பண்ணையாரும், அவங்களோட பண்ணையில வேலை செய்யும் பண்ணையடிமைகளும் உண்டு.
ஒக்கலிக கவுண்டர்கள் — 400 குடும்பங்கள், பறையர் சமூகத்தினர் – 400 குடும்பங்கள், சக்கிலியர் சமூகத்தினர் – 150 குடும்பங்கள், செட்டியார், கள்ளர் போன்ற பிற ‘மேல் சாதி’யினர் சில குடும்பங்கள்- என்பதுதான் பண்ணைப்புரம் மக்கள் தொகையின் சாதிவாரியான சேர்க்கை.
ஒரு ஆதிக்க சாதி குடும்பத்துக்கு தலித்து அடிமையாய் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்பதை வகை வாரியாக பிரித்து வைச்சிருக்காங்க. அப்படி பிரிக்கப்பட்ட குடும்பத்துக்கு கல்யாணம் முதல் கருமாதி வரைக்கும் அடிமை வேலை செய்யணும்.
இருவது முப்பது குடும்பம் கொண்ட வகையறாவுக்கு நாலு அஞ்சு தலித் குடும்பம் அடிமையா இருக்கணும். இப்படி வகை பிரிக்கப்பட்ட ஆதிக்க சாதியின் முப்பது குடும்பங்களில் நாலு அல்லது அஞ்சு பணக்காரங்க இருப்பாங்க. மீதமுள்ள அனைவரும் சாதாரண விவசாயி அல்லது கூலி விவசாயியாகத்தான் இருப்பாங்க.
தலித் குடும்பத்தை வருச பண்ணையாளா பணக்காரன்தான் வச்சுக்குவான். உழைப்பின் தேவையும் அவனுக்குதான் இருக்கும். ஆதிக்க சாதியில் சாதாரண விவசாயிக்கு ஆள் வச்சு செய்ற அளவுக்கு வேலை இருக்காது. ஆனால் இவர்களுக்கும் மேல் சாதிக்கு உரிய அடிமை சம்பிரதாய வேலையை செய்ய வேண்டும்.
ஆதிக்க சாதியின் வீட்டு பண்ணையாளா இருக்குறவங்க, விவசாய வேலைக்கி கூலி வாங்கக் கூடாது. வருசத்துக்கும் வேலை பாத்துட்டு கடைசியா கொஞ்சம் நெல்லு கொடுப்பாங்க. அதுதான் வருசக் கூலி. அது அவங்க உழைப்புக்கு ஏத்த ஊதியமா இருக்காது. பண்ணைக்கு இருக்குறவங்க, முதலாளி வீட்டு வேலை இல்லாத அன்னைக்கு வேற யாருக்காவது கூலிக்கு வேலைக்குப் போகலாம்.
வகை பிரிக்கப்பட்ட அத்தனை தலித்துக் குடும்பமும், பணக்கார ஆதிக்க சாதி வயல் வேலைக்கு வருசம் பூராவும் வந்தாகணும். அதுக்கும் கூலி கிடையாது, கலம் பொடைக்கிறது மட்டும் தான். கதிரறுத்து அடிக்குற நெல்ல அள்ளுனது போக கீழ சிந்திக் கொடக்குற நெல்லையும், கருக்காவுல ஒதுங்குன நெல்லையும் சுத்தம் செஞ்சு பங்கு போட்டு எடுத்துக்கணும். கூலி இல்லாம வேல செஞ்சுட்டு, சிந்துனது செதறுனத எடுத்துக்கறதுக்கு பேருதான் கலம் பொடைக்குறது.
அப்படிப் பண்ணைக்கு இருக்கும் போது அவங்களுக்கு சாப்பாடு மாட்டுக் கொட்டைகையிலதான் போடுவாங்க. இல்லன்னா திண்ணையில ஒரு மூலையில ஓரமா ஒக்கார வச்சு போடுவாங்க. சாப்பிடும் பாத்திரம் அவங்களே வச்சுக்கணும். அதையும் மாட்டுக் கொட்டகையில ஒரு ஓரமா சொருகி வைக்கணும். தொட்டுக்க வாங்க பாத்திரம் வச்சுக்கலன்னா பூவரச இலையில கொடுப்பாங்க, இல்லன்னா கொட்டாங்குச்சியில (தேங்கா சிரட்டை) கொடுப்பாங்க. மீறி ஏதாவது தண்ணி கொடுக்குற மாதிரி வந்தா, தலித்துக்குன்னு ஒரு பாத்திரம் இருக்கும் அதுல தண்ணி குடுப்பாங்க குடிச்சுட்டு பாத்திரத்த குப்பற கவுத்து வைக்கனும். பாத்திரத்து மேல தண்ணிய ஊத்தி தீட்டு கழிச்சுட்டு எடுத்துப்பாங்க. ஊருக்குள்ள வரும் போது தண்ணி தாகம் வந்து யாரிடமாவது தண்ணி கேட்டா பாத்திரத்துல கொடுக்க மாட்டாங்க, கைய குவிக்கச் சொல்லி கையில ஊத்துவாங்க குடிச்சுக்கணும்.
வயல்களில் வேலை செய்யும் போது தலித்துகளுக்கு சாப்பாடு, பாத்திரத்துல போட மாட்டாங்க. வயல்ல இருக்கும் பணங்குட்டி மட்டைய வெட்டி ஓலையில் தொண்ணை செஞ்சு அதுல ஊத்துவாங்க. கொழம்பு வச்ச சாப்பாடே கிடையாது. கஞ்சி சாப்பாடு மட்டும் தான். தொட்டுக்க உப்பு போட்ட மாங்காகீத்து அத கடிச்சுக்கணும். இதுதான் அவங்களுக்கு ஒதுக்குன சாப்பாடு.
ஆதிக்க சாதி கல்யாணம், காதுகுத்து, வளைகாப்பு, பூப்பு நீராட்டு, நிச்சயதார்த்தம்னு எல்லா நல்லது கெட்டதுக்கும் வெறகு ஒடைக்கணும், பந்தல் போடணும், வாழைமரம் கட்டணும், பொம்பளைங்க வீட்டுக்கு வெளிய உள்ள தட்டு முட்டு வேலை பாக்கணும், எச்சி இலை எடுக்கணும், அண்டா குண்டா கழுவணும், விசேசம் முடிச்சதும் இதுக்கு எல்லாம் கூலியா கூட சோறு வாங்கிக்கணும்.
விசேசம் நடக்கும் பந்தல்லயே தலித்துகள் தப்பு மேளத்தோடு, தட்டு வருசை, சாமானோடு ஆடு புடிச்சு கட்டணும். இது எதுக்குன்னா ஊருக்குள்ள பள்ளன், பறையன வச்சு வேலவாங்கற பரம்பர சாதிக்காரன்தான் நானு, ஆளா சங்கதியா இருக்கென்னு கெத்து காண்பிக்க. வந்தார் குடின்னு சொல்ற ஆட்களுக்கு வகை பிரிச்சு ஒதுக்குற தலித் முறை இருக்காது. தலித்து ஒதுக்கப்படலன்னா அவங்கள அந்த ஊர் ஆதிக்க சாதியில் சமமா பாக்க மாட்டாங்க. பொண்ணு கொடுக்குறவனும் எடுக்குறவனும் சம்பந்தம் பண்ண தயங்குவாங்க.
ஆதிக்க சாதிக்காரன் வீட்டுல மனுசன் செத்தாலும், மாடு செத்தாலும் மொதல்ல தலித்துக்குதான் சொல்லுவாங்க. அவங்க வந்துதான் பந்தல் போடணும், தப்பு கொட்டணும், கொம்பூதணும், பாட கட்டணும், பொணத்த எரிக்க மரம் வெட்டணும், ஊரு ஊரா சொந்தக்காரனுக்கெல்லாம் எழவு சொல்லி போகணும், பொணத்த தூக்கிட்டு சுடுகாடு போறதுக்குள்ள பந்தல் பிரிக்கணும், பொணத்த எரிக்கணும் இதுக்கெல்லாம் எந்த கூலியும் கெடையாது.
துக்கத்துக்கு வர்ர ஒரமரக்காரன் (சம்மந்தி) மொறையுள்ள எல்லாரும் எளவு பணம்னு அஞ்சு பத்து மொய் போடுவாங்க. சம்பந்தி கொட்டுன்னு நெல்லு கொஞ்சம் கொண்டுட்டு வருவாங்க. இந்த நெல்ல வித்துட்டு அதுல வர்ர பணத்தையும், எளவு பணத்தையும் சேத்து, தப்பு அடிச்சவங்க மொதக்கொண்டு, பொணம் எரிச்சவங்க, பந்தப் போட்டவங்க வரைக்கும் சாவுக்கு வேலபாத்த எல்லா தலித்தும் பிரிச்சு எடுத்துக்கணும். அந்த பணம் அவங்களுக்கு ஒரு நாள் சாப்பாட்டுச் செலவுக்கே வராது.
வெளியூருக்கு துக்கம் சொல்லி போறவங்களுக்கு சைக்கிள் மட்டும்தான் கொடுப்பாங்க, துக்கம் சொல்லப்போன வீட்டுல ஒருபடி நெல்லு கொடுப்பாங்க ஒரு ஊருபூராச் சொன்னாலும் ரெண்டு – மூணு கிலோ நெல்லு தேறாது. அத வித்துத்தான் அவர் வழிச்செலவு, சாப்பாடு, டீ, எல்லாத்துக்கும் வச்சுக்கணும். அஞ்சாறு ஊருக்கு ஒரு ஆளுன்னு கணக்கு வச்சு, பத்து பேருக்கு மேல துக்கம் சொல்லி போவணும்.
இது தவிர பொங்கல், தீபாவளின்னா ஆதிக்க சாதிக்காரங்க வீட்டுக்கு சாப்பாடு வாங்க தலித்துகள் வரணும். பொங்கல்னா கரும்பு, வாழப்பழம், பச்சரிசி, கொடுப்பாங்க. வாழப்பழம்ன்னா இருக்குறதுலயே சின்னதான காயா இருக்கும் அது பழுக்கவே பழுக்காது. தலித்துக்களுக்கு கொடுக்குறதுக்குன்னே மார்க்கெட்டுல மலிவா விப்பாங்க. கரும்பும் அப்படிதான் வெளையாததா பாத்து கொடுப்பாங்க, வீட்டுல உள்ளவங்களுக்கு எல்லா காயும் போட்ட கூட்டு, தலித்துக்கு மட்டும் பரங்கிக்காவுல பண்ணுன கூட்டு.
தீபாவளின்னா பலகாரம் வாங்க வரணும். அதுவும் இதுபோலதான் முறுக்கு, அதிரசம், லட்டு, பாதுசா, நெய்யுருண்டைன்னு, வகவகயா செஞ்சு வச்சுகிட்டு, இவங்களுக்கு மட்டும் இட்லியும், அரிசில நாலு உளுந்தப் போட்டு வடையின்னு பேருவச்சு சுட்டுப்போடுவாங்க, வருசத்துக்கு ஒரு நாள் வர்ரதுக்கே இப்படி பாகுபாடு பாத்து, இழிவு படுத்தி சாப்பாடு போடுவாங்க.
"முன்னமாதிரி எல்லாம் இப்ப யாரும் சாப்பாடு வாங்க வர்றதே இல்ல, பறப்பயலுவொ கொழுத்து போயி திரியரானுவ”ன்னு அதிகாரம் வேற தூள் பறக்கும்.
இப்படி வகைப்படுத்தப்பட்ட தலித்துக்கள் வீட்டு திருமணம் என்றால் அவர்களை அடிமைகளாக கொண்ட ஆதிக்க சாதியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து தாலியும், பொண்ணு – மாப்பிள்ளைக்கு புதுத்துணியும் எடுத்துக்கொடுக்கனும்.
ஆதிக்க சாதி மனிதர்கள் தலித்து திருமணத்துக்கு போக மாட்டாங்க. திருமணம் முடிந்ததும் தம்பதிகள் மணக்கோலத்திலேயே ஆதிக்க சாதி வீட்டுக்கு வந்து ஆசிர்வாதம் வாங்கணும். மணக்கோலத்திலயே தம்பதிகள் ஊர் பார்க்க நடந்து வந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்றால் அவர்களுக்கு எந்த அளவு கூசிப்போவார்கள் என்பதை ஒரு முறை யோசித்து பாருங்கள்.
இப்படி ஒடுக்கப்பட்ட மக்கள பிறப்பு முதல் இறப்பு வரை சுரண்டிக் கொழுத்து வாழ்ற ஆதிக்கசாதிகள், அந்தக் கூட்டத்துல ஒருத்தன் அடிச்சி, புடிச்சி மேல வந்துட்டான்னு வைங்க, கூச்சமே இல்லாம சொல்ற வார்த்த என்ன தெரியுமா?
"நாங்க மட்டும் அன்னைக்கு சோறு போடலனா நீயெல்லாம் வளந்துருக்க முடியுமா ?”ங்குறதுதான்.
உளவியலா அட்டாக் பண்றாங்களாமாம். ஒழைக்கிறவன பட்டினிப் போட்டு அவன் சோத்த புடிங்கி தின்னதுக்காக நீங்கதான் வெக்கப்படனும் செண்ட்றாயன்.
இளையராஜாவுக்கு இதெல்லாம் தெரிஞ்சுமா அமைதியா இருக்காரு ?சேச்சே, நீங்க வேற தெரிஞ்சா அமைதியா இருப்பாரா சொல்லுங்க ? அவுரு சின்ன வயசுலயே சினிமா, மியூசிக்னு மெட்ராஸ் பக்கம் வந்துட்டதால இதெல்லாம் தெரியாமலயே வளந்துட்டாரு. ஆனாலும், செத்துப் போன வடிவேல் கவுண்டர் பண்ணையாருலருந்து அவரோட மகன் பிரசாத் பண்ணையார் வரைக்கும் நெருக்கமான நட்பு வட்டத்துல இருக்குறதால ஏதாவது ஒன்னு ரெண்டு விசயங்கள் தெரிஞ்சிருக்கலாம்!
இல்லனா, 'போற்றிப் பாடடி பொண்ணே, தேவர் காலடி மண்ணே', 'கவுண்டர் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்’னுலாம் பாடுவாரா என்ன ?
ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி பண்ணைப்புரத்துல 'இரட்டை குவளை' முறைக்கெதிரா 'விவசாயிகள் விடுதலை முன்னணி' தோழர்கள் போராடிட்டு இருந்தாங்க. இந்த இரட்டைக் குவளையால அதிகம் பாதிக்கப்பட்டது பண்ணையூர் பறையர் சமூக மக்கள்தான். பக்கத்து ஊரான கூடலூர் தேவர்சாதி வெறிக்கு பேர் போன ஊர். அந்த ஊரைச் சேர்ந்த தேவர்சாதி வி.வி.மு தோழர்கள், பறையர்கள் மீது நடத்தப்படும் கொடுமைக்கெதிரா தீவிரமா களத்துல நிற்க, போலீஸ் தோழர்கள அடிச்சி தர, தரனு இழுத்துட்டு போறாங்க!
அங்கிட்டு கூப்புடும் தூரத்தில் கார்ல ஏறப்போன யுவன் சங்கர் ராஜாவும், இசைஞானியின் மனைவியும் "என்ன ?"னு கூட கேக்கல! அவங்க கேக்காதத நெனச்சி ஒன்னும் வருத்தம் இல்லனாலும், அவங்க பாத்தத கூட இசைஞானிகிட்ட போயி சொல்லலயேனு ரெம்ப வருத்தமாயிடிச்சி!
இப்பக்கூட ரத்தனகுமாரோட சாதிவெறி பேச்சுக்கு நீங்களும், நானும்தான் கண்டனம் தெரிவிக்கனுமே தவிர இசைஞானி பாடுறத தவிர வேறெதுக்கும் வாயே தொறக்க மாட்டாரு! ஏன்னா, அவுரு சாதியிலதான் தாழ்ந்தவரே தவிர வர்க்கத்துல பண்ணையாருக்கே டஃப் ஃபைட் குடுக்கக் கூடியவரு!
எனக்கென்னவோ அவுரு தொறக்காம இருக்குறதே நல்லதுனு நெனக்கிறேன். "அய்யா ரத்னகுமார் ஒங்கள இழிவா பேசுறாருய்யா"னு நாம போயி சொல்ல, "ஒனக்கு அறிவு இருக்கா ?"னு அவுரு நம்மளப் பாத்து கேட்டாலும் ஆச்சர்யப்படுறதுகில்ல!
So, அமைதி காப்போம் தோழர்களே. தேவன்தாமே கேட்டுக்கொண்ட திருவசனங்களால் நம்மனைவரையும் ஆசிர்வதிப்பாராக!
ஆமென்
இறைதூதர்
ஏவின்
பாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக