செவ்வாய், 8 மே, 2012

மேற்கு வங்கத்தில் அமெரிக்க முதலீடு: மம்தாவை சந்தித்த ஹிலாரி

அரசுமுறைப் பயணமாக, கோல்கட்டா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேற்று சந்தித்துப் பேசினார். ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, மேற்கு வங்கத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சுற்றுலா, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில், அமெரிக்க நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்யும் என, ஹிலாரி உறுதி அளித்ததாக, மம்தா கூறினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் கோல்கட்டா வந்தார். தன் பயணத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்திப்பதற்காக, கோல்கட்டாவில் உள்ள தலைமைச் செயலக அலுவலகமான "ரைட்டர்ஸ் பில்டிங்'கிற்கு நேற்று காலை 11 மணிக்கு வந்தார்.
தலைமைச் செயலக வாயிலில் காத்திருந்த மம்தா, ஹிலாரியை, கை குலுக்கி வரவேற்றார். இதன்பின், தலைமைச் செயலகத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும், விரிவான பேச்சு நடத்தினர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.

அதிக முதலீடு:சந்திப்புக்குப் பின், செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி கூறியதாவது: ஹிலாரியுடனான சந்திப்பு, சாதகமானதாவும், ஆரோக்கியமாகவும் இருந்தது. மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பாராட்டினார். மேற்கு வங்கத்தை நட்பு மாநிலம் என கூறிய ஹிலாரி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு, உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இங்கு நிலவிய அரசியல் சூழல் காரணமாக, இதுவரை இங்கு அமெரிக்க நிறுவனங்களால் முதலீடு செய்ய முடியவில்லை. இனிமேல், இங்கு தகவல் தொழில்நுட்பம், மென்பொருள், சுற்றுலா, உற்பத்தி, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில், அமெரிக்க நிறுவனங்கள், பெருமளவில் முதலீடு செய்யவுள்ளதாக உறுதி அளித்தார். தீஸ்தா நதி நீர் விவகாரம், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு போன்ற விஷயங்கள் பற்றிப் பேசவில்லை.

ஷாரூக் விவகாரம்:ஹிலாரியுடனான சந்திப்பின்போது, என்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசினேன். அணுசக்தி விவகாரம் குறித்தோ, இரு தரப்பு உறவு குறித்தோ பேசும் அளவுக்கு, நான் பெரிய நபர் இல்லை. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இங்கு வந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். ஷாரூக்கான் விவகாரம் குறித்துப் பேசும்போது, அவர், மேற்கு வங்க மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்தும், அடிக்கடி அமெரிக்காவில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது குறித்தும் தெரிவித்தேன். அதற்கு அவர், ஷாரூக்கை பற்றி தனக்குத் தெரியும் என்றும், அமெரிக்காவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உலகப் புகழ் பெற்ற உரையின் நினைவாக, உலக இளைஞர் பெருவிழாவை நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், ஹிலாரியிடம் கோரிக்கை விடுத்தேன். இவ்வாறு மம்தா கூறினார்.

பாக்., மீது ஹிலாரி பாய்ச்சல்:கோல்கட்டாவின் லா மார்டினெயர் பெண்கள் பள்ளியில், நேற்று நடந்த பொதுமக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் ஹிலாரி பங்கேற்றார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:பயங்கரவாத தாக்குதல்களால், இந்தியா, அமெரிக்காவை விட, பாகிஸ்தான் தான், அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. பயங்கரவாதம் காரணமாக, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர். எனவே, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த, கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும். அல்-குவைதா அமைப்பை கட்டுப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் விரும்பும் அளவுக்கு, பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாகவே, மும்பை தாக்குதலுக்கு காரணமான, ஹபீஸ் சையது பற்றிய தகவல்களை தருவோருக்கு சன்மானம் தருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரானிடம் பற்றி பேச்சு:ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும். சர்வதேச விதிமுறைகளுக்கு உடன்படாமல், அணு சக்தி தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது. ஈரான், அணுகுண்டு தயாரித்தால், அது உலகிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈரானின் இந்த முயற்சியை தடுத்தி நிறுத்தி, அதன் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, நெருக்கடி கொடுக்க வேண்டும் என, சர்வதேச சமுதாயம் விரும்புகிறது. இந்தியாவும் இதை ஏற்றுக் கொள்ளும் என, நம்புகிறேன். இந்தியாவில் எண்ணெய் வளம் இல்லாவிட்டாலும், சவுதி அரேபியா போன்ற, வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கலாம்.

அடுத்த அதிபரா?வரும் 2016ல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், நான் போட்டியிடுவேனா என்றும், அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவேனா என்றும் கேட்கப்படுகிறது. அடுத்த அதிபர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. அமெரிக்காவின் அரசியல் முறை, மிகவும் கடினமானது. பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.இவ்வாறு ஹிலாரி கூறினார்.

*மம்தாவுடனான சந்திப்பின்போது, தாகூர் ஓவியம் வரையப்பட்ட திரைச் சீலையை, அவருக்கு ஹிலாரி பரிசளித்தார்.
*சாந்திநிகேதனில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறிய சால்வை, சுவாமி விவேகானந்தரை பற்றிய புத்தகங்கள், தாகூரின் கீதாஞ்சலியின் ஆங்கில மொழி பெயர்ப்பு புத்தகம் ஆகியவற்றை, ஹிலாரிக்கு, மம்தா பரிசாக வழங்கினார்.
*மேற்கு வங்கத்தில் பிரபலமான, சுவையான இனிப்பு வகைகள், ஹிலாரிக்கு வழங்கப்பட்டன.
*மம்தாவுடனான ஒருமணி நேரச் சந்திப்பின்போது, இனிப்பு இல்லாத காபியை மட்டுமே ஹிலாரி அருந்தினார்.
*ஹிலாரி வருகையையொட்டி, கோல்கட்டா முழுவதும் நேற்று பலத்த
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
*ஹிலாரியின் மேற்கு வங்க சுற்றுப் பயணம் தொடர்பாக, ராஜ்யசபாவில் நேற்று, திரிணமுல் காங்., கட்சி எம்.பி.,க்களுக்கும், மார்க்சிஸ்ட் எம்.பி.,க்களுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டது

கருத்துகள் இல்லை: