செவ்வாய், 24 மார்ச், 2020

24ஆம் தேதி) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு .. தமிழக அரசின் 23 உத்தரவுகள்

டிஜிபி திரிபாதியின் 23 கட்டளைகள்! மின்னம்பலம் :  கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நாளை(மார்ச் 24ஆம் தேதி) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவினைப் பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு .. மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலையில் சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை நிலைநாட்ட வேண்டிய கடமை காவல்துறையின் கைகளில் இருக்கிறது. அதேசமயம் காவல்துறையினரும் தங்களை கொரோனா வைரஸிடமிருந்து தற்காத்துக்கொள்ள 23 கட்டளைகளை தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் கொடுத்திருக்கிறார்.
1)காவல் துறை அலுவலகத்துக்குள் மக்களை அனுமதிப்பதற்கு முன்பு வெப்பம் கண்டறியும் கருவி கொண்டு சோதிப்பதுடன், இதர முன்னெச்சரிக்கை சோதனைகளையும் கண்டிப்பாக மேற்கொள்ளவேண்டும்.
2)அனைத்து நுழைவு வாயில்களிலும் சேனிடைசர் உட்பட கைகளை சுத்தப்படுத்தும் பொருட்களை வைத்து, உள்ளே வருபவர்களின் கைகள் சுத்தமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும்.
3)காவல் துறை அலுவலகத்துக்குள் வருபவர்கள் நிர்ணயிக்கப்பட்ட காற்றோட்டமான இடத்தில் மட்டுமே இருப்பதை உறுதி செய்யவேண்டும். அடைக்கப்பட்டு குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட அறைகளுக்குள் யாரையும் அனுமதிக்கக்கூடாது.
4)சளி மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறியுடன் அலுவலகத்துக்குள் யாரையும் அனுமதிக்கக்கூடாது.

5)பணிபுரியும் இடத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள டேபிள், மேசை, டெலிஃபோன், கதவுகளின் கைப்பிடி ஆகியவற்றை சீரான இடைவெளியில் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தவேண்டும்.
6)அவசர தேவை ஏற்படும் வரை அதிகளவில் ஒன்று கூடவோ, மீட்டிங்குகளை நடத்தவோ கூடாது.
7)அலுவலக வேலைகளை முடிந்தவரையில் மின்னஞ்சல் மூலமாக மேற்கொள்ளுங்கள். அநாவசியமாக காகித ஆவணங்களைப் பயன்படுத்தவேண்டாம்.
8)அலுவலகத்துக்கு வரும் தபால்களை அலுவலக வாயிலிலேயே பெற்றுக்கொண்டு, இங்கிருந்து அனுப்பவேண்டியவற்றையும் வாசலிலேயே வைத்து கொடுத்தனுப்பவும்.
9)ஊரக நிர்வாகத்தை அவ்வப்போது தொடர்புகொண்டு, அலுவலக இடம் மற்றும் வாகனங்கள் தொடர்ந்து சுத்தப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும்.
10)வேலை செய்யும் இடங்கள் மற்றும் கை கழுவும் இடங்களை சீரான இடைவெளியில் சுத்தம் செய்து, அங்கு ஹேண்ட் சேனிடைசர்கள் மற்றும் திரவ நிலையிலான சோப்புகள் இருப்பதை உறுதி செய்யவும்.
11)கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் போஸ்டர்கள் அலுவலகம் முழுவதும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒட்டப்படவேண்டும். தும்மல், இருமல் வரும்போது முகத்தை எப்படி மூடிக்கொள்வது என்று சொல்லித்தரவேண்டும்.
12)கேண்டீன் இயங்கும் பட்சத்தில், மதிய உணவு இடைவேளையின்போது ஒரே இடத்தில் அதிக நபர்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கவேண்டும். சாப்பிடும் இடங்கள் சீரான இடைவெளியில் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
13)ஆண்கள் விடுதி, உடற்பயிற்சி நிலையம், விளையாட்டுத் திடல் ஆகிய அனைத்தும் அடுத்த உத்தரவு வரும் வரை மூடிவைக்கப்படவேண்டும்.
14)சமூக நலக்கூடம், திருமண மண்டபம் ஆகியவை மூடப்படவேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை அதிகளவில் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
15)கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகியவற்றை போலீஸ் குழுக்களிடையே தெரியப்படுத்த வேண்டும்.
16)மாவட்ட ரிசர்வ் அலுவலகங்கள் மற்றும் பட்டாலியன்களில் வைரஸ் பரவாமல் தடுக்க செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.
17)காவல்துறை மருத்துவமனைகள் எப்போதும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். அவசர நிலையின்போது தேவைப்படக்கூடிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் எப்போதும் மருத்துவமனையில் இருப்பதையும், அவர்களை தொடர்பு கொள்வதற்கான எண்ணையும் பதிவு செய்வதையும் உறுதி செய்யவும். சுகாதாரத் துறையின் அனைத்து அறிவிப்புகளையும் அப்டேட்டாக மருத்துவர்கள் அறிந்து வைத்திருந்து, போலீஸாருக்குத் தேவையானபோது தெரிவித்து உதவ வேண்டும்.
18)யூனிட் ஆஃபீசர்கள் கொரோனா ஹெல்ப்லைன் எண்களான IO4, 044-29510400/S0O,044-24300300,
1800120555550, 8754448477 ஆகியவற்றை அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் தெரியப்படுத்தலாம். இவற்றை மாநில கட்டுப்பாட்டு நிலையத்தில் சுகாதாரத் துறையின் ஊழியர் 24 மணிநேரமும் கவனிப்பார்.
19)ஒவ்வொரு மாவட்ட தலைமை மருத்துவர் மற்றும் உள் மருத்துவர்களின் தொடர்பு எண்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தெரிவிக்கப்படவேண்டும்.
20)யாருக்காவது கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாசிடிவ் எனத் தெரியவந்தால், அம்மாவட்ட சுகாதாரத் துறையினரைத் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தரவேண்டும்.
21)பணியை முடிக்கும் அனைத்துக் காவலர்களும், அவர்களது ஆடைகள் சரியாக சுத்தப்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும்.
22)அனைத்து போலீஸ் வாகனங்களும் சீரான இடைவெளியில் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
23)மேலே கூறப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் அனைத்து நிலை அலுவலகங்களிலும் பின்பற்றி தமிழ்நாடு காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை: