சனி, 12 மே, 2012

நடராஜன் வாயைத் திறக்க, தஞ்சை போலீசுக்கு வியர்த்து கொட்டுகிறது!

viruviruppu.com சசிகலா குடும்பத்தில் இருந்து கைது செய்யப்பட்ட மூவரும், ஜாமீனில் வெளியே வந்து விட்டார்கள். இவர்கள்மீது புகார் கொடுக்க ஆள் பிடிக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை.
குறைந்தபட்சம் தற்போதைக்காவது ஆள் தேடி அலைய வேண்டியதில்லை என்று காவல்துறை பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்க, மூவரில் கடைசியாக வெளியே வந்த நடராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
பொதுவாகவே இப்படியான அரஸ்ட்-பெயில் விளையாட்டுகள் எல்லாமே ஒருவித ‘அன்டர்ஸ்டான்டிங்’ அடிப்படையிலேயே நடைபெறும். பெயிலில் விடப்பட்டால், “வாயை மூடிக்கொண்டு, ‘கம்’மென்று வீட்டுக்கு போனோமா, கோழி அடித்து சூப் வைத்து குடித்துவிட்டு படுத்தோமா என்று இருக்க வேண்டும்” என்று சொல்லித்தான் வெளியே அனுப்பவார்கள்.
ஜெயிலில் இருந்து பெயிலில் வெளியே வந்த சசி சின்டிகேட்டின் முதல் இரு ஆட்களும், இந்த இன்ஸ்ட்ரக்ஷனை கவனமாக ஃபாலோ பண்ணுகிறார்கள்.
இப்போதெல்லாம், பல் துலக்கவதற்கும், சாப்பிடுவதற்கும் மட்டுமே வாய் திறக்கிறார்கள். யாரையும் தேவையில்லாமல் சந்திப்பதில்லை.
ஆனால் நடராஜன், நேற்றிரவு வெளியே விடப்பட்ட நடராஜன், திருச்சி கே.கே.நகரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். “என்னை கைது செய்ததே தவறு. என் மீது போடப்பட்ட 6 வழக்கில் 2 பேர் தற்போது வாபஸ் பெற்றுள்ளனர். நில அபகரிப்பு சட்டத்தை என் மீது மோசடியாக பயன்படுத்தி உள்ளனர். இதற்காக தலைமைச் செயலாளர், முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, திருச்சி ஐஜி, டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஹைகோர்ட்டில் 3 ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளோம்” என்றார்.
அவர் கூறக்கூற, இதையெல்லாம் நம்ப முடியாமல், தாம் கனவுதான் காண்கிறோமோ என்று கைகளை கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள் செய்தியாளர்கள்.
“ஜெயலலிதா வீட்டில் இருந்து நான் வெளியேறி 20 ஆண்டுகள் ஆகிறது. என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். நான் அந்தக் கட்சியில் உறுப்பினராகவே இல்லை. அப்படி இருந்ததாக அவர்களால் நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டார் அவர்.
இறுதியில், “நான் இதுவரை காலமும் அமைதியாக இருந்தேன். இனியும் அப்படி இருக்கப் போவதில்லை. நேரடியாக அரசியலில் இறங்குவேன். புதிய கட்சி தொடங்குவது பற்றி இப்போது சொல்ல விரும்பவில்லை” என்று கூறி கார்டனை டென்ஷன் ஆக்கியுள்ளார்.
உள்ளே அடைந்து கிடந்த நிலையில் இருந்துவிட்டு, வெளியே வந்த வேகத்தில் வார்த்தைகளை கொட்டி விட்டாரா, அல்லது, நிஜமாகவே போர்க்கொடி தூக்கப் போகிறாரா என்பது தெரியவில்லை. சும்மா ஒரு ஃபுளோவில் கூறப்பட்ட வார்த்தைகளாக இல்லாமல், நிஜமாகவே அவர் கூறியிருந்தால், தஞ்சைப் போலீசுக்குதான் நேரம் சரியில்லை.
கேஸ் கணக்கு காட்ட ஆள் பிடித்த காலம் போய், புகார் கொடுக்கவும் ஆள் பிடிக்க வேண்டியிருக்கும்! பாவம், தஞ்சை போலீஸ்காரர்கள்.
இப்போதெல்லாம் ஜெயிலில் இருந்து பெயிலில் போனவர்களைவிட, பெயிலில் விட்டவர்கள, நிம்மதியாக கோழி அடிச்சு சூப் குடிக்க விடுகிறார்களில்லை!

கருத்துகள் இல்லை: