சனி, 12 மே, 2012

லாக்-அப் கொலைகள்: கேட்பாரற்ற போலீசு ராஜ்ஜியம்!


கடந்த 2009-10 ஆம் ஆண்டில் நாடெங்கும் 1,324 கொட்டடிக் (லாக்அப்) கொலைகள் நடந்துள்ளன என்றும்,  இந்த எண்ணிக்கை அதற்கடுத்த ஆண்டில் (2010-11) 1,574 என அதிகரித்துவிட்டதாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்திருக்கிறது.  2010-11 ஆம் ஆண்டு நடந்துள்ள கொட்டடிக் கொலைகளுள் 37 சதவீதம் (597 கொலைகள்) உ.பி., பீகார், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களில் நடந்துள்ளன.  இம்மூன்று மாநிலங்களிலும் ‘தலித்’ சகோதரி மாயாவதியின் ஆட்சி நடந்த உ.பி.யில்தான் அதிகபட்ச கொட்டடிக் கொலைகள் (331) நடந்துள்ளன.

இந்த முதல் மூன்று இடத்தில் தமிழகம் வரவில்லையென்று யாரும் ஆறுதல் கொள்ளத் தேவையில்லை.  கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் 47 கொட்டடிக் கொலைகள் நடந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  அம்மாவின் ஆட்சியிலோ, வெளியே தெரியும் புள்ளிவிவரங்களின்படி மாதம் இரண்டு கொட்டடிக் கொலைகள் என்ற வீதத்தில் தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.  வழக்குரைஞர் சதீஷ் கொலை போல, போலீசாரால் மர்மமான முறையில் கொல்லப்பட்டு வீசியெறியப்படும் பிணங்களின் கணக்குகள் இந்தக் கொட்டடிக் கொலைப் பட்டியலில் சேராது.
ஒவ்வொரு ஆண்டும் கொட்டடிக் கொலைகள் பெருகிக்கொண்டே போகும் சமயத்தில், அவற்றின் மீதான விசாரணையோ ஆமை வேகத்தில்கூட நகர்வதில்லை.  2010-11 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள 1,574 கொட்டடிக் கொலைகளுள் வெறும் 88 வழக்குகளில்தான் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியிருக்கிறது.  கடந்த தி.மு.க. ஆட்சியின்பொழுது நடந்த 47 கொட்டடிக் கொலைகள் தொடர்பாக ஒரு போலீசுக்காரன் மீதுகூட இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.  கொட்டடிக் கொலைகள் அம்பலமாகி மக்கள் போராட்டத்தில் குதிக்கும்பொழுது, சம்பந்தப்பட்ட போலீசு நிலையத்தைச் சேர்ந்த ஒன்றிரண்டு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்படுவதைத் தாண்டி, வேறெந்த தண்டனையும் வழங்கப்படுவதில்லை.  இதையும் மீறி ஒன்றிரண்டு கொட்டடிக் கொலைகள் நீதிமன்ற விசாரணையை எட்டினாலும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு தொடரப்படுவதில்லை.  குறிப்பாக, தமிழ்நாட்டையே உலுக்கிய அண்ணாமலை நகர் கொட்டடிக் கொலை வழக்கில், பத்மினியின் கணவர் தற்கொலை செய்து கொண்டதாகத்தான் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  பத்மினியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக மட்டுமே போலீசார் தண்டிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் கொட்டடிக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது, கேள்விக்கிடமற்ற போலீசு ஆட்சி நாடெங்கும் நடந்துவருவதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.  போலீசு நடத்தும் கொட்டடிக் கொலைகளை அந்தந்த மாநில அரசுகள் மூடி மறைக்க முயலுகின்றன என்றால், மனித உரிமை ஆணையங்களும் நீதிமன்றங்களும் போலீசின் இந்தப் பயங்கரவாதப் படுகொலைகளை வேடிக்கை பார்க்கும் சோளக்காட்டுப் பொம்மைகள் போலவே நடந்து கொள்கின்றன.  மேலும், தீவிரவாதத்தை ஒழிப்பது, சட்டம்  ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் போலீசின் இந்த அத்துமீறல்களையும் பயங்கரவாதக் குற்றங்களையும் சட்டபூர்வமாக்கி, போலீசைப் பாதுகாக்கும் வேலையில் அரசு இறங்கியிருக்கும் தருணத்தில், போலீசுக்கு மனித உரிமைகள் பற்றிய போதனை அளித்து அவர்களைத் திருத்த வேண்டும் என்பது கேலிக்கூத்தான வாதமாகும்.  இதற்கு மாறாக, இந்தச் சட்டபூர்வ அரசு பயங்கரவாத போலீசு அமைப்பைக் கலைக்கக் கோரிப் பொதுமக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் போராட முன்வர வேண்டும்.

கருத்துகள் இல்லை: