புதன், 25 மார்ச், 2020

பினராயியே 20,000கோடி ஒதுக்கும்போது.. இந்தியா முழுமைக்கும்.. மோடி அறிவித்த 15,000கோடி எப்படி போதும்?

Hemavandhana - tamil.oneindia.com ;  சென்னை: பக்கத்து மாநிலம் கேரளாவில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கொரோனா தொற்று பாதிப்புக்காக பினராயி விஜயன் ஒதுக்கியுள்ளார்.. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சேர்த்து மருத்துவ வசதிகளை மேம்படுத்த வெறும் 15 ஆயிரம் கோடியைதான் பிரதமர் ஒதுக்கி உள்ளார். இது எப்படி நமக்கு போதுமானதாக இருக்கும்? பிரதமர் அறிவித்த 15 ஆயிரம் கோடியை வைத்து கொண்டு என்ன செய்வது? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. 
 4 நாட்களுக்கு முன்பு திருமாவளவன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. "இந்தியாவைப் போலவே வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் கனடா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் இதேபோல் டிவியில் உரையாற்றும் போதும் நாட்டு மக்களுக்கு அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளையும் விவரித்தார்கள். அதற்காக அரசு நிதி ஒதுக்கியுள்ள தொகை எவ்வளவு என்பதைத் தெரிவித்துள்ளார்கள். ஆனால் எந்த ஒரு அறிவிப்பையும் நம்முடைய பிரதமர் மோடி செய்யவில்லை... கேரள முதல்வர் பினராயி விஜயன் வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து ஒரு அவசரக் கால திட்டத்தை அறிவித்திருக்கிறார்.
இதையெல்லாம் செய்யாமல் மக்கள் ஊரடங்கு உத்தரவு போல் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? நம்முடைய பிரதமரின் பேச்சில் ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவுமில்லை. மோடி அவர்களே, நீங்கள் ஒரு முறை கேரள முதல்வரிடம் பாடம் படித்து வாருங்கள். அவர் எப்படிக் கையாண்டு கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும்" என்று கேள்வி எழுப்பியிருந்தார். 
இதைதான் பிரகாஷ்ராஜும் தெரிவித்திருந்தார்.. "கேரள முதல்வர் பினராயி விஜயன் நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். கொரோனோவுக்கு எதிராக நல்ல திட்டங்களை வகுத்துள்ளார். பாரதப் பிரதமர் மோடி நரேந்திர மோடி அவர்கள் ஏன் கேரள முதல்வர் பினராயி விஜயனை போல் செயல்பட கூடாது என்று கேட்டிருந்தார். பினராயிடம் பாடம் படியுங்கள் மோடிஜி என்று இவர்கள் சொல்ல வந்தது மத்திய அரசு ஒதுக்கும் நிதியுதவியை பற்றிதான்! 
பலரும் எதிர்பார்த்த இந்த நிதியுதவியைதான் பிரதமர் நேற்றிரவு அறிவித்தார்.. எப்போதோ அறிவிக்க வேண்டியதை இப்போதாவது அறிவித்தாரே என்ற நிம்மதி வந்துள்ளது.. ஆனால், மருத்துவ வசதிகளை மேம்படுத்த ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் 15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளார்.. யானை பசிக்கு சோளப்பொறி போல இந்த நிதி உள்ளது.. இந்தியா முழுவதும் ரூ 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
 இந்த நிதியானது கொரோனா சோதனை வசதிகள், தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள், ஐசியுக்கள், செயற்கை சுவாசங்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி ஆகியவற்றுக்காக செலவிடப்படும் என்றும் பிரதமர் தெரிவித்திருந்தார்.. ஆனால் இந்த 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு என்பது நமக்கு போதுமானதாக இருக்காது.. நாடு முழுவதும் உள்ள டாக்டர்களுக்கு மாஸ்க், பாதுகாப்பு ஆடைகூட பெருமளவு கிடைப்பதில்லை என்ற பிரச்சனை உள்ளது.. அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் மாநில அரசுகள் உள்ளன.. அந்த வகையில் மருத்துவ மேட்பாடு பணிக்கு 15 ஆயிரம் கோடி என்ற அறிவிப்பு போதுமானதாக இருக்காது என்றே சொல்கிறார்கள். 
சின்ன மாநிலமான கேரளாவே 20 ஆயிரம் கோடி ரூபாயை தங்களுக்கு ஒதுக்கும்போது, இவ்வளவு பெரிய நாடு, ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் சேர்த்து 15 ஆயிரம் கோடி தந்தால் எப்படி போதுமானதாக இருக்கும்? மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய மான்ய நிதியே வந்து சேரவில்லை என்று சொல்லும்போது, இப்படி ஒரு நெருக்கடி நேரத்திலும் நிதி விஷயத்தில் கணக்கு பார்ப்பது சரியா? பொருளாதாரத்தைவிட உயிர்தான் முக்கியம் என்று சொல்லும் பிரதமர் அந்த உயிரை காப்பாற்றுவதற்கான போதுமான நிதியை ஒதுக்கியிருக்க வேணாமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 அது மட்டுமல்ல... இப்போது ஒரு புதிய குழப்பமும் எழுந்துள்ளது.. பான்கார்டு - ஆதார் இணைப்புக்கு கால அவகாசம் அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் சொல்கிறார்.. ஆனால் பிரதமர் வீட்டில் இருப்பது அவசியம் என்று மட்டும் சொல்கிறார்.. ஒருநாள் வீட்டில் இருந்ததற்கே வாழ்வாதாரத்துக்கு என்ன வழி என்று கேள்வி எழுப்பப்பட்ட  நிலையில், இப்போது 21 நாட்களுக்கு என்ன வழி என்பது அறிவிக்கப்படவில்லை. 
சின்ன மாநிலமான கேரளாவே 20 ஆயிரம் கோடி ஒதுக்கிய நிலையில் இந்தியா முழுமைக்கும் இதை விட பல மடங்கு நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. ஆனால் பிரதமர் வெறும் 15,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. எனினும் இந்த நிதி ஒதுக்கீட்டை முதல்கட்டமாகவே நாம் எடுத்து கொள்ளலாம்.. இதுதான் ஒட்டுமொத்த மொத்த நிதி என்று பிரதமர் உறுதியாக சொல்லவில்லை.. அந்த வகையில் மருத்துவ மேட்பாட்டுக்கு மேலும் சில நிதி ஒதுக்கீடு சம்பந்தமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது!

கருத்துகள் இல்லை: