திங்கள், 7 மே, 2012

காதலிக்காமலேயே காதல் அதாவது, காதல் காட்சிகள் இல்லாமலேயே

கல்லூரிக்கு மேலே காதலுக்குக் கீழே

பண்ணையார் மகளை பண்ணையாள் காதலிப்பது… மதம் மாறிக் காதலிப்பது… காதலி அல்லது காதலனுக்கு உலகிலேயே தீர்க்க முடியாத நோய் வந்துவிடுவது… பார்க்காமலே காதல், சொல்லாமலே காதல், இறந்து போன காதலனின் கண்ணைப் பொருத்திக் கொண்டவன் மேல் காதல், காதலுக்காக வெட்ட முடிந்ததையெல்லாம் வெட்டுதல் என தமிழ் திரையுலகத்தினரிடம் மாட்டிக்கொண்டு காதல் படும் பாடு இருக்கிறதே… அனுபவித்தால்தான் புரியும். ஆனால், இந்த காக்கைக் கூட்டத்தின் நடுவே மாட்டிக்கொண்டு தவிக்கும் சிறு குயிலாக ஒருவர் உண்டு. அவர்தான் பாலாஜி சக்திவேல்.
காதலை இதுவரை யாருமே சொல்லியிராத கோணத்தில் சொல்லவேண்டும் என்பதுதான் பாலாஜி சக்திவேலின் லட்சியமும் கூட. இந்தப் படத்தில் காதலிக்காமலேயே காதல் அதாவது, காதல் காட்சிகள் இல்லாமலேயே காதல் என்ற புதுமையான பாணியில் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு பணக்கார மாணவன் அதே வயதில் இருக்கும் இன்னொரு பணக்காரப் பெண்ணைக் காதலிப்பதுபோல் நடித்து செல்போனில் அவளை ஆபாசமாக படமெடுக்கிறான். அது அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்ததும் சண்டைபோட்டுப் பிரிந்துவிடுகிறாள். கோபப்படும் அந்தப் பையன் அவள் மீது ஆசிட் ஊற்ற முயற்சி செய்கிறான். ஆனால், விதிவசமாக அது அந்தப் பணக்காரப் பெண்ணின் வீட்டில் வேலை பார்க்கும் கதாநாயகி மீது ஊற்றப்பட்டுவிடுகிறது. கதாநாயகியை ஒருதலையாகக் காதலிக்கும் நாயகன்தான் இதைச் செய்திருப்பான் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறை அவனை அழைத்து விசாரிக்கிறது. அவன் தன்னுடைய சோகமயமான வாழ்க்கையை விவரிக்கிறான். அதுதான் படத்தின் முதல்பாதி.
இரண்டாம் பாதியில் அந்தப் பணக்காரப் பெண், தன்னிடம் மோசமாக நடந்துகொண்ட பையன்தான் ஆசிட் ஊற்றியிருப்பான் என்று சொல்கிறாள். பணக்கார மாணவன்தான் செய்திருக்கிறான் என்பது ஆசிட் பாட்டிலில் கிடைக்கும் கைரேகையில் இருந்து தெரியவருகிறது. ஆனால், இந்த இடத்தில் காவல்துறை அதிகாரி டபுள் கேம் ஆடுகிறார். பணக்கார மாணவனின் அம்மாவிடமிருந்து பத்து லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு நாயகனைக் குற்றவாளியாக ஆக்கிவிடுகிறார்.
கதாநாயகியின் முகம் குணமாகவேண்டுமென்றால், பத்து லட்ச ரூபாய் தேவைப்படும்; பழியை ஏற்றுக் கொள். பணக்கார மாணவனின் அம்மாவிடம் அந்தப் பணத்தை வாங்கித் தருகிறேன் என்று காவல்துறை அதிகாரி சொல்கிறார். கதாநாயகனும் தன் காதலியின் முகம் குணமாகவேண்டும் என்று அந்தப் பழியை ஏற்றுக் கொள்கிறான். ஆனால், காவல்துறை அதிகாரி அவனை ஏமாற்றிவிடுகிறார். இது தெரியவரும் நாயகி என்ன செய்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.
செல்போனை வைத்து மாணவர்கள் ஆபாசப் படங்கள் எடுப்பது உண்மையில் நடக்கக்கூடிய விஷயம்தான். ஆனால், இந்தப் படத்தில் காட்டப்பட்டிருப்பதுபோல் அது நடக்க வாய்ப்பில்லை. ஸ்கர்ட் அணிந்த ஒரு பெண்ணுக்கு எதிரில் அமர்ந்துகொண்டு பேசியபடியே, தொடைக்கு நேராக செல்போனை வைத்து படமெடுப்பது, கடற்கரையில் குளிக்கும்போது தள்ளி உட்கார்ந்து படமெடுப்பது, ஹோட்டல் அறையில் சார்ஜ் பண்ண கொண்டு வந்து போனை வைத்துவிட்டு உடை மாற்றுவதைப் படமெடுப்பது என செய்வதெல்லாம் அந்தப் பொண்ணுக்குத் தெரியாமல் நடக்க சாத்தியமில்லை. சினிமாத்தனம் வேண்டாம் என்று நினைப்பது சரிதான். ஆனால், தர்க்கபூர்வமாகவும் அந்தக் காட்சிகள் சரியாக இருக்க வேண்டுமல்லவா?
அடுத்ததாக, இப்படி ஆபாசப் படங்களை எடுக்கும் ஒருவன் தன்னுடைய செல்போனை மிகவும் பாதுகாப்பாகவே வைத்துக்கொள்வான். படத்திலோ எந்தப் பெண்ணை ஆபாசமாகப் படம் எடுத்தானோ அவள் கையில் எளிதில் சிக்கும்படியாக வைத்துவிட்டுப் போகிறான். இத்தனைக்கும் இதற்கு முன் ஒருநாள் காஃபி ஷாப்பில் இருவரும் சந்தித்தபோது போனை அவனுக்குத் தெரியாமல் எடுத்துப் பார்க்கவும் செய்திருக்கிறாள். எனவே, ஆபாசப் படம் எடுத்த பிறகும் அப்படி வைத்துவிட்டுப் போகிறான் என்பது நம்பும்படியாக இல்லை.
அந்தப் பெண் செல்போனை எடுத்துப் பார்க்கும் நேரம் பார்த்து அந்தப் பையனின் நண்பர்கள், ஆபாசப் படம் எடுத்தாகிவிட்டதா என்று மெசேஜ் அனுப்புகிறார்கள். சுதாரித்துக் கொள்ளும் அந்தப் பெண் செல்லில் பதிவு செய்யப்பட்டிருக்கும் படங்களைப் பார்க்கிறாள். அடுத்த விநாடியே அவற்றை அழித்துவிடுவதோடு மெமெரி கார்டையும் எடுத்துக் கொண்டுவிடுகிறாள். அவர்கள் இருவருக்கு இடையில் சண்டை வந்து பிரிந்துவிடுகிறார்கள். இந்தப் பையன் மீண்டும் அவள் பின்னால் சென்று தொந்தரவு செய்கிறான். போலீஸில் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று அந்தப் பெண் மிரட்டுகிறாள். அதன் பிறகு பள்ளிக்குப் போகும்போது தன் அம்மாவைத் துணைக்கு அழைத்துச் செல்கிறாள். அதாவது, அவள் பிரச்னையைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஒதுங்கிப் போகிறாள்.
இப்போது, தவறு செய்து மாட்டிக்கொண்ட ஒருவன் என்ன செய்வான்? சரி, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று நினைத்து அவளிடமிருந்து ஒதுங்கிவிடலாம். அல்லது அவள் நாளைக்கு யாரிடமாவது சொல்லிவிடுவாளோ என்று பயந்து அவளைக் கொல்ல முயற்சி செய்யலாம். கொலை என்பது 12 வகுப்பு மாணவனுக்கு அதிகப்படியானது என்று நாம் இப்போது சொல்ல முடியாது. ஆசிரியரையே குத்திக் கொல்லும் அளவுக்கு மாணவர்கள் சீரழிவின் பாதையில் விரைவாக போக ஆரம்பித்திருக்கும் காலம் இது. எனவே, அது சாத்தியமான ஒன்றுதான்.
இந்தப் படத்திலும் அந்தப் பையன் காரில் வேகமாக வந்து அந்தப் பெண்ணைக் கொல்ல முயற்சி செய்கிறான். ஆனால், அவள் சிறு காயத்துடன் தப்பித்துவிடுகிறாள். இந்த நிலையில் அவனுடைய அடுத்த முயற்சியும் நிச்சயம் இதுபோல் வன்முறை மிகுந்த ஒன்றாகவேதான் இருக்கும். ஆனால், படத்தில் ஆசிட்டை எடுத்து அந்தப் பெண்ணின் முகத்தில் ஊற்ற முயற்சி செய்கிறான். கொலைக்குக் குறைவாக அவன் செய்யும் எந்தவொரு செயலும் அவனுக்கு எந்தவகையிலும் பயன் தரப்போவதில்லை. அது பிரச்னையை மேலும் பெரிதாக்கத்தான் செய்யும்.
காதலித்த பெண் தன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் ஒருவன் அவள் முகத்தில் ஆசிட்டை ஊற்றுவதை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆபாசப் படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் அப்படிச் செய்ய எந்த காரணமும் இல்லை. இத்தனைக்கு அந்தப் பெண் பிரச்னையில் இருந்து ஒதுங்கிப் போகத்தான் விரும்பி இருக்கிறாள்.
அதுபோல், காவல்துறை அதிகாரி செய்யும் செயலும் நம்பும்படியாக இல்லை. ஆசிட் ஊற்றியது யார் என்பது அவருக்குத் தெரிய வருகிறது. அந்தப் பையனின் அம்மாவிடம் இருந்து பத்து லட்ச ரூபாய் கறக்க முடிவு செய்கிறார். பழியை ஏழை நாயகன் மீது போடத் தீர்மானிக்கிறார். ஆனால், அதற்கு அவர் செய்யும் செயல்களைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
செய்யாத தவறைச் செய்ததாக ஒப்புக் கொள்ளச் சொல்லி ஏழை நாயகனை லாக்கப்பில் போட்டு சாவடி அடிக்க வைக்கிறார். அதற்கு அவன் சிறிதும் மசியாமல் போகவே, அன்பாகப் பேசி ஒப்புக்கொள்ள வைக்கிறார். நீ காதலித்த பெண்ணின் முகத்தில் ஆசிட் பட்டதால் ஏற்பட்ட தழும்புகளைக் குணப்படுத்த அந்தத் தவறைச் செய்த பணக்காரப் பையனின் அம்மாவிடம் இருந்து பத்து லட்ச ரூபாய் வாங்கித் தருகிறேன். குற்றத்தை நீதான் செய்ததாக ஒப்புக்கொள் என்று நைச்சியமாகப் பேசுகிறார். இதெல்லாம் அவசியமே இல்லை. குற்றவாளி ஒப்புக்கொண்டால்தான் அவனுக்கு தண்டனை கொடுக்க முடியும் என்று எந்த சட்டத்தில் இருக்கிறது?
அதுவும்போக ஏழை ஒருவனை வழக்கில் சிக்க வைக்க விரும்பினால், ஒரு காவல் துறை அதிகாரியால் வெகு எளிதில் அதைச் செய்துவிட முடியும். இத்தனைக்கும் இந்தப் படத்தில் அந்த ஏழைப் பெண்ணின் அம்மா, கதாநாயகன்தான் செய்திருப்பான் என்றுதான் சாட்சி சொல்லியிருக்கிறார். ஆசிட் பாட்டிலில் நாயகனின் கை ரேகை இருந்ததாக ஒரு பொய் ரிப்போர்டும் ஓரிரு பொய் சாட்சிகளையும் ஏற்பாடு செய்தால் விஷயம் முடிந்துவிடும். காவல்துறை அதிகாரிக்கு ஏழை நாயகனுடன் டீல் பேச வேண்டிய அவசியமே கிடையாது.
இவையெல்லாம் படத்தின் சாதாரணமான தவறுகள்தான். ஆனால், மிகவும் பெரிய தவறு என்பது பாலாஜி சக்திவேலின் கதை அமைப்பில் இருக்கிறது. இந்தப் படத்தோடு அவருடைய முந்தைய இரண்டு படங்களையும் சேர்த்து வைத்துப் பார்க்கும்போது, ஒரு விஷயம் தெரியவருகிறது. காட்சி அமைப்பு, கதை நிகழ்வுகள், வசனம், நடிகர் தேர்வு என பல விஷயங்களில் வழக்கமான சினிமாத்தனங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதில் ஆர்வம் கொண்டிருக்கும் அவர் படத்தின் க்ளைமாக்ஸை மிகவும் வித்தியாசமானதாக, அதிர்ச்சியானதாக எடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். க்ளைமாக்ஸ் என்பது அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அது இயல்பானதாக, தர்க்கபூர்வமானதாக இருக்கவேண்டும். அதுவும் நீங்கள் சினிமாத்தனங்களை அறவே விலக்கும் ஒருவராக இருக்கும்பட்சத்தில் உடலுக்குப் பொருத்தமானதாகத்தானே தலை இருக்க வேண்டும்.
காதல் படத்தில் காதலியின் அப்பாவே காதலனை அடித்து பைத்தியமாக்கிவிடுகிறார். காதலன் எங்கோ யாரையோ திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருப்பான் என்று நினைத்து காதலி வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டுவிடுகிறாள். தன் காதலனைப் பைத்தியமாக நடுத்தெருவில் ஒருநாள் பார்க்க நேருகிறது. நிலை குலைந்துபோய்விடுகிறாள். காதலியின் அப்பாவே காதலுக்கு எதிரியாக வந்தார் என்பது மிகவும் நம்பகமான ஒன்று. எனவே, இந்த அதிர்ச்சி க்ளைமாக்ஸ் கதைக்குப் படு பொருத்தமாக அமைந்துவிட்டது.
கல்லுரி படத்தில் நகர்ப்புறத்தில் வசித்து வந்த நாயகி, கிராமப்புற கல்லூரிக்குப் படிக்க வருகிறாள். அதுதொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை படம் முழுக்கக் கொண்டு செல்வார். தருமபுரியில் பேருந்து தீ வைக்கப்பட்டு மூன்று மாணவிகள் இறந்த சம்பவத்தை படத்தின் க்ளைமாக்ஸாக வைத்திருந்தார். ஒரு அரசியல் பின்னணி கொண்ட படத்தில்தான் அரசியல்வாதிகளின் செயலால் ஏற்படும் இழப்பை க்ளைமாக்ஸாக வைக்க முடியும். அந்த வகையில் அந்தப் பொருந்தாத க்ளைமாக்ஸ் பார்வையாளர்களைப் படத்துடன் ஒன்றவிடாமல் செய்துவிட்டது. அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் நடந்த பேருந்து எரிப்பு சம்பவத்தை ஆந்திராவில் நடந்ததாக வேறு காட்டியிருந்தார். எனவே, அது சமூக அக்கறை சார்ந்த நோக்கிலும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.
இந்தப் படத்தில் ஓரளவுக்கு நாயகியுடன் தொடர்புடைய ஒருவரை வில்லனாக காட்டியிருக்கிறார். ஆனால், இரண்டாவதாக இன்னொரு வில்லனைக் காட்டி அதிரடி க்ளைமாக்ஸை அவரோடு முடித்துக்கொண்டுவிட்டார். அப்படியாக இந்த அதிரடி க்ளைமாக்ஸ் யுக்தியானது கல்லூரி படத்தைவிட சற்று மேலானதாகவும் காதல் படத்தைவிடக் கீழானதாகவும் இருக்கிறது. படத்தின் வெற்றியும் நிச்சயம் அதுபோலவே அமையும்.
முதல் பாதிக் கதையானது ஏழைக் காதலனின் கோணத்தில் இடம்பெறுகிறது. இரண்டாவது பாதி கதையானது பணக்காரப் பெண்ணின் பார்வையில் சொல்லப்படுகிறது. இப்படி இரண்டு கதாபாத்திரங்களின் பார்வையாகக் கதையைச் சொல்லும்பாணியானது அதற்குப் பின்னால் இருக்கும் எளிய சூத்திரம் தெரியாதவர்களுக்கு மிகப் பெரிய சாதனையாகவே தோன்றும். அந்த வகையில் சராசரி தமிழ் பார்வையாளர்களுக்கு நிச்சயம் அது பிரமிப்பை ஊட்டுவதாகவே இருக்கும்.
உண்மையில் இந்தப் படத்தை நிச்சயம் வேறு விதமாக அருமையாக எடுத்திருக்க முடியும். ஒரே ஒரு பெண்ணை இரண்டு பேர் காதலிக்கிறார்கள். ஒருவன் உண்மையாகக் காதலிக்கிறான். இன்னொருவன் ஆபாசப் படங்கள் எடுப்பதற்காக காதலிப்பதுபோல் நடிக்கிறான் (இதிலும் உண்மைக் காதலன் ஏழை என்றும் ஆபாசப் படம் எடுப்பவன் பணக்காரன் என்றும் தனியாக நான் சொல்லத் தேவையில்லை).
ஏழை நாயகியை பணக்காரன் ஆசை வார்த்தைகள் சொல்லி மயக்குகிறான். புதிய ஆடைகள் வாங்கிக் கொண்டுவந்து தந்து போட்டுக் கொள்ளச் சொல்கிறான். ரகசியமாக செல்போனை அந்த அறையில் வைத்து படம் எடுத்து தன் நண்பர்களுக்குக் காட்டி மகிழ்கிறான். அவன் இப்படிச் செய்வது ஏழை நாயகனுக்குத் தெரியவருகிறது. நாயகியைப் பார்த்து எச்சரிக்கிறான். ஆனால், அவளோ பணக்கார மாணவனை நம்புகிறாள்; ஏழை நாயகனைத் திட்டி அனுப்புகிறாள். இதுபோல் பல சம்பவங்களில் பணக்கார மாணவன் நல்லவனாகவும் ஏழை நாயகன் கெட்டவனாகவும் சிக்கிக் கொள்கிறான்.
அந்த பணக்கார மாணவனுக்கு வேறொரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. சில நாட்கள் அவனுடன் பழகியதில் அவனுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் தோன்றவே அந்தப் பெண் அவனிடம் இருந்து விலக ஆரம்பிக்கிறாள். அவள் மீது கோபம் கொள்ளும் அந்த பணக்கார மாணவன் ஆசிட் ஊற்ற முடிவெடுக்கிறான். அது விதிவசமாக ஏழை நாயகியின் மேல் ஊற்றப்பட்டுவிடுகிறது.
ஏழை நாயகன்தான் ஆசிட் ஊற்றியிருப்பான் என்று விசாரணையை முதலில் ஆரம்பிப்பார்கள். அவன் தன்னுடைய சோகக் கதையைச் சொல்லி முடிப்பான். விசாரணை முடியும்வரை தினமும் வந்து காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடவேண்டும் என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள். வெளியே வந்தவன் முதல் வேலையாக நாயகிக்கு சிகிச்சை செய்து அவளைக் குணப்படுத்த வேண்டும் என்று தவிப்பான். பணத்தைப் புரட்ட முயற்சி செய்வான். பணக்கார மாணவனின் அம்மா தன் மகனைத் தண்டனையில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்துகொண்டிருப்பார்.
எங்கு தேடியும் பணம் கிடைக்காமல் போகவே, நாயகன் அந்தப் பணக்கார மாணவனை நேராகச் சந்தித்து, நீதான் ஆசிட் ஊற்றினாய் என்பது எனக்குத் தெரியும். இருந்தும் அந்தப் பழியை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீ என் காதலியின் சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவு என்று கேட்பான். அவனும் சரி என்று சம்மதிப்பான். ஏழை நாயகியை காதலித்ததாகவும் அவள் வெறுத்ததால் அவள் மேல் ஆசிட் ஊற்றியதாகவும் கதாநாயகன் நீதிமன்றத்தில் பொய்யாகக் குற்றத்தை ஏற்றுக் கொள்வான். அவனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுவிடும்.
அதன் பிறகு பணக்கார மாணவன் கேட்ட பணத்தைத் தராமல் ஏமாற்றிவிடுவான். இந்த விஷயங்கள் எல்லாம் நாயகிக்குத் தெரியவரும். தான் இது நாள் வரை வெறுத்து ஒதுக்கியவன்தான் உண்மையாகத் தன்னைக் காதலித்திருக்கிறான். தான் நல்லவன் என்று நினைத்து யாரிடம் பழகினோமோ அவன்தான் எல்லா பிரச்னைக்கும் காரணம் என்பது தெரிந்துகொண்டதும் நேராக அவன் வீட்டுக்குப் போவாள். அவனுடைய அரசியல் செல்வாக்கு, பணபலம் எல்லாவற்றையும் சொல்லிக் காட்டிவிட்டு, எங்களைப் போன்ற ஏழைகளால் என்ன செய்ய முடியும் என்ற அகம்பாவத்தில்தானே இப்படியெல்லாம் நடந்துகொள்கிறாய்… உன்னை என்ன செய்கிறேன் பார் என்று ஒரிஜினல் படத்தில் செய்திருக்கும் செயலைச் செய்து பழிவாங்குவாள்.
இந்த வழக்குக்கு மக்களிடையே இன்னும் நியாயமான தீர்ப்பு கிடைத்திருக்கும்.
0
B.R. மகாதேவன்

கருத்துகள் இல்லை: