புதன், 24 பிப்ரவரி, 2021

புதுச்சேரியை அடுத்து தமிழ்நாடு - அமித் ஷாவின் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: புதுச்சேரியை அடுத்து தமிழ்நாடு - அமித் ஷாவின் திட்டம்!
minnambalam.com : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.

“புதுச்சேரியில் தேர்தலுக்கு இரு மாதங்கள் இருக்கும்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களைக் கவிழ்த்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நான்கு வருடம் 11 மாதங்கள் நீடித்த ஆட்சியைத் தேர்தலுக்கு முன் திடீரென எங்களால் தூக்கிப் போட முடியும் என்று டெல்லியில் இருந்து அமித் ஷா நடத்திய அரசியல் ஆபரேஷன்தான் இது.அதேபோல தமிழ்நாட்டிலும் ஓர் அரசியல் ஆபரேஷனைத் தொடங்கியிருக்கிறார் அமித் ஷா. பிப்ரவரி 22ஆம் தேதி சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலேயே இதை வெளிப்படையாகக் குறிப்பிட்டார் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், ‘புதுச்சேரியில் நடந்தது ஒரு ரிகர்சல்தான். தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்க இருக்கிறதோ’ என்று கூறியிருந்தார் திருமா.

திமுக கூட்டணிக்குத் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையக்கூடும் என்று கணிப்புகள் மத்திய அரசுக்கும் கிடைத்த நிலையில்தான் இந்த ஆபரேஷன் அதிரடியாக அரங்கேற்றப்படுகிறது. அதாவது கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, இவற்றோடு தேமுதிக ஆகிய கட்சிகளும் சேர்ந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்டன. இந்த அணி தேர்தலில் ஒரு இடம்கூட ஜெயிக்கவில்லை என்றாலும், திமுகவின் வெற்றிவாய்ப்பை பல இடங்களில் பாதித்துவிட்டன. ஜெயித்த அதிமுகவுக்கும், தோற்ற திமுகவுக்குமான வாக்கு வித்தியாசம் ஒரு சதவிகிதம் என்ற மிகக் குறைந்த அளவுதான். இதனால்தான் திமுகவின் ஆட்சியில் அமரும் வாய்ப்பே பறிபோனது.

இந்த நிலையில் வரும் தேர்தலிலும் இதேபோல ஒரு ஓட்டுப் பிரிப்புக் கூட்டணி ஒன்றை உருவாக்குவது என்பதே அமித் ஷாவின் திட்டம். சில ஆயிரம் ஓட்டுகள்கூட சட்டமன்றத் தொகுதியின் முடிவை மாற்றும் என்ற நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கூட்டணிகளைத் தாண்டி, அந்தந்த பகுதிகளைச் சார்ந்த மாவட்டங்களைச் சார்ந்து வலுவாக இயங்கும் அமைப்புகளும் கட்சிகளும் வாக்குகளைப் பிரிக்கும். அதிமுக, திமுக கூட்டணிகளைத் தாண்டி அமமுக தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்று தினகரன் சொல்லி வருகிறார். மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்று கமல்ஹாசன் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் இவர்களை மையமாகக் கொண்டோ அல்லது இன்னொரு புதிய கூட்டணியை உருவாக்குவதோதான் அமித் ஷாவின் பிளான் என்கிறார்கள்.

இதன் முதல்கட்டமாக அமைதியாக இருக்கும் அழகிரியிட மீண்டும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அண்மையில் மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய மு.க.அழகிரி, ஸ்டாலினைக் கடுமையாகத் தாக்கினார். ஆனால், ‘நான் என்ன முடிவெடுத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று தொண்டர்களிடம் கூறியிருந்தார். அதன் பின் அவரிடம் இருந்து எந்தச் செயல்பாடும் இல்லை. அமைதியாகிவிட்டாரோ என்ற நிலையில் இப்போது பாஜக தரப்பில் அழகிரியை மீண்டும் அணுகியிருக்கிறார்கள்.

‘நீங்கள் ஏற்கனவே திட்டமிட்ட கலைஞர் திமுக என்ற கட்சியை உருவாக்குங்கள். உங்களுக்கான எல்லா தேவைகளையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். மூன்றாவது அணி ஒன்றை உருவாக்கி அதில் முக்கியமான பங்கை நீங்கள் வகிக்க வேண்டும்’ என்று அழகிரியை முடுக்கிவிட்டிருக்கிறார்கள். அழகிரியின் ஆதரவாளர்கள் பலரும் திமுகவுக்கு கடந்த மூன்று மாதங்களில் வந்துகொண்டிருந்த நிலையில்தான் அழகிரிக்கு இப்படி ஒரு நெருக்குதல் கொடுக்கப்பட்டு வருகிறது. அழகிரி இதற்கு தலையாட்ட ஆரம்பித்துவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில்தான் ஸ்டாலின் அண்மையில் கொடுத்த ஒரு பேட்டியில் மத்திய அரசு பற்றி ஸ்டாலின் குறிப்பிடுகையில், ‘அண்ணாவின் கொள்கை, மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி. கலைஞரின் கொள்கை, உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம். இதில் இருந்து என்றைக்கும் நாங்கள் பின் வாங்கமாட்டோம்’ என்று கூறியிருக்கிறார்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

கருத்துகள் இல்லை: