வியாழன், 10 மே, 2012

நடுரோட்டில் ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் ஜீயர் உடல்

திருச்சியில் நடுரோட்டில் ஆம்புலன்ஸில் ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் ஜீயர் உடல்

திருச்சி:  ஸ்ரீரங்கத்தில் உள்ள பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்தின் 4வது பட்ட ஜீயர் லட்சுமண ராமானுஜ ஜீயரின் உடல் நடுரோட்டில் ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடம் உள்ளது. கடந்த 100 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த மடத்திற்கு என சுமார் ரூ. 50 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளது. இந்த மடத்தின் 4வது பட்ட ஜீயராக இருந்த லட்சுமண ராமானுஜ ஜீயர் (90) கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி முதல் மாயமானார். இதையடுத்து அவரை கண்டுபடித்து தருமாறு ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் மடத்தின் சிஷ்யர்கள் புகார் செய்தனர்.
இந்த புகார் குறித்து போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு ஏப்ரல் 20ம் தேதி சி.பி.சி.ஐ. டி. வசம் மாற்றப்பட்டது.
மூன்று மாத விசாரணைக்கு பிறகு கொல்கத்தாவில் இருந்த லட்சுமண ராமானுஜ ஜீயரை கண்டுபிடித்து அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார் அவரை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் தனக்கு 87 வயதாகிவிட்டதால் இனி ஜீயராக தொடர விரும்பவில்லை என்றும், தனது சொந்த ஊரான கொல்கத்தாவிற்கே செல்லவிரும்புவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 7ம் தேதி பலஹாரி புருஷோத்தம ராமானுஜர் ஜீயர் மடத்தை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. மேலும் மடத்தின் நிர்வாக அதிகாரியாக சம்பத்குமார் என்பவரை நியமனம் செய்தது. மடத்தின் சமையல்காரர் பத்ரி நாராயணன், அதிகாரி சம்பத்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து போலீசார் பத்ரி நாராயணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு பத்திரி நாராயணன் கொல்கத்தாவில் லட்சுமண ராமானுஜ ஜீயர் இறந்துவிட்டதாகக் கூறி அவரது உடலை திருச்சிக்கு கொண்டு வந்தார். அவரது உடலை பக்தர்களின் பார்வைக்கு மடத்தில் வைக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு அதிகாரி சம்பத்குமார் அனுமதி அளிக்க மறுத்தார்.

ஆனால் பத்திரி நாராயணன் இந்த மடம் லட்சுண ராமானுஜ ஜீயரின் வீடு. அதனால் இங்கு வைத்துவி்ட்டு தான் அடக்கம் செய்வேன் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டு அவரது உடலை திருவானைக்காவல் ட்ரங்கு ரோட்டில் உள்ள தனது வாடகை வீட்டுக்கு முன்பு ஆம்புலன்ஸில் வைத்துள்ளார். இதனால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: