புதன், 9 மே, 2012

9 வட மாநில கொள்ளையர்கள்- கூண்டோடு சிக்கினர்! நகைக்கடைக்குள் வெல்டிங் வைத்து புகுந்த

தர்மபுரி: தர்மபுரியில் உள்ள பிரபலமான நகைக் கடை ஒன்றுக்குள், கதவை வெல்டிங் வைத்து உடைத்து உள்ளே புகுந்த வட மாநிலக் கொள்ளையர்கள் 9 பேரும் கூண்டோடு போலீஸாரிடம் சிக்கினர். கடை உரிமையாளர் ஏற்படுத்தி வைத்திருந்த அட்டகாசமான பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக சிந்தாமல் சிதறாமல் அத்தனை கொள்ளையர்களையும் போலீஸாரால் எளிதில் பிடிக்க முடிந்தது. தர்மபுரியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி பஸ் நிலையப் பகுதியில் ஒரு பிரபலமான நகைக் கடை உள்ளது. அந்தக் கடைக்கு நேற்று நள்ளிரவு ஒரு கொள்ளைக் கும்பல் வந்துள்ளது. கடையின் கதவை வெல்டிங் வைத்து உடைத்துள்ளனர்.
கடை உரிமையாளர், அங்கு நவீன பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார். அதாவது கடையின் கதவை யாரேனும் சேதப்படுத்தினால் அல்லது தொட்டால் அதுகுறித்து கடையில் பொருத்தப்பட்டுள்ள நவீன பாதுகாப்பு சாதனம் மூலம், கடை உரிமையாளருக்கு எஸ்.எம்.எஸ். போய் விடுமாம். அதேபோல நேற்றும் கொள்ளையர்கள் கடையின் கதவை வெல்டிங் வைத்து உடைத்தபோதும் உடனடியாக எஸ்.எம்.எஸ் போயுள்ளது.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்து விட்டு தானும் கடைக்கு கிளம்பினார். போலீஸார் மின்னல் வேகத்தில் சென்று கடைக்குள் புகுந்திருந்த 9 கொள்ளையர்களையும் அப்படியே வளைத்துப் பிடித்து விட்டனர். போலீஸார் வந்தபோது கடையின் 4வது தளத்தில் கொள்ளையர்கள் இருந்தனர்.

அத்தனை பேரையும் காவல் நிலையத்திற்குத் தூக்கிக் கொண்டு வந்து போலீஸார் விசாரித்தபோது அவர்கள் 9 பேரும் வட மாநிலக் கொள்ளையர்கள் என்று தெரிய வந்தது. இவர்கள் ஒரு லாட்ஜில் தங்கிக் கொண்டு இந்தக்கடையை நோட்டமிட்டு வந்துள்ளனர். பின்னர் சமயம் பார்த்து கடைக்குள் புகுந்துள்ளனர். ஆனால் கடையில் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தெரியாமல் போனதால் கூண்டோடு மாட்டிக் கொண்டனர்.

பிடிபட்ட கொள்ளையர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தமிழகத்தில் வேறு எந்தப் பகுதியில் நடந்த நகைக் கொள்ளையிலாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்துத் தெரியவில்லை. குறிப்பாக திருப்பூர் நகைக் கடையை சுத்தமாக அள்ளி எடுத்துச் சென்ற வழக்கில்இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பதுகுறித்து போலீஸார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: