வெள்ளி, 11 மே, 2012

சி.பி.எம்.மாநாடு: வெங்காயம் என்பதா? வெண்டைக்காய் என்பதா?

உழைக்கும் மக்களின் போராட்டங்களைத் தலைமையேற்று வழிநடத்துவதாகக் காட்டிக் கொள்ளும் சி.பி.எம். கட்சி, தமது சந்தர்ப்பவாதங்களுக்கு சித்தாந்த விளக்கங்கள் அளித்து, தம்மைத் தக்கவைத்துக் கொள்ள பித்தலாட்டம் செய்யும் இன்னுமொரு பிழைப்புவாதக் கட்சியாக புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 4 முதல்  9 வரை கேரளத்தின் கோழிக்கோட்டில் நடைபெற்ற சி.பி.எம். கட்சியின் 20வதுஅனைத்திந்திய மாநாட்டுத் தீர்மானங்கள் இதை மெய்ப்பித்துக் காட்டுகின்றன.
“முந்தைய மாநாட்டில் காங்கிரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்தோம். இப்போதைய மாநாட்டில் காங்கிரசு மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
உழைக்கும் மக்களின் இடதுசாரி ஜனநாயக முன்னணியைக் கட்டியமைப்பதே எங்களது முதன்மை நோக்கம். இடதுசாரிஜனநாயக பொது மேடையில் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பல்வேறு உழைக்கும் மக்கள் பிரிவினரையும்  அணிதிரட்டுவதன் மூலமும், நீடித்த போராட்டங்களின் மூலமும்தான் இத்தகைய மாற்று உருவாகும். இடதுசாரிஜனநாயக முன்னணியை உருவாக்கும் போக்கில், காங்கிரசு மற்றும் பா.ஜ.க. அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் பிரச்சினை அடிப்படையில் கூட்டணி அமையும். இது மூன்றாவது அணியாக மாறும் என்ற மாயை இல்லை. தனியார்மய தாராளமயத்துக்கு எதிரான போராட்டங்கள் மூலமாகவே உண்மையான மாற்று உருவாகும்” என்று இம்மாநாட்டுத் தீர்மானங்களை அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரகாஷ்  காரத் விளக்கியுள்ளார்.
“தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், பழங்குடியினர், பெண்கள் ஆகியோரின் குறிப்பிட்ட பிரச்சினைகளைப் பொது ஜனநாயக மேடையாகக் கொண்டு போராட்டங்கள் நடத்துவோம். உள்ளூர் அளவிலும், மாநிலம் தழுவிய அளவிலும் உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைக்காகவும், தனியார்மய  தாராளமயத் தாக்குதலுக்கு எதிராகவும், வேலையின்மை  நிலப்பறிப்புக்கு எதிராகவும், வேலைப்பாதுகாப்பு, நியாயமான கூலி, மருத்துவ நலன், கல்வி, அடிப்படை வசதிகள் முதலானவற்றுக்காகவும் நீடித்த போராட்டங்களை ஒருங்கிணைத்து  நடத்துவோம்” என்கிறார் காரத். இப்படி கீழிருந்து பல்வேறு தரப்பு மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் வளரும், அப்போது நாங்கள் முன்னே நின்று ஒருங்கிணைப்போம் என்கிறார்.
இப்படித்தான், “இன்னொரு உலகம் சாத்தியமே!” என்று முழங்கிக் கொண்டு அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பல்வேறு தன்னார்வக் குழுக்கள் இணைந்து  போராட்டத்தை நடத்தின. அதிலே இடதுசாரிகள், அராஜகவாதிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், பெண்ணுரிமை, சுற்றுச்சூழலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள்  எனப் பலதரப்பினரும் பங்கேற்று, அவரவர் நோக்கங்களுக்கு ஏற்ப முழக்கமிட்டு போராட்டத்தை நடத்தினர். ஏற்கெனவே ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வக் குழுக்களுடன் ஒத்திசைந்து செயல்படுவதென  கடந்த கோவை மாநாட்டில் தீர்மானித்து, மும்பையில் நடந்த உலக சமூக மன்ற  (WSF)  மாநாட்டில் தன்னார்வக் குழுக்களுடன் இணைந்து ‘கூட்டுப் புரட்சி’யும் செய்த சி.பி.எம்.கட்சி,  இத்தகைய திசையில் பெரிய தன்னார்வக் குழுவாக மாறிப் போராட்டங்களை ஒருங்கிணைக்கக் கிளம்பியுள்ளது. அடையாள அரசியலை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டே, தம்மைத் தக்கவைத்துக் கொள்ள அடையாள அரசியலுக்குள் சி.பி.எம். கட்சி தஞ்சமடைந்து கிடக்கிறது.
“தென்னமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்திய கட்டமைவை வீழ்த்தாத அதேசமயம்,  ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் போராட்டங்களின் மூலம் ஆட்சிக்கு வந்துள்ள முற்போக்கு ஆட்சியாளர்கள், சில மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துகின்றனர். அங்கு முதலாளித்துவத்துக்கு மாற்று கட்டியமைக்கப்படுகிறது. இது, அந்நாடுகளில் சமுதாய மாற்றத்துக்கு வழியேற்படுத்தும்” என்கிறார் காரத். இத்தகைய சீர்திருத்த ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படும் “21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்” என்பதை முதலாளித்துவத்துக்கான மாற்று என்று  சி.பி.எம். கட்சித் தலைவர்கள் பிரமையூட்டுகிறார்கள்.  அத்தகைய திசையில் இந்தியாவிலும் தனியார்மயம்தாராளமயத்துக்கு எதிராகத் தன்னெழுச்சியாக மக்கள் போராட்டங்கள் வளரும் என்கிறார்கள். அதேசமயம், இத்தகைய சோசலிசத்தை அக்கட்சி ஏற்கிறதா, இல்லையா என்று கறாராகக் கூறாமல் நம்பூதிரித்தனத்துடன் நழுவுகிறார்கள்.
தனியார்மய தாராளமயத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் அதிருப்தியும் பெருகுவதைத் தொடர்ந்து முதலாளிகளுக்குக் கறிவிருந்து படைத்துவிட்டு கொஞ்சம் எலும்புத்துண்டை நல்வாழ்வுத் திட்டங்களுக்கு ஒதுக்குவது என்ற ஆளும் வர்க்கங்களின் மனித முகம் கொண்ட தனியார்மயக் கொள்கையையே சுக்குமி, ளகுதி, ப்பிலி என்று வேறு வார்த்தைகளில் சி.பி.எம். தலைவர்கள் விளக்குகிறார்கள். அக்கட்சி  முன்வைக்கும் ‘இடதுசாரி  ஜனநாயக மாற்று’ என்பது ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பது, மனித முகத்துடன் தனியார்மயம்  தாராளமயத்தைச் செயல்படுத்துவது என்பதுதான்.
சி.பி.எம்.மாநாடு: வெங்காயம் என்பதா? வெண்டைக்காய் என்பதா?மே.வங்கத்தில் 34 ஆண்டுகால ‘இடதுசாரி கூட்டணி ஆட்சி’ தேர்தலில் படுதோல்வியடையக் காரணம் என்ன என்று கேட்டால், “மே.வங்கத்தில் தொழில் வளர்ச்சிக்காக விவசாயிகளிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தியதில் சில அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான தவறுகள் நடந்துவிட்டன. அத்தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” என்கிறார், காரத். என்ன தவறு நடந்தது, என்ன படிப்பினையைக் கற்றுக் கொண்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
“மாநில அரசுகள் வரம்புக்குட்ட அதிகாரத்தையும் மூலாதாரத்தையும் கொண்டவையாக இருப்பதால், மாநில அரசு அதிகாரத்தின் மூலம் மாற்றுக் கொள்கைகளையோ, இடதுசாரி ஜனநாயகத் திட்டத்தையோ செயல்படுத்த இயலாது. மைய அரசில் அதிகாரத்துக்கு வந்தால்தான் சாத்தியம்” என்கிறார் காரத்.  இத்தகைய வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைக் கொண்டு தென்னமெரிக்க நாடுகளின் சீர்திருத்த ஆட்சியாளர்கள் செய்யும் மக்கள்நலத் திட்டங்களைக்கூட இடதுசாரி கூட்டணி அரசு செய்யவில்லை.  ஆனால், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கட்டாய நிலப்பறிப்பும் மக்கள் மீது அடக்குமுறையையும் ஏவியதுதான் சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் நடந்தது.
இந்த உண்மைகளை மூடிமறைத்து தமது பித்தலாட்டத்தையும் துரோகத்தையும்  நியாயப்படுத்தி சப்பைக் கட்டுபோடும் நோக்கத்துடன் மாநில அதிகாரம் பற்றி பசப்புகின்றனர்.  மாநில அரசின் அதிகாரம் வரம்புக்குட்பட்டதாக இருப்பதால், எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறும் இவர்கள், அப்புறம் மைய அரசில் ஆட்சிக்கு வந்தால், ஏகாதிபத்தி உலகமயமாக்கலின்கீழ் தனியொரு நாட்டில் இடதுசாரி திட்டங்களைச் செயல்படுத்த சாத்தியம் இல்லை என்றும் வாதிடலாம். இப்படியே தமது சந்தர்ப்பவாதங்களுக்கு ஏற்ப வியாக்கியானம் செய்வதுதான் சி.பி.எம். இன் அரசியல் சித்தாந்த பித்தலாட்டமாகிவிட்டது.
தாங்கள் சீனப் பாதையையோ, வேறு பாதையையோ பின்பற்றாமல் இந்தியப் பாதையைப் பின்பற்றுவதாகவும், இதுதான் மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்றும்  ஏதோ மாபெரும் சித்தாந்தக் கண்டுபிடிப்பைச் செய்துவிட்டதைப் போல சி.பி.எம். தலைவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். தங்களது இந்தியப் புரட்சிக்கான புதிய பாதை என்ன என்பதைப் பற்றி எந்த விளக்கமும் தராமல், ஏதோ சர்வதேச அரசியல் போக்குகளை அலசி ஆராய்ந்து தங்கள் கொள்கைகளை வகுத்துக் கொண்டுள்ளதாகக்  காட்டி ஏய்க்கிறார்கள்.
எல்லா ஓட்டுப்பொறுக்கி கட்சிகளைப் போலவே, கோஷ்டிச் சண்டைகள் புழுத்து நாறும் சி.பி.எம். கட்சியில், கோஷ்டிகளின் பலாபலத்துக்கேற்ப கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு கல்தாவும், கொலைகார மே.வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு மீண்டும் பதவியும் அரசியல் தலைமைக் குழுவில் தரப்பட்டிருப்பதும், லாவ்லின் ஊழல் முதல் மே.வங்க ரேஷன் கடை ஊழல் வரை அம்பலப்பட்டு நிற்கும் கட்சியின் தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலிருப்பதும்,  இன்னுமொரு குட்டி முதலாளித்துவப்  பிழைப்புவாதக் கட்சியாக சி.பி.எம். சீரழிந்து நிற்பதையே இம்மாநாடு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமது பிழைப்புவாத பித்தலாட்டக் கொள்கைகளுக்கு ஏற்ப, தமது கட்சிக்கு நல்லதொரு பெயரை இனி அவர்களே சூட்டிக் கொண்டால் நல்லது.

கருத்துகள் இல்லை: