செவ்வாய், 8 மே, 2012

SunTv VijayTv போட்டி போட்டு மக்களை கோடீஸ்வரர்களாக்கும்

தமிழ்நாட்டு மக்களை கோடீஸ்வரர்களாக்க போட்டு போட்டுக்கொண்டு கோடீஸ்வர நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன சில தமிழ் தொலைக்காட்சிகள். இந்த நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகளை விட நிகழ்ச்சி நடத்தப்படும் அரங்குகளே பிரம்மாண்டமாய் இருக்கின்றன என்கின்றனர் ரசிகர்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி’, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ போன்ற நிகழ்ச்சிகள் மக்களை சற்றே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
சன் தொலைக்காட்சியில் வாரம் முழுவதும் அழுகை தொடர்களை போட்டு ஒப்பேற்றுகின்றனர். வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் கையில் ஒரு கோடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதனை தொகுத்து வழங்குபவர் நடிகர் ரிஷி. இவர் ஏற்கனவே ‘டீலா நோ டீலா’ நிகழ்ச்சியின் மூலம் சன் டிவி நேயர்களுக்கு அறிமுகமானவர்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமே ஒரு கோடி ரூபாயை விளையாடுபவர்களின் கையில் கொடுத்து விட்டு பின்னர் கேள்விகளை கேட்கின்றனர் என்பதே.
மொத்தமே ஏழு கேள்விகள்தான். ஒவ்வொரு சுற்றிலும் கேள்விகளுக்கான ஆப்சன்ஸ் கூறி அதிலிருந்து கேள்விகளைக் கேட்கின்றனர். பதில்களின் மேல் பணத்தை வைத்து விளையாட வைக்கின்றனர். ஏழாவது கேள்வி வரை வந்தவர்களுக்கு சன் தொலைக்காட்சியே ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்குகிறது. சுவாரஸ்யமாகத்தான் செல்கிறது. விளையாடுபவர்களையும், பார்ப்பவர்களின் இதயத்துடிப்பை எகிறச் செய்கின்றனர்.
அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடிகர் சூர்யா தொகுத்து வழங்குகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சூர்யாவுக்கு புதுசு. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய ஒத்திகை எல்லாம் சூர்யா பார்த்திருக்கிறார். மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்சியிடம் கேள்வி கேட்டு பதிலுக்கு எப்படி ரியாக்ட் செய்யவேண்டும் என்பது வரை ஒத்திகை நடைபெற்றுள்ளது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சில 'அறிவுப்பூர்வமான' கேள்விகள் இடம் பெற்றாலும் ( ஈ அடிச்சான் காப்பி, நாய் அடிச்சான் காப்பி) போகப் போக பிக் அப் ஆகிவிட்டது நிகழ்ச்சி, சூர்யாவும் தான்.
அவ்வப்போது சில பிரபலங்களும் விஜய் டிவி நிகழ்ச்சியில் சூர்யா உடன் பங்கேற்கின்றனர். இதை கிண்டலடிக்கும் விதமாக சன் டிவியில் புரோமோ போடப்பட்டது. எங்கள் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஜாக்கிசான் எல்லாம் வரமாட்டாங்க. இது மக்களுக்கான நிகழ்ச்சி என்றெல்லாம் போட்டு தாக்கினர்.
ஆனால், இதற்கெல்லாம் விஜய் டிவி தரப்பில் இருந்து பதிலடி இல்லை. அவர்கள் வழக்கம் போல சில லட்சாதிபதிகளை உருவாக்கி கொண்டுதான் இருக்கின்றனர்.
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, கையில் ஒரு கோடி.. இதில் யார் முந்துகிறார்கள் என்று போகப் போக பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: