ஞாயிறு, 22 மார்ச், 2020

சிறுமி பாலியல் வன்முறை கொலை .. மாடியிலிருந்து வீசிய கொடியவன் கைது !

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து மாடியிலிருந்து வீசிய நபர் கைது! மின்னம்பலம் :  நிர்பயா குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட அதே நாளில் சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து மாடியிலிருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுசென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனி பகுதியில் 10ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். கட்டிடத் தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். சுரேஷின் நடத்தை பிடிக்காமல் அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இவரது வீட்டுக்கு அருகில் ராஜஸ்தானைச் சேர்ந்த தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. 5ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி நேற்று, பெற்றோர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இரவில் கழிவறைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வராததால், தங்களது குடியிருப்பு பகுதி முழுவதும் அக்குழந்தையின் பெற்றோர் தேடியுள்ளனர்.

சிறுமியைக் காணாததால் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த குடியிருப்பு முழுவதும் சிறுமியைத் தேடியுள்ளனர்.
அப்போது வீட்டின் பின்பக்கத்தில் சிறுமி பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடும் நிலையில் மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
இந்த நிலையில் சிறுமியின் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சுரேஷ் சிறுமியை வீட்டின் மாடிக்குத் தூக்கிச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்போது சிறுமி அழுது சத்தம் போடவே, மூன்றாவது மாடியிலிருந்து சிறுமியைத் தூக்கி வீசிவிட்டு தனது வீட்டுக்குச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சிறுமிகள் தங்களது வீட்டின் அருகிலேயே வசிக்கும் நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. போரூருக்கு அருகில் உள்ள மதனந்தபுரத்தை சேர்ந்த சிறுமி ஹாசினி 2018ல் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த தஷ்வந்த் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: