வெள்ளி, 11 மே, 2012

குஜராத் கலவரங்களுக்கு எதிராக அப்துல்கலாம் ஏதும் சொல்லல்லை

குடியரசுத் தலைவர் பதவி அரசியல்ரீதியில் அவ்வளவு ஒன்றும் முக்கியமானதல்ல. யாராக இருந்தாலும் பெரிய தாக்கம் ஏதும் இருக்காது. அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவியை தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைத்துக்கொண்டார். நாடு முழுதும் சுற்றினார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேசினார். அவரால் பல லட்சக்கணக்காக மாணவர்கள் ஊக்கம் கொண்டனர். அதே நேரம் சில ஃப்ரிஞ்ச் ஆசாமிகள் அவரை ‘அரசவைக் கோமாளி’ என்றே அழைத்தனர். சில அரசியல் நோக்கர்கள், கலாம் மிகவும் ஆபத்தானவர் என்று கருதினர். முக்கியமாக அவருடைய அணு ஆயுத ஆதரவு, அணு மின் நிலைய ஆதரவு ஆகியவையும் குஜராத் கலவரங்களுக்கு எதிராக அவர் ஏதும் சொல்லாததும் அவர்களுடைய கோபத்துக்குக் காரணம். சில வலதுசாரிகள், கலாமால்தான் சோனியா பதவிக்கு வரமுடியவில்லை என்று பெருமையுடன் சொல்கின்றனர். சோனியா காந்தி பிரதமர் பதவிக்கு வருவதில் எனக்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லை. இப்போது இருக்கும் மன்மோகன் சிங் ஆட்சியைவிட அது எந்தவிதத்திலும் மோசமாக இருக்க முடியாது. இனி வரப்போகும் ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா ஆட்சியைவிடவும்தான்.

அடுத்து வந்த பிரதிபா பாடில், ஒரு அய்யோ பாவம். தன் நீண்ட, நெடிய குடும்பத்தை அழைத்துக்கொண்டு பல நாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்று வந்தார். கலாம் போகும் இடங்களிலெல்லாம் என்ன பேசுகிறார் என்பதைத் தன் இணையத் தளத்தில் போட்டு வைத்திருப்பார். கலாமின் கவிதைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அந்தப் பேச்சுகள் பெரும்பாலும் கவனத்துடன் எழுதப்பட்டதாக இருக்கும். மிகவும் ஆழமாக இல்லாவிட்டாலும்கூட கேட்போரை நன்கு கவரும். பாடில் அதையெல்லாம் செய்தாகவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயமில்லைதான்.

நம் நாட்டின் குடியரசுத் தலைவர்கள் வித்தியாசமானவர்கள். வெவ்வேறு காரணங்களுக்காகப் பதவிக்கு வந்தவர்கள். ராஜேந்திர பிரசாத் ஒரு வழக்கறிஞர். காந்தியைப் பின்பற்றி தேசியப் போராட்டத்தில் இறங்கியவர். அரசியல் அவருக்கு அத்துப்படி. தனக்குப் போட்டியாக பிரசாத் இருந்துவிடக்கூடாதே என்பதற்காக நேருவால் கட்டம் கட்டி குடியரசுத் தலைவராக அனுப்பப்பட்டவர் என்கிறார்கள். ராதாகிருஷ்ணன் அரசியல்வாதி கிடையாது. ஆனால் மிக்கப் படித்தவர். தத்துவவாதி. இதுவரையிலான அனைத்துக் குடியரசுத் தலைவர்களிலுமே மிகச் சிறந்த அறிவாளி அவராகத்தான் இருக்கவேண்டும். அசலான புத்தகங்களை எழுதியுள்ளார். ஜாகிர் ஹுசேன் கல்வியாளர். பொருளாதாரத்தின் முனைவர் பட்டம் பெற்றவர். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர்.

அடுத்து குடியரசுத் தலைவர் ஆனவர் விவி கிரி. முழு நேர அரசியல்வாதி. காங்கிரஸ் கட்சியில் பிளவு நீறுபூத்த நெருப்பாக இருந்தது. காமராஜ் தலைமையிலான சிண்டிகேட் நீலம் சஞ்சீவ ரெட்டியை நிறுத்த, இந்திரா காந்தி ‘மனச்சாட்சியின்படி வாக்களியுங்கள்’ என்று கட்சிக்காரர்களைத் தூண்ட, கிரிக்குக் கிடைத்தன வாக்குகள். அதன்பின் இந்திரா காந்தி மிகப் பெரும் அதிகாரத்தைத் தன் கைக்குள் கொண்டுவந்தார். ஊர் பேர் தெரியாத அஸ்ஸாமிய காங்கிரஸ்காரரான ஃபக்ருதீன் அலி அகமதுவை குடியரசுத் தலைவர் ஆக்கினார். நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்படுவதில் தன் பங்கை ஆற்றினார் அவர்.

பின் இந்திரா காந்தியால் பழிவாங்கப்பட்ட நீலம் சஞ்சீவ ரெட்டி, நெருக்கடி நிலைக்குப் பிறகான ஜனதா ஆட்சிக்காலத்தில் குடியரசுத் தலைவர் ஆனார். அடுத்த மூன்று குடியரசுத் தலைவர்களும் காங்கிரஸின் மூத்த தலைவர்களே. கியானி ஜெயில் சிங், ஆர்.வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா ஆகியோர் காங்கிரஸ் சார்பாக மாநில முதல்வர்களாக அல்லது மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள். காங்கிரஸின் வாக்கு வலிமை காரணமாக எந்தவித எதிர்ப்பும் இன்றி குடியரசுத் தலைவர் ஆனவர்கள்.

அடுத்த குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் ஒரு மாற்றம். அரசு அதிகாரியான இவர் ஓய்வுக்குப் பின் குடியரசுத் துணைத் தலைவராகவும் பின் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

காங்கிரஸின் வலிமை முற்றிலுமாகக் குன்றிய நிலையில் பாஜகவிடம் தேவையான வலிமை இல்லாத காரணத்தால் பெரும்பாலானோருக்கு ஏற்புடையவராக அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு மீண்டும் காங்கிரஸ் அரசியல்வாதி பிரதிபா பாடில்.

மேலே உள்ள முழுப் பட்டியலிலிருந்து பார்த்தால், குடியரசுத் தலைவர்கள் பெரும்பாலும் காங்கிரஸ் அரசியல்வாதிகளாக, இந்திரா/ராஜிவ்/சோனியா ஆதர்வு நிலைப்பாட்டை எடுப்பவர்களாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தனிப்பட்ட முறையில் சாதனையாளர்களாக இருக்கவேண்டும். தனிப்பட்ட சாதனையாளர்கள் என்ற வரிசையில் ராதாகிருஷ்ணன், ஜாகிர் ஹுசேன், கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் என்ற நால்வர் மட்டுமே வருகிறார்கள். இவர்களுக்கு அரசியல் நோக்கங்கள் இருக்கலாம் என்றாலும் இவர்கள் பெரும்பாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்.

அந்த ஸ்டேச்சரில் இன்று இந்தியாவில் வேறு யாருமே இல்லை. அதனால்தான் மீண்டும் அப்துல் கலாம் என்ற பெயர் முன்வைக்கப்பட்டது. அவருக்கு வயது அதிகம் ஆகிவிட்டது. மேலும் எதிர்ப்பு இருந்தால் அவர் போட்டியில் இருப்பாரா என்பது சந்தேகம். அத்துடன் அவரது விருப்பமே மாணவர்களைச் சந்தித்துப் பேசுவது. இன்றும்கூட அவர் அதனைச் செய்துவருகிறார். அவருடைய சந்திப்புகளில் கூட்டம் அலைமோதுகிறது. மீண்டும் குடியரசுத் தலைவர் ஆவது அவருடைய விருப்பத்தை வெகுவாகப் பாதிக்கும். அதற்கு அவர் விரும்புவாரா என்று தெரியவில்லை. எனவே கலாமை விட்டுவிடுவோம்.

பாஜக யாரைக் குறிப்பிட்டுச் சொன்னாலும் அவரை ஜெயிக்கவைக்கத் தேவையான வாக்குகளைத் தன்னிடத்தே கொள்ளவில்லை. அதேபோலத்தான் காங்கிரஸும். ஆனால் பொதுவாக காங்கிரஸ் குறிப்பிடும் ஒரு கேண்டிடேட் ஜெயிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

காங்கிரஸின் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆவதை நான் ஆதரிக்கிறேன். இரண்டு காரணங்களுக்காக. முதலாவது: நேர்மையான ஆளாகத் தெரிகிறார். பண்பாளர். பெரும்பாலான எதிர்க்கட்சியினர்கூட இவரை ஏற்றுக்கொள்வார்கள்.

இரண்டாவது காரணம் முக்கியமானது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்தைக் குட்டிச்சுவர் ஆக்கியதில் முக்கியப் பங்கு முகர்ஜியுடையது. எனவே இவரைக் குடியரசுத் தலைவர் ஆக்கி அனுப்பிவிட்டால் மத்திய அமைச்சரவையில் அந்த இடம் காலியாகிவிடும். புதிதாக வரப்போகும் நிதியமைச்சர் சில நல்ல காரியங்களைச் செய்யலாமே என்று ஓர் ஆதங்கம்தான்.

கருத்துகள் இல்லை: