புதன், 9 மே, 2012

காதல் குறித்த ஆழமான கிணற்றில் இறங்கி தூர் வாரும் தோற்றத்தை ஏற்படுத்தும் படம்

காதலில்-சொதப்புவது-எப்படி
காதலில் சொதப்புவது எப்படி‘. காதலை கொஞ்சம் எதார்த்தமாக அணுகியிருப்பதிலும் சரி, காதலின் மகத்துவத்தைக் கொஞ்சம் கிண்டல் செய்திருப்பதிலும் சரி பாலாஜி மோகன் சற்றே ஆச்சரியப்படுத்துகிறார்
உண்மையான காதலென்பது ஆவிகளைப் போல; அதைப் பற்றி அனைவரும் பேசுவார்கள் என்றாலும் பார்த்தவர்கள் சிலர்தான்.
- & François de La Rochefoucauld (17 ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு எழுத்தாளர்)
எண்பதுகளில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை  முதல் தற்போது படையெடுக்கும் காதல் சார் திரைப்படங்கள் வரை இடம், காலம் மட்டும்தான் மாறியிருக்கின்றன; பொருள் மாறவில்லை. அன்று கிராமம், கடற்கரை, ஏழ்மை, சைக்கிள், பேருந்து, ஊரக விளையாட்டு என்றிருந்தவை இன்று காஃபி ஷாப், ஷாப்பிங் மால், மல்டி பிளக்ஸ், ஸ்கூட்டி, ஃபேஸ்புக், நடுத்தர வர்க்கம் என்று ’வளர்ந்தி’ருந்தாலும் காதலின் சித்தரிப்பு என்னவோ அதேதான்.

அதாவது பையன்கள் விடாது துரத்தி பெண்களை டார்ச்சர் செய்வது, காதலை எதிர்க்கும் வில்லன்கள், பிறகு சுப முடிவு எனும் ஃபார்முலாவை சற்றே மீறியிருக்கிறது ‘காதலில் சொதப்புவது எப்படி‘. காதலை கொஞ்சம் எதார்த்தமாக அணுகியிருப்பதிலும் சரி, காதலின் மகத்துவத்தைக் கொஞ்சம் கிண்டல் செய்திருப்பதிலும் சரி இயக்குநர் சற்றே ஆச்சரியப்படுத்துகிறார்.
அன்பான ஹார்லிக்ஸ் குடும்பத்தில் ஒரே வாரிசாக வாழும் அருண், கல்லூரி இறுதியாண்டில் படிக்கிறான். சண்டையிட்டுக் கொண்டு மணவிலக்கு பெற முயலும் பெற்றோரது மகளான பார்வதி கல்லூரி இரண்டாமாண்டு படிக்கிறாள். இவர்களுக்கிடையே இயல்பாக மலரும் காதல், பின்னர் ஊடல், பிரச்சினைகள் என்று இறுதியில் ஒன்று சேர்கிறார்கள். அருணின் நண்பர்களான காதலுக்கு ஆலோசனை சொல்லும் சிவா, ஒருதலைக் காதலில் அவஸ்தைப்படும் விக்னேஷ், சிவாவின் உறவினரான இராமகிருஷ்ணன், இவனது முன்னாள் காதலியைக் காதலிக்கும் ஜான், இவர்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுகள் போன்ற கிளைக்கதைகளின் மூலமும் காதலின் பரிமாணங்கள் நிறைய நகைச்சுவையுடன் காட்டப்படுகின்றது.
சண்டை ஒன்றில் பழரச டம்ளரை அருணின் மீது வீசுகிறாள் பார்வதி. மண்டை உடைந்த அருண் தனது காதல் கதையை கொஞ்சம் விமரிசனப்பூர்வமாக தனியே சொல்ல ஆரம்பிக்கிறான். அதன் போக்கில் கிளைக்காதல் கதைகளையும் அலசுகிறான். ஆரம்பத்தில் இந்த உத்தி ஏதோ ஆவணப்படம் ஒன்றின் சாயலை ஏற்படுத்தினாலும், விரைவிலேயே இந்தக் கதை சொல்லும் முறையில் நாம் ஒன்றுகிறோம். வெறுமனே கதை நகர்வு என்றிருந்தால் இத்தகைய அலசலைச் செய்வதற்கு சாத்தியமற்றுப் போயிருக்கும். அந்த வகையில் இந்தக் கதைக்குப் பொருத்தமான கதை சொல்லும் வடிவத்தை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார்.
காதலில்-சொதப்புவது-எப்படிஇயக்குநர் பாலாஜி மோகன், முதலில் இந்தப் படத்தை பத்து நிமிடக் குறும்படமாக எடுத்திருக்கிறார். அதில் கவரப்பட்ட நடிகர் சித்தார்த் தனது நண்பர்களின் உதவியுடன் இதைத் தயாரித்திருக்கிறார். ஆக, குறும்படமாக இருந்த ஒரு சின்னக் கருவை முழு நீளத் திரைப்படமாகக் கச்சிதமாக எடுத்திருப்பது இயக்குநரின் திறமையைப் பறைசாற்றுகிறது.
இனி படத்தின் மூலமாகக் காதலைக் கவனிப்போம்.
‘பாசத்தையும் சரி, வெறுப்பையும் சரி பொண்ணுங்க அளவுக்கு பசங்களால காட்ட முடியாது‘ என்று பார்வதியுடனான பிரிவுக்குக் காரணமான அந்த டம்ளர் சண்டையைப் பற்றி அருண் கூறுகிறான். பெண் குறித்த இத்தகைய சித்தரிப்புகள், வசனங்கள் படம் முழுவதிலும் வருகின்றது. ஏற்கெனவே ’பெண் மனது ஆழமானது‘ போன்ற தத்துவ முத்துக்கள் தமிழ் சினிமாவில் நிரம்பி வழியும் சூழ்நிலையில் இங்கு பெண்ணுக்கு கொஞ்சம் ’சமத்துவத்தை’ அளித்து விட்டு, அடுத்த கணமே அந்த முத்துக்கள் வீசப்படுகின்றன.
பாசம், வெறுப்பு இரண்டையும் ஒரு பெண் அதிகமாகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன? விக்னேஷின் ஒரு தலைக்காதலி அவனை அண்ணா என்று கூப்பிட்டு விட்டு வேறு ஒருவரைக் காதலிப்பதாகச் சொல்கிறாள். அவளைக் காதலிக்கும் காதலனோ நேரத்திற்கொரு முறை காதலியை மாற்றுபவன். இந்தக் கதையை சொல்லும் அருண், பெண்கள் ஆண்களைத் தெரிவு செய்வதில் சொதப்புவதாகச் சொல்வான். அதே நேரம் தன்னைக் காதலிக்கும் போதே வேறு பெண்களைக் காதலிக்கும்  திருட்டுத்தனத்தை பெண் கண்டுபிடித்து விடுவாள், அது அவளது தனித்துவமான உள்ளுணர்வு என்றும் கூறுவான்.
இந்தச் சித்தரிப்புகளில் பகுதியளவு உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரம் அந்த சித்தரிப்பைத் தாண்டி உள்ளே செல்லும் போது இதன் பொருளே வேறு மாதிரி ஆகி விடுகின்றது. இன்னமும் சகல மட்டங்களிலும் ஆணாதிக்க சமூகம் கோலேச்சும் போதும், அந்தப் பின்னணியில் உள்ள ஒரு பெண் காதலிக்கும் போதும், காதலை வெளிப்படுத்தும் போதும், அதன் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போதும் எப்படி நடந்து கொள்வாள் என்பதையும் இயக்குநர் ஆழமாகப் புரிந்து கொள்ளவில்லை.
ஒரு பெண் தன் காதலனிடம் அதிக பாசத்தை வெளிப்படுத்துவதற்கு காரணம் அது அவளது ஜீனிலிருந்து வரும் உயிரியல் விசயமல்ல. பெண்மைக்குப் பாதுகாப்பற்ற சமூகத்தில் தன் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணமே அப்படி வெளிப்படுத்துகிறாள். அவள் இதனைத் திட்டமிட்டு செய்யவில்லை என்றாலும், சமூகத்தின் விதிக்கப்பட்ட செயல்பாடு காரணமாக அது அனிச்சையாகவே நடக்கின்றது. சிறு வயதிலேயே மாராப்பைச் சரி செய்யும் பெண்கள் சாகும் வரை தங்கள் கைகளுக்கு ஓய்வு கொடுப்பதில்லை இல்லையா, அது போலத்தான் இதுவும்.
அடிமைகள் அன்பு செலுத்துவதற்கும், சுதந்திரமானவர்கள் அன்பு செலுத்துவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அடிமைகளின் அன்பு, நிறைய எச்சரிக்கை, ஏக்கம், எதிர்பார்ப்புடன் வரும். படத்தில் பார்வதி காதல் வயப்படும் போது அருணிடம் சொல்வதை கவனிப்போம். அம்மாவுடன் சண்டையிட்டுக் கொண்டு வெளியேறும் பார்வதியின் தந்தை தனது அன்பான மகளை ஒரு கணம் எண்ணிப் பார்க்காமல் மறந்து விட்டு போய் விடுகின்றார். சிறு வயதிலிருந்தே அப்பாவைச் சார்ந்து அன்பாகப் பழகி விட்டபடியால் அவரது பிரிவைப் பார்வதியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் இனி, ‘யாரு மேலயும் அட்டாச்சுடாவோ, டிபண்டன்டாவோ இருக்க கூடாதுன்னு நினைச்சேன்‘ என்று கூறும் பார்வதி, அது போல அருணது நட்பும் அப்படி மலர்ந்து பின்னர் ஏதும் பிரச்சினை என்று பிரிய நேரிட்டால் அதைத் தாங்கிக் கொள்ளும் வலிமை தனக்கில்லை என்கிறாள்.
இதே பார்வதி முதன்முதலில் அருணைச் சந்திக்கும் போது என்ன சொல்கிறாள்? பெற்றோரின் சண்டை காரணமாக அழுகை கலந்த கோபத்தில் இருக்கும் அவளுக்கு ”சாத்துக்குடி சாறு காலியாகி விட்டது” என்று கேண்டீன்காரர் சொல்லும் போது அருண் கொஞ்சம் மனிதாபிமானியாகத் தனது சாற்றை அவளுக்குக் கொடுக்கிறான். ‘என்னைப் பாத்தா சாரிட்டி எதிர்பார்க்கிற மாதிரி தெரியுதா? பொம்பளைங்க வீக்னெஸ யூஸ் பண்ணிக்கிறதுல ஆம்பளங்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியல‘ என்று சீறுகிறாள் பார்வதி. அதே போல ஒரு சண்டையில் அருண், ‘நான் உனக்கு எவ்வளவு ஃபீரிடம் கொடுத்து வச்சிருக்கேன்‘ என்று சொல்லும் போது சினமடையும் அவள், மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘ நீ என்னை மகிழ்ச்சியா வச்சிருப்பேங்கிற நம்பிக்கை போயிருச்சு‘ என்று சொல்வாள்.
காதலில்-சொதப்புவது-எப்படிஇவையெல்லாம் ஒரு ஆளுமையின் முரண்பாடு போலத் தோற்றமளித்தாலும் உண்மையில், இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான். உறவு ஏமாற்றமளிக்கின்ற நேரத்தில் அவளது சுயமரியாதை கொஞ்சம் நிமிர்ந்து நிற்கின்றது. உறவுகள் அரும்புகின்ற நேரத்திலோ பாதுகாப்பிற்குள் மட்டும் வாழ வேண்டிய அவளது எதார்த்தம் எச்சரிக்கை செய்கின்றது. பெண்கள் மட்டும் ஏன் ஏதாவது ஒரு உறவைச் சார்ந்து வாழ வேண்டியிருக்கின்றது என்று பரிசீலித்துப் பார்த்தால் பார்வதியின் முரணைப் புரிந்து கொள்ளலாம். எந்த நேரத்திலும் பிரிவதில்லை என்று சத்தியமிட்டுத்தான் அருணும் பார்வதியைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். அதாவது அவளுக்கு வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பாகத் துணை வருவேன் என்கிற வாக்குறுதியை அளிக்கிறான்.
காதலைத் தெரிவு செய்வதற்கு சுதந்திரமான சமூகச் சூழல் இல்லாத போது பார்வதிகள் இப்படிப் பயப்பட்டுக் கொண்டுதான் காதலிக்க முடியும். ஆக இப்போதைக்கு நாம் உண்மையான காதலையோ, காதல் கதைகளையோ சந்திக்க இயலாது என்பதை எத்தனை காதலர்கள் ஏற்றுக் கொள்வார்களோ, தெரியவில்லை.
காதலில் பெண்ணின் இடம் இதுவென்றால் ஆண்களின் நிலை என்ன? ஒரு தலைக்காதலில் மனப்பிரமைகளை வளர்த்துக் கொள்ளும் விக்னஷின் கதையை அருண் அழகாகவே சொல்கிறான். அந்தப் பெண் தற்செயலாக விக்னேஷேப் பார்ப்பதை, சிரிப்பதை, கடந்து செல்வதை காதல் என்று நம்புவதன் காரணமென்ன?
அறைக்குள் இருக்கும் மோனலிசா ஓவியத்தை எங்கிருந்து பார்த்தாலும் அதில் சிரித்துக் கொண்டிருக்கும் பெண் நம்மைப் பார்ப்பதாகவே தோன்றும். அப்படித்தான் ஒரு பெண்ணைக் காதலிக்க முனையும் ஆண், அந்தப் பெண் எங்கிருந்து பார்த்தாலும் தன்னைக் காதலிப்பதாகவே எடுத்துக் கொள்வானென்பதை ஒரு கவிதை போல அழகாக வடித்திருக்கிறார் இயக்குநர். ஆண்களின் இந்தக் காதல் பிரமை தோன்றுவதற்கும் ஒரு சமூக அடித்தளமிருக்கிறது.
காதலுக்கு சுதந்திரமிருக்கும் மேற்கத்திய சமூகங்களில் இத்தகைய மோனலிசாக் காதலின் அபத்தம் இல்லை. ஹாலிவுட் படங்களில் கூட காதல் தோன்றுவது ஓரிரு நிமிடங்களில் ஆரம்பமாகிய கையோடு சட்டென்று முத்தத்திலோ, படுக்கையிலோ முடிந்து விடும். காதலிப்பதற்கு வழியற்ற இந்தியச் சமூகத்தில் ஜவ்வாக இழுக்கும் இத்தகைய பாவனைகளை வைத்தே ஒருவன் மனக்கோட்டை கட்ட வேண்டியதாயிருக்கின்றது. பொதுவெளியில் ஆணும், பெண்ணும் அதிகம் பழகாத, பழக முடியாத நமது சமூகங்களில் காதலைத் தெரிவிப்பதில் மட்டுமல்ல, நினைத்துப் பார்ப்பதிலேயே நிறைய தடைகளிருக்கின்றது.
இதையெல்லாம் தாண்டி வேறு ஒரு உளவியலும் ஆண்களிடம் உண்டு. அவன் ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்தால் அவள் அவனைக் காதலித்தே ஆக வேண்டும் என்ற ஆதிக்க மனோபாவமும், உடமைக் கண்ணோட்டமும் அதில் தொக்கி நிற்கின்றது. இத்தகைய டார்ச்சர் காதல்தான் தமிழ் சினிமாவின் காதல் வேதம். இந்த வக்கிரத்தின் பொருட்டு அமிலத்தால் முகத்தை இழந்த பல பெண்களின் கதைகளைக் கேட்டிருக்கிறோம். இந்தக் கொடூரம் அமிலம் வரை போகவில்லை என்றால் அது விக்னேஷ் போல கடைசி வரை அவளையே வம்படியாக நினைத்து வாழ்வதாகவே இருக்கும். ஒரு பெண் ஒரு காதலை அல்லது முன்மொழிதலை நிராகரித்து விட்டு வேறு ஒருவனை ஏற்றுக்கொள்ள உரிமையுண்டு என்பதை சம்பந்தப்பட்ட ஆண்கள் ஜனநாயக ரீதியாகக் கூட ஏற்றுக்கொள்வதில்லை. அரசியலிலேயே ஜனநாயகத்திற்கு பழக்கப்படாத சமூகம் காதலில் மட்டும் சமத்துவத்தைக் கண்டடைந்து விடுமா என்ன?
காதலில்-சொதப்புவது-எப்படி
படத்தில் வரும் பாண்டிச்சேரி அத்தியாயம்தான் இந்தப் படத்தின் மையம். அங்கே அருண் தனது காதல் பிரிவினை குறித்து கேத்தியிடம் பகிர்ந்து கொள்வான். அதே போல கேத்தி தனது முதல் காதலனான இராமகிருஷ்ணனை நிராகரித்ததற்கான அதாவது ’பிரேக்-அப்’பிற்கான காரணத்தைக் கூறுவாள். அவன் அன்பாக இருப்பான், அதே நேரம் அதிக பொசசிவ்நெஸ் என்பது பிறகு சந்தேகமாக மாறி வரம்பை மீறும் போது தாங்க முடியாததாக ஆகி விட்டது என்பாள் கேத்தி. இதிலும் கூட நிறைய மோனலிசா எஃபக்ட் இருக்கிறது. காதல் நிறைவேறும் வரை பணிவாக இருக்கும் ஆண்கள், பின்பு காதலியிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வதும், அவளை ஒரு கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டிய சொத்தைப் போலவும் நடத்துவது வழக்கம்.
இயக்குனர் பாலாஜி மோகன்
காதலிலும், காதல் தெரிவிலும், காதலைத் தெரிவிப்பதிலும், காதல் நிராகரிப்பை ஏற்காததிலும் சமத்துவம் நிலவாதது போல காதலியை நடத்தவதிலும் சமத்துவம் இருப்பதில்லை. அன்பு, பாசம், நேசம் இன்ன பிற உணர்ச்சி ’இச’மெல்லாம் நம்முடைய சமூகத்தில் சில விதிமுறைகள், கட்டுப்பாடுகளோடுதான் கிடைக்கின்றது. அந்த விதிமுறைகள் மீறப்படும் போது அந்த அளவில்லாத அன்பு சட்டென்று மாயமாக மறைந்து விடுகின்றது. பூப் போல தனது மகளை வளர்த்து, முழுமையாக நேசிக்கும் ஒரு தந்தை தன் மகள் சாதி மாறிக் காதலித்து விட்டால் அதைச் சகிக்கக் கூட முடியாமல் பாசத்தைத் தூக்கி ஏறியத் தயங்குவதில்லை.
இது வெவ்வேறு உறவுகளில் வெவ்வேறு விதங்களில் செயற்படுகின்றது. ஆணுக்கு அடங்கிக் கிடக்கும் குடும்பம் எனும் நீதியைத் தன் பிறப்பிலிருந்தே உணர்ந்து வாழும் ஒரு ஆண், தனது காதலியையும் அத்தகைய நீதியின்பாற்பட்டே அணுகுகின்றான். அவளது அனைத்து நடவடிக்கைகளும் தனது அனுமதி பெற்றே நடைபெற வேண்டுமென்பதிலும் கறாராக இருப்பான். ஆனால் இதெல்லாம் அவளது மேல் உள்ள அன்பினால் நடைபெறும் தவறுகளாகச் சம்பந்தப்பட்ட ஆண்கள் ’பெரிய’ மனதுடன் கருதுகிறார்கள். ஆனால் அது ரொம்பவும் சின்னத்தனமான பண்பு என்பதை அவர்கள் அறிவதில்லை.
பசையான சம்பளத்துடன் வாழும் இன்றைய படித்த தலைமுறையில் பண்டைய காதலின் ’கற்பு’ வாசம் ஓங்கி அடிக்கும் நிலைமை இல்லை. படத்திலும் காதல், பிரேக்-அப், மீண்டும் வேறு ஒரு காதல் என்றெல்லாம் வருகின்றது. நுகர்வுக் கலாச்சார வாழ்வு காரணமாக காதலில் சுயநலமும், காரியவாதமும் மேலோங்கி இருக்கும் நிலைமையில் பழைய கற்பு, காதல் போனதற்காக மகிழ்ச்சியுற்றாலும், புதிய காதலில் ஜனநாயகம் இருப்பதாக மகிழ முடியவில்லை. கேத்தியின் தோழிகள் இருவர் தங்களுக்கு பாய் ஃபிரண்ட் இருப்பதால் கண்ட்ரோலாக இருக்க வேண்டியிருக்கிறது, இல்லாத மற்றொரு தோழி யாரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம் என்று சலித்துக் கொள்வார்கள். நாய்க் குட்டி வைத்திருப்பது போல பாய் ஃபிரண்ட் வைத்திருப்பதாக சிவா அவர்களைக் கிண்டல் செய்யும் போது அவர்கள் அது உண்மைதான் என்பார்கள்.
எனினும் இன்றைய காரியவாதக் காதல் முறிந்து போவதற்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் சுயநலத்தைத் தாண்டியும் வேறு காரணங்களும் இருக்கின்றன. காதல் நிறைவேறுவதும், காதலுக்கு உண்மையாக இருப்பதும் எல்லாக் காதலர்களுக்கும் சாத்தியமில்லை. ஆண்கள் தாங்கள் வீழ்த்தி விட்ட காயிடம் தற்போது த்ரில் இல்லை என்பதை வெகு சீக்கிரமே உணருகிறார்கள். வேறு நோட்டமிட்டு அடுத்த காயை வளைத்துவிட்டு பழைய காயை வெட்டுகிறார்கள். இது ருசி சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றால், பெண்ணைப் பொறுத்த வரை வசதியான, பாதுகாப்பான வாழ்க்கை என்ற கோணத்தில் காய்களை மாற்றுவதும் இன்றைக்கு வழமையாகி விட்டது.
அந்த வகையில் பார்த்தால் இந்தப்படத்தில் காமடிக்காக வரும் சிவா, ஜெயசிம்மா போன்றோர்தான் ஆண்களின் எதார்த்தமான மனநிலையோடு அதிகம் ஒன்றுகிறார்கள். ஆனாலும் நாயகத்தன்மைக்கு மட்டும் படம் பார்க்கும் ஆண்கள் அருணின் காவியக்காதலோடு ஒன்றுகிறார்கள். அதாவது ஊர் உலகம் சிவா போல இருக்கும் என்பதை ஒத்துக்கொள்பவர்கள், தான்மட்டும் அருண் என்று நினைத்துக் கொள்கிறார்கள். நினைத்து விட்டாவது போகட்டும்.
காதல் குறித்த ஆழமான கிணற்றில் இறங்கி தூர் வாரும் தோற்றத்தை ஏற்படுத்தும் படம், இறுதியில் அப்படி குதிக்காமல் வெறுமனே பாவனை செய்வதோடு நின்று விடுகின்றது. காதலில் ஏற்படும் பிரச்சினைகளின் வழியாக அழகான ஒரு சமூக இயக்கத்தைப் படம் பிடித்துக் காட்டும் வாய்ப்பை இயக்குநர் தவறவிட்டு விட்டார். அதனால் அவரது காதல் குறித்த பார்வைகள் நீயா, நானா போல மேம்போக்காகவும் கொஞ்சம் ஆணாதிக்கமாகவும் நின்று விடுகின்றது.
சமூகம் ஜனநாயகமயமாகும் தரத்திற்கேற்பவே காதலும், காதல் குறித்த புரிதலும் இருக்கும். அந்த வகையில் இயக்குநரின் புரிதல் வரம்புகளைப் புரிந்து கொள்வதோடு, காதல் குறித்த நமது பரிசீலனையை மேம்படுத்துவதற்கும் இந்த திரைப்படம் நிறையவே உதவும்.
• இளநம்பி

கருத்துகள் இல்லை: