ஞாயிறு, 22 மார்ச், 2020

புனிதப்படுத்துதலில் உள்ள ஆபத்து ... அதன் மறுபக்கம் இழிவு படுத்துதல்

LR Jagadheesan : புனிதப்படுத்தலில் இருக்கும் பேராபத்து புரியாத பகுத்தறிவாளர்களுக்கு இந்த காட்சிகள் சமர்ப்பணம். புனிதம் தனித்தியங்காது. அது தன்னோடு சேர்த்து தனக்கிணையாக “தீட்டு” என்கிற எதிர்நிலை உருவகத்தையும் சேர்த்தே உருவாக்கி வளர்க்கும். ஒன்று தீட்டானால் தான் மற்றது புனிதமாக முடியும். புனிதத்தின் இருப்பே தீட்டில் தான் நிலைகொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுமையிலும் எல்லாவித கருத்தியலிலும்.
எனவே கோரோனாவைக்காட்டி திடீரென நீங்கள் மருத்துவர்களை புனிதர்கள் என்றாக்கினால் அதை மோடிமஸ்தான்கள் வெற்று கைதட்டலால் கைப்பற்றி தமதாக்கிக்கொள்வார்கள். இன்றும் அது தான் நடந்திருக்கிறது. இனியும் அது தான் நடக்கும்.
ஏனெனில் புனிதம் வழிபாட்டையும் மந்தை மனோபாவத்தையும் மட்டுமே வளர்க்கும். அறிவியல் கண்ணோட்டத்தை அது ஒருநாளும் வளர்க்காது. வளர்க்கவும் உதவாது. வளரவும் அனுமதிக்காது. இருப்பதிலேயே மிகப்பெரிய வழிபாட்டை நடத்திக்காட்டுவது ஆட்சியாளர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. மக்களிடம் மந்தை மனோபாவத்தை வளர்க்க புதுப்புது வழிபாட்டு முறைகளை அரசு நினைத்தமாத்திரத்தில் உருவாக்கும். வெற்றிகரமாக நடத்திக்காட்டும்.

கார்கில் போரின் போது இந்தியா நெடுக நடத்தப்பட்ட உயிரிழந்த இராணுவ வீரர் சவப்பெட்டி ஊர்வலங்களில் தொடங்கி இன்று நடந்த நாடளாவிய கைதட்டல், கரண்டிதட்டல் கும்மி வரைக்கான அடிப்படை இலக்கணம் இது தான். ஏற்கனவே பள்ளிகளில் ஆசிரியர்கள் கால்களில் மாணவர்கள் விழுந்து வணங்குவதை சடங்காக மாற்றி பள்ளிகளில் திணித்தவர்கள் மருத்துவர்களுக்காக கைதட்ட மட்டுமல்ல கையெடுத்து கும்பிடும் சடங்கு கூட செய்வார்கள். அதில் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அந்த வழிபாட்டு மனநிலையைத்தான் அவர்கள் வளர்க்க விரும்புகிறார்கள்.
தீண்டக்கூடாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களை ஹரிஜனங்கள் (கடவுளின் பிள்ளைகள்) என்று காந்தி சொன்னபோது அம்பேட்கரும் பெரியாரும் அதை எதிர்த்ததன் அடிப்படை அது தான். 20 ஆம் நூற்றாண்டிலேயே புனிதப்படுதலை எதிர்த்து பகுத்தறிவு அரசியலை பரவலாக பேசிய/வென்றும் காட்டிய தமிழ்மண்ணில் உணவளிப்பதால் விவசாயி கடவுள் என்றொரு தரப்பு இளைஞர்களும் எல்லையில் இருக்கும் இராணுவ வீரர்கள் எல்லைச்சாமி என மற்றொரு இளைஞர்களும் இப்போது கொரோனாவைக்காட்டி மருத்துவர்கள் இன்னும் பெரிய கடவுள்கள் என்று இன்னொரு தரப்பு இளைஞர்களும் சாமியாடுவதை பார்க்க பரிதாபம் தான் மிஞ்சுகிறது.
விவசாயி, இராணுவத்தினர், மருத்துவர்கள் மீது உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் அவர்களை அரசாங்கம் எப்படி நடத்துகிறது, அந்த துறைகளின் முன்னேற்றம், மேம்பாடு, வளர்ச்சி, ஆய்வுகள், அதில் ஈடுபடுபவர்களின் பணிப்பாதுகாப்பு, வாழ்வாதாரம், வருமானத்தை உறுதி செய்வதற்கான சட்டங்கள், நிதி ஒதுக்கீடுகளில் அரசுகள் என்ன செய்கின்றன என்பதில் கவனம் செலுத்துங்கள். ஆய்வு செய்யிங்கள். கேள்வி கேளுங்கள். விவாதியுங்கள். முக்கியமாக அதற்கு ஆட்சியாளர்களை பொறுப்பாக்குங்கள்.
அதைவிட்டுவிட்டு அவர்களை கடவுள்கள் என்று கையெடுத்து கும்பிடுவது அரசின் பொறுப்பை தட்டிக்கழிக்க மட்டுமே உதவும். வரலாறு நெடுக அரசர்களின் கைகளின் ஆயுதங்களாக மட்டுமே கடவுள்கள் பயன்பட்டு வந்திருக்கிறார்கள். புதுக்கடளர்களின் உருவாக்கமும் அதற்குத்தான் பயன்படும்.
பிகு: அடிப்படை நோய்த்தடுப்பு உபகரணங்கள் இல்லாததால் நோயாளிக்கு சிகிச்சையளிக்க முடியாத சூழலில் இருக்கும் ராமநாதபுர மருத்துவமனைக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் இன்றைய கைதட்டலாலும் கரண்டி தட்டலாலும் என்ன பயன்? மேலும் பெண்களையும் இந்தியாவில் இப்படித்தான் கடவுள் அவதாரங்கள் என்றும் சக்தியின் வடிவங்கள் என்றும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வழிபட்டு வந்திருக்கிறோம். அந்த வழிபாடு பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவியிருக்கிறதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். முடிவெடுக்க முடியாவிட்டால் உங்களுக்கு தெரிந்த பெண்களிடம் கேளுங்கள். அவர்கள் தரக்கூடும் அதற்கான பதிலை

கருத்துகள் இல்லை: