வியாழன், 25 பிப்ரவரி, 2021

சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை... வதந்திகளை நம்ப வேண்டாம் - முத்தரசன் கோரிக்கை

Jeyalakshmi C - tamil.oneindia.com : சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரைப்பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு 89 வயதாகிறது. வயது முதிர்வு காரணமாக உடல்நிலையில் அவ்வப்போது பாதிப்பு ஏற்படும். நேற்று காலை அவர் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். 
தா.பாண்டியனுக்கு சிறுநீரக பிரச்சினை, நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் உள்ளன. உயர் ரத்த அழுத்தமும் உள்ளது. இதனால் அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது. 
 இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் உடன் இருந்து அவரது உடல்நிலையை கவனித்து வருகிறார்கள். 
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று தா.பாண்டியனுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்குமாறு டாக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தா.பாண்டியனின் உடல்நிலை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், தா. பாண்டியன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் காலமாகி விட்டதாக வருவதாக செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் முத்தரசன் கூறியுள்ளார்.

 

கருத்துகள் இல்லை: