Mano Ganesan : மகிந்த தேசப்பிரிய, என். ஜே.
அபேசேகர, ரத்னஜீவன் ஹூல் ஆகியோராலும், 19ம் திருத்தத்தாலும் நாடு பிழைத்தது. ...(23/03/20) இது ஒரு தேசிய நெருக்கடி!
இதை எதிர்கொள்ள மூன்று முக்கிய விடயங்கள் தேவை. அவை, “இயந்திரம், வளம்,
அதிகாரம்” ஆகியவையாகும். இந்த மூன்றும், ஒரு அரசாங்கத்துக்குதான் இருக்க
முடியும். ஆகவே, அரசாங்கத்தின் பொறுப்பை நானும், ஏனைய எதிரணி நண்பர்களும்,
சமய தலைவர்களும் தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறோம். அபேசேகர, ரத்னஜீவன் ஹூல் ஆகியோராலும், 19ம் திருத்தத்தாலும் நாடு பிழைத்தது. ...(23/03/20) இது ஒரு தேசிய நெருக்கடி!
என்னை பொறுத்தவரையில், கட்சி தலைவர், முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படைகளில், மூன்று மொழிகளிலும் சுட்டிக்காட்டி, மக்களின்
அவலங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு நேரடியாக கொண்டு சென்றுள்ளேன். அதிகாரத்தில் உள்ள பலருடன் தொடர்பு கொண்டு உரையாடியும் வருகிறேன்.
அவர்களிலும் பலர் இந்த கட்டத்திலாவது, எமது கருத்தை உள்வாங்கி உள்ளார்கள். அரசாங்கம், இந்த நெருக்கடியை சரியாக எதிர்கொள்ள தவறி விட்டது என சில அரசாங்க முக்கியஸ்தர்கள் தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒப்புக்கொண்டும் உள்ளார்கள்.
இது அரசியல் செய்யும் நேரமில்லை என நாம் ஒவ்வொருவரும்
நினைக்கிறோம். ஆனால், இதுபற்றிய சில உண்மைகளை நாம் அறிய வேண்டும். அப்போதுதான் இந்த தவறுகள் மீண்டும் நிகழாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.
முதல் கொரோனா தொற்று இலங்கையில் ஜனவரி இறுதி வாரத்தில் ஏற்பட்டது. ஆனால், அப்போதே உலகெங்கும் அதுபற்றிய அபாய சங்கு கணிசமாக ஊதப்பட்டு விட்டது.
பாராளுமன்றம் கலைக்கப்பட முன்னரே, எமது எதிரணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவுகளின் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சபையில் கொரோனா பற்றி எச்சரிக்கை விடுத்தார்.
“விமான நிலையங்களை மூடுவது”, “மருத்துவ நிலையங்களை தயார் படுத்துவது” வரை பல விஷயங்களை உள்ளடக்கிய அவரது உரை ஹன்ட்சார்டில் இருக்கிறது. அதை நான் இங்கே விரைவில் வெளியிடுகிறேன்.
ஆனால், எதிரணியின் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் விடுத்த எச்சரிக்கைகளை அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை. அவர்களது ஒரே நோக்கம், தேர்தலை நடத்தி அதில் “மூன்றில் இரண்டு” பெறுவது என்பதாகவே இருந்தது.
நமது நாட்டில், தேர்தல் வேட்பு மனு நடவடிக்கை, மார்ச் 19 வியாழக்கிழமையன்று முடியும் வரை, கட்சி காரியாலயங்களில் கட்சி அங்கத்தவர்கள் கூடுவதையும், நகர, கிராம தெருக்களில் மக்கள் சுற்றித் திரிவதையும், விமான நிலையங்களில் விமானங்களின் வருகை, செல்கைகளையும், வெளிநாட்டார் மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர் எந்தவித பரிசோதனை-தடைகளின்றி வந்து போவதையும், கண்டும் காணாதது போல் இந்த அரசாங்கம் இருந்தது.
இப்படி வேட்புமனு திகதி முடியும்வரை அரசு இருந்ததன் காரணம் ஏன்? என்ன? என சிறு குழந்தைக்கும் தெரியும்.
இன்று, எமது கட்சி இயந்திரம் மூலம், அறக்கட்டளைகள் மூலம், தனிநபர்கள் மூலம் ஆங்காங்கே பல்வேறு உதவிகளை செய்துக்கொண்டுதான் உள்ளோம். நாளையும், நாளை மறுநாளும் செய்ய இருக்கிறோம்.
ஆனால், நாடு முழுக்க, அனைத்து தேவைகளையும் எதிர்கொள்ள அரசாங்கத்தால் மட்டுமே முடியும். அரசாங்கத்துக்குதான் அதற்கான வலு இருக்கிறது. இதுவும் சிறு குழந்தைக்கும் விளங்கும்.
“உடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள்” என ஆரம்பத்திலேயே அறிவுறுத்தல்கள் விடுத்தாலும், அவை அனைத்தையும், வேட்பு மனு காலம் முடியும்வரை அரசியல் இலாப நோக்கில் கணக்கில் எடுக்காமல் இருந்தது மட்டுமல்ல, “முழு தேர்தல் நடவடிக்கைகளையும் ஒத்தி வையுங்கள்” என்று நாம் சொன்னபோது “தேர்தலை சந்திக்க பயந்து எதிர்க்கட்சி இப்படி சொல்கிறது”, என்றும் அரசின் முக்கியஸ்தர்கள் சிலர் சொன்னார்கள்.
இதில் அரச இளவரசர் தனது டுவீட்டர் தளத்தில் “தேர்தலை கண்டு எதிர்க்கட்சி பயப்படுகிறது” என்று கூறி விட்டு உடன் அழித்தும் விட்டார்.
அடுத்த ஆகஸ்ட் வரை காலம் இருந்தும் பாராளுமன்றத்தை கலைத்தது, ஜனாதிபதி கோடாபய! வேட்பு மனு தினத்தை அறிவித்தது, ஜனாதிபதி கோடாபய! அதை ஒத்திவைக்க மறுத்தது, ஜனாதிபதி கோடாபய! இந்த அதிகாரங்கள், எதுவும் தேர்தல் ஆணையகத்துக்கு இல்லை.
இன்று வேட்பு மனுவுக்கு பிறகு, தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம், எங்களது 19ம் திருத்தம் மூலம், சுயாதீன தேர்தல் ஆணையகத்துக்கு கிடைத்துள்ளதால், நாடு பிழைத்தது. ஆணையக தலைவர் மகிந்த தேசப்பிரிய, அங்கத்தவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி என். ஜே. அபேசேகர, பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் ஆகியோரால்தான் நாடு பிழைத்தது.
இல்லாவிட்டால், இந்த அரசாங்கம் இந்த கொரோனா களேபரத்திலும் எதிர்கட்சிகளை வீடுகளில் முடக்கி வைத்து விட்டு, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு, அதை பயன்படுத்தி, “மூன்றில் இரண்டு” எனக்கூவிக்கொண்டு தேர்தலுக்கு போயிருப்பார்கள்.
இதில், "புலிகளை வென்ற எமக்கு கொரோனா ஒரு பொருட்டில்லை" என்ற, வெடிமருந்து ஆயுதங்கள் வேறு, கிருமி ஆயுதங்கள் வேறு என்ற அறிவற்ற வாய் சவடால் வேறு!
உண்மையில் கொரோனா பாதிப்பு என்பது நோய் என்பது மட்டுமல்ல, நோயுராத மக்களும் இன்று பயந்து.., தினசரி வருமானத்தில் வாழும் மக்கள் தொழில் இழந்து, உணவு இழந்து, வருமானம் இழந்து திக்கற்று நிற்க.., சுற்றுலா, மூலப்பொருள் இறக்குமதி, உற்பத்தி ஏற்றுமதி, வங்கி, அரச-தனியார் தொழிற்சாலைகள், விவசாயம் என பல பெரிய சிறிய தொழில்ளை சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்று சைனா கொரோனாவிலிருந்து மீண்டு எழும்போது, முன்னெச்சரிக்கை இல்லாததால், நாம் உள்ளே போகிறோம்.
இன்று, கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி முடிவெடுத்து, பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி முடிவெடுத்து, தேசிய நெருக்கடியை எதிர்கொள்ளும் அதிகாரம் ஜனாதிபதி கோடாபயவுக்குதான் இருக்கிறது. அது தேர்தல் ஆணையகத்துக்கு இல்லை.
எனவே, இன்று இது அரசியல் செய்யும் நேரமில்லை என்பதை உணர்ந்து, நாம் அனைவரும் நாட்டை காப்போம்! இந்த அரசு எடுக்கும் நல்ல நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்! ஆனால், “நடந்தவை என்ன” என்ற உண்மைகளை அறிந்திருப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக