திங்கள், 7 மே, 2012

Andhra வில் ஜனாதிபதி ஆட்சி? இடைத்தேர்தலில் காங்., தோல்வி அடைந்தால் நிச்சயம்

ஆந்திராவில் நடைபெறவுள்ள 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால், அங்கு ஜனாதிபதி ஆட்சி நிச்சயம் அமலாகும் என, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகனின் கடும் சவாலால், காங்கிரஸ் தலைவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஆந்திர சட்டசபையில் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதற்கு ஆதரவாகவும், காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், 17 பேர் ஓட்டளித்தனர். இவர்கள் எல்லாம், ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள்.
ஜெகன் மோகன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 12ல் இடைத்தேர்தல் :ஜெகன் மோகன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 17 பேரும், காங்கிரஸ் கட்சியின் கொறடா உத்தரவை மீறி, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்ததால், அவர்கள் எல்லாம் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால், 17 சட்டசபைத் தொகுதிகளுக்கும், திருப்பதி சட்டசபைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிரஞ்சீவி, ராஜ்யசபா எம்.பி.,யாகி விட்டதால், காலியான அந்தத் தொகுதிக்கும் சேர்த்து 18 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது.ஏற்கனவே கடந்த மார்ச் மாதம், தெலுங்கானா பகுதியில் உள்ள ஏழு சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தபோது, அதில் ஒன்றில் கூட, காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. தெலுங்கான விவகாரத்தில், மத்திய அரசு ஒரு தெளிவான முடிவு எடுக்காதது மற்றும் முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் தன்னிச்சையான மற்றும் சர்வாதிகாரமான செயல்பாடுகளே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

உட்கட்சி பூசல் :இந்நிலையில், ஜூன் 12ல் நடைபெறவுள்ள 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின், காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப் பூசல் அதிகரித்துள்ளது. குறிப்பாக நான்கு சட்டசபைத் தொகுதிகளில், அதிருப்தியாளர்கள் பலர், கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்படப் போவதாக, பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.அதேபோல், தன்னிடமிருந்த மருத்துவக் கல்வித்துறை பறிக்கப்பட்டதால், அதிருப்தியில் உள்ள ஆந்திர மாநில அமைச்சரான ரவீந்திர ரெட்டி, "இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்திக்கும். மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி தற்போது மோசமான நிலையில் இருப்பதற்கு, முதல்வர் கிரண்குமார் ரெட்டியே காரணம்' என்றும் கூறியுள்ளார்.

பதவி பறிபோகும் :முதல்வருக்கு எதிராக, அவர் பகிரங்கமாக குரல் கொடுத்துள்ளதால், விரைவில் அவரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இதுபோல, முதல்வருக்கு எதிராக கருத்து தெரிவித்த மூத்த அமைச்சர் சங்கர்ராவ், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக, சமீபத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் பி.சத்தியநாராயணாவுக்கும் தற்போது ஏழாம் பொருத்தமாக உள்ளது. அவர்களுக்கு இடையே மோதலைச் சமாளிப்பதே, கட்சி மேலிடத்திற்கு பெரும் பிரச்னையாக உள்ளது.

அரை இறுதிப்போட்டி:வரும் 2014ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, ஒரு அரை இறுதிப் போட்டி போல, தற்போதைய இடைத் தேர்தல் கருதப்படுவதால், கிரண்குமார் தலைமையிலான அரசுக்கு இது பரிசோதனையாகவே இருக்கும். மேலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்து வருவதும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பெரும் சவாலாக அவர் இருப்பதும், மாநில காங்கிரஸ் தலைவர்களை பெரும் கவலை அடையச் செய்துள்ளது.

ஜனாதிபதி ஆட்சி:தெலுங்கானாõவில் பாராக்கல் தொகுதியை தவிர, பிற தொகுதிகள் இடம் பெற்றுள்ள ராயலசீமா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பலத்த ஆதரவு உள்ளது. இந்தப் பகுதியில் ஜெகனின் கட்சி, அதிக அளவில் வாக்காளர்களைக் கவரும் என்றும் நம்பப்படுகிறது. அதற்கேற்ற வகையில் அவர் கலந்து கொள்ளும் கூட்டங்கள் மற்றும் சாலையோர மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் மக்கள் பெருமளவில் திரண்டு வருகின்றனர். இதனால், சட்டசபை இடைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தால், அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும், மத்திய அரசு தயங்காது என, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை: